Contact/ தொடர்பு கொள்க

சொல்வனம் முப்பத்திரண்டு - I

சொல்வனம் முப்பத்து இரண்டில்  ஆக்கங்கள் என்று பார்த்தால் பதினொன்று வந்திருக்கிறது- ஆனால் அருண் நரசிம்மனின் ராகம் தானம் பல்லவியைக் காணவில்லை என்பது ஒரு குறைதான்.அழகான பார்சலோனா கடலை பார்வையிட்டபடி ராம்ப்ளாஸ் என்ற செழிப்பான பகுதிக்குள் அப்பாவும் மகனும் நுழைந்தனர். அங்கிருந்த ஒரு வாத்தியக்கருவி கடைக்குள் அடிவைத்த அச்சிறுவன் வேறொரு உலகுக்கு கால இயந்திரத்தில் ஏறியது போல் மாய உலகினுள் நுழைந்தான். அக்கடையில் பழைய இசைக்குறிப்புகள் தொகுப்புகளாகக் குவிந்து கிடந்தன. தன் ஊரில் பார்த்திராத இசைக்குறிப்புகளை பெயர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை என இலக்கின்றி தேடினான். ஆர்வமிகுதியால் அக்கூடையைக் கிளறும் போது செபாஸ்டியன் பாக் அமைத்த `வயலின்செல்லோ கருவிக்கான ஆறு பகுதிகள்` (Six Sonatas or Suites for ViolinCello by Sebastian Bach) இசைக்குறிப்பு சிறுவனின் கைகளில் சிக்கியது.
இசை உலகின் உன்னதமான காலம் அந்நிமிடத்தில் தொடங்கியது. துறைமுக மரங்களில் மோதிய அலைகள் ஆங்காங்கு அப்படியே நின்றன; பல நிகழ்வுகள் தங்கள் இயல்பிலிருந்து நழுவின. தேவதூதன் பிறந்த செய்தியைத் தெரிவித்த நட்சத்திரங்கள் போல உலகின் மூலைகளில் இருந்த பல இசை ஆர்வலர்கள் மனதில் மணி அடித்தது
என்று துவங்குகிறார் ரா கிரிதரன் தனது பாப்லோ கசல்ஸ் கட்டுரையை.

எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் உண்மையைச் சொல்கிறேன்- கதை எழுதுவது கட்டுரை எழுதுவது போல் எளிதல்ல- அதிலும் கட்டுரையை கதை போல் எழுதுவது மிகக் கடினம். ஆனால் முதல் வாக்கியத்தில் தொடங்கி. திரைப்படத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிற மாதிரி பாப்லோ கசல்ஸ் பற்றி எழுதி இருக்கிறார் ரா கிரிதரன். இசை பற்றி கொஞ்ச நஞ்ச அறிவுகூட இல்லாதவர்களுக்கும், "யார் இந்த கசல்ஸ்? என்ன சாதித்து விட்டார்?" என்று மேற்கொண்டு படிக்கிற ஆர்வம் எழுகிற மாதிரி எழுதுகிறார்.
ஆர்ப்பரிக்கும் கடலலைக்கு முன் அவர் நின்றுகொண்டிருந்தார். அலை ஓசையைத் தாண்டி நீலக்கடல் ஆழத்தின் கனத்த ஓலம் மட்டும் அவருக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தது. செல்லோவின் கீழ் சுருதி ஒலி நினைவுக்கு வந்தது. தன் பங்களா இருந்த பகுதியைத் திரும்பிப் பார்த்தார். ஓங்காரமான செல்லோ இசை மூலம் அந்நகரத்தின் ஆழ்ந்த மெளனத்தைக் கலைக்க முற்படலாம். ஆனாலும், கடலலையை மீறி எதுவும் செய்ய முடியாது என்பது நிச்சயம். எங்கோ வெடித்த துப்பாக்கிச் சத்தம் நகரத்தை மேலும் மெளனமாக்கியது. நகரை அரவணைத்த குரூரமான பேரமைதி கலைந்து மக்களிடையே குதூகலம் திரும்பும்போது செல்லோவை இசைத்தால் போதுமெனத் தான் எடுத்த முடிவின் தீவிரம் முன்னைவிட அதிகமானது.
-ரா கிரிதரன் - பாப்லோ கசல்ஸ்
இந்த சொல்வனம் இதழில் எனக்குப் பிடித்த வரி இதுதான்: "தனிப்பட்ட வலைப்பதிவுகளுக்கும் இணையப் பத்திரிகைக்கும் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு என்றே நம்புகிறேன்."- இது ஹரன் பிரசன்னா எழுதிய எதிர்வினையில் இருக்கிறது.

ஒருவர் எழுதியது இணையப் பத்திரிக்கையில் வெளியாகிறது என்றால், என்னதான் அது அவரது தனிக் கருத்து என்று சொன்னாலும், அந்தக் கருத்துக்கு ஒரு நிறுவனம் சார்ந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது போன்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

நான் கூகுள் ரீடரே கதியென்று கிடக்கிறவன். அதில் வலை தளங்களை வெவ்வேறு போல்டரில், அவற்றில் தொனி மற்றும் மையக் கருத்துக்கேற்ப, சேர்த்து வைத்திருக்கிறேன். அந்த போல்டர் ஒவ்வொன்றும் அவற்றின் உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட சார்பு உடையதாக (நகைச்சுவை, திரைப்படம், தீவிர இலக்கியம், மேம்போக்கு இலக்கியம், செய்தி, பைத்தியக்காரர்கள், வலை உலகம் என்று) இருக்கிற காரணத்தால்  வாரம் ஒரு முறை படிக்கிறபோது அவை இணைய இதழை ஒத்தனவாக  இருக்குமா? இருக்காது என்பதற்கு முக்கிய காரணம், அவற்றுக்கு ஒரு பொதுப்படையான பார்வை இல்லை என்பது மட்டுமல்லாமல் ஒரு குழுவினர் இணைந்து தருகிற நிறுவன அங்கீகாரம் கிடையாது என்பதும்தான்.

தனி நபர்களுக்கு எழுதச் சுதந்திரம் கொடுக்கிற அதே வேளை, அவர்களிடமிருந்து ஒரு குறைந்தபட்ச எழுத்துத் திறன், எழுது பொருளின் பொருத்தம், எல்லாவற்றுக்கும் மேலாக நம் நோக்கங்களுக்கு முரண்படாத கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பது குறித்த பிரக்ஞை இவற்றை எந்த இதழும் எதிர்பார்க்கும். அப்படி இல்லாவிட்டால் ஒரு இதழைப் படித்த திருப்தி கிடைக்காது: பார்வையின் நீட்சியில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அதன் மையத்தில் ஒரு ஒழுங்கு இருப்பதுதான் பத்திரிக்கைகளின் இருப்புக்கான குறைந்த பட்ச அடையாளம். அந்த வகையில் ஒரு தனி நபரின் பதிவு, கட்டுரை என்ற கிடைகளை  மீறி, அது ஒரு இதழில் வெளியாகிறபோது,  குழு என்று சொல்லக் கூடாது, ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வை மூலம் தெரியவரும் காட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது என்று நினைக்கிறேன்- அப்படி இல்லாவிட்டால், வலைதளங்களில் நான் காண்கிற சுவையான பதிவுகளைப் பற்றி எழுதாமல் சொல்வனத்தில் வருகிற கட்டுரைகள் என்று மதிப்பு கொடுத்து நான் ஏன் எழுதப் போகிறேன்? நாலு பேர் அங்கீகரித்துப் பதித்த படைப்பு என்ற அடையாளம் இருப்பதனால்தானே!

ஆனால் நான் முன் சொன்னது நாஞ்சில் நாடன் போன்ற நிறுவனர்களுக்குப் பொருந்தாது- அவர் எங்கு எழுதினாலும் தன் மனதுக்குப் பட்டபடிதான் எழுதுவார் என்று நமக்குத் தெரியும். ஆனால் அருணகிரி போன்றவர்களின் எழுத்தைப் படிக்கும்போது நாம் அவரது தனிக்கருத்தையும் மீறி அதை சொல்வனத்தின் குரலாய்தான் கேட்கிறோம் என்று தோன்றுகிறது.நாஞ்சில் நாடன் என்று சொன்னேனே, அவர் இந்த இதழில் செங்கோட்டை ஆவுடை அக்காளின் பாடல்கள் குறித்து எழுதி இருக்கிறார்.யதேச்சையாக இந்த இதழ் வெளிவருவதற்கு ஓரிரு நாட்கள் முன்   பாவண்ணனும், அவர் எழுதியதன் எதிர்வினையாக கல்பனா சேக்கிழார் தனது வலைமனையிலும் இவரைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். மூன்றுமே தரமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. நாஞ்சில் நாடன், பெருமளவில் ஆவுடை அக்காவின் பாடல்களுக்கும் பாரதி பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை மெச்சி எழுதி இருக்கிறார். பாவண்ணனது கட்டுரையில் அதோடுகூட அவரது ஆன்மிகம் குறித்த விவாதமும் இருக்கிறது. பாவண்ணன்,
பெண் கவிஞர்களை வரிசைப்படுத்தும் ஒவ்வொரு வரும் காக்கைப்பாடினியாரிடம் தொடங்கி, ஒளவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் வரைக்கும் வந்து, பிறகு ஒரே தாவலில் நவீன கவிதையாசிரியர்களிடம் கொண்டுவந்து முடிப்பதுதான் வழக்கம். அது எவ்வளவு பிழையானது என்பதுதான் அக்காவின் பாடல்களைப் படித்துமுடித்ததும் தோன்றிய முதல் கருத்து. அக்காவின் பெயரை இணைத்துக்கொள்ளாமல் இனிமேல் எந்த இலக்கிய வரலாறும் எழுதப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். இலக்கிய வரலாற்றில் தேடிப் பார்த்தால் இன்னும் பல அக்காக்கள் கிடைக்கக்கூடும். அவர்களைக் கண்டடைவது நம் கடமை
என்று எழுதுகிறார். நாஞ்சில் நாடனும் ஆவுடை அக்காளை உயர்த்தியே எழுதுகிறார்-
ஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஆவுடையக்காள் பாடல்களை திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட அந்தணப் பெண்டுகள் பூஜாகாலத்தில் பாராயணமாகவும், கல்யாண காலங்களிலும் பாடினார்கள் என்றும் தெரிகிறது
.ரமணர், மதுரைப் பக்கத்தில் ஆவுடை அம்மாவின் பாடல்கள் மிகப் பிரபலமாக இருந்தன என்று சொல்லியிருப்பதாகப் படித்த நினைவு.

இந்தக் கட்டுரைகளில் ஆவுடை அக்காளின் குரு திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் என்பது தெரியப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். எனக்கும் அது தெரிந்திருக்காது: ஆண்டுதோறும் என் நண்பரொருவர் அவரது கிராமத்தில் ஐயாவாளுக்கு ஆராதனையோ  எதுவோ செய்யும்போது அதையொட்டி இருப்பத்தைந்து ரூபாய் வசூலிப்பார். ஒரு தடவை, கையில் காசு இல்லாததாலோ என்னவோ, அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தராமல் விட்டு விட்டேன். அதற்கப்புறம் அவர் என்னிடம் கேட்கவே இல்லை.


ச. திருமலைராஜனின் விக்கிலீக்சை எந்த இதழில் எங்கு வெளி வந்தக் கட்டுரையோடும் ஒப்பிட்டு சிறப்பிக்கலாம். கோர்வையாக, தெளிவாக, ஆர்ப்பாட்டமில்லாத நடையில் சுவாரசியமாக விஷயத்தை சொல்கிறார். இதைப் படிக்கும் எவருக்கும், விக்கிலீக்ஸ் குறித்து பிரமிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனக்கு இந்தக் கட்டுரையில் ஒரே ஒரு குறைதான்=
இதுவரை விக்கிலீக் 5 லட்சம் பக்கங்களிலான பல்வேறு ஊழல்களின் உண்மைகளைத் தன் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. கென்யாவில் நடந்த படுகொலை பற்றிய உண்மைகள், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் சிவிலியன் மக்களைத் தவறுதலாகக் கொன்ற ஹெலிகாப்டர் தாக்குதல், அமெரிக்க துணைஜனாதிபதியாகப் போட்டியிட்டு ரஷ்யா தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் என்பதால் தனக்கு வெளியுறவுத் துறை அறிவு இருக்கும் என்று உளறிய சாராப் பெல்லனின் தனி யாகூ இமெயில்கள், ஐரோப்பாவின் சில வங்கி ஊழல்கள், க்ளைமேட் சேஞ்ச் அமைப்பில் நடந்த ஊழல்கள், செப்டம்பர் 11 தாக்குதலின் பொழுது விமானங்களில் இறந்தவர்கள் செல்ஃபோனில் பரிமாறிய பேச்சுக்கள் ஆகியவற்றை விக்கிலீக் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
என்று திருமலைராஜன் எழுதுகிறார். ஆனால் விக்கிலீக்ஸ் கிளைமேட் சேன்ஜ் அமைப்பில் நடந்த ஊழல்கள் என்று சில ஈ மெயில்களை வெளியிட்டதே, அது பரபரப்பை உண்டாக்கியதே அன்றி எந்த ஊழலையும் நிருபிக்கவில்லை- இது குறித்த சுட்டி இங்கே.  அந்த ஈ மெயில்களில் என்னதான் இருந்தது என்ற விவரங்கள் இங்கே.

விக்கிலீக்சின் வீக்னஸ் க்ளைமேட்கேட் விவகாரத்தில் வெளிச்சமாகியது- பூமி வெப்பமாகிக் கொண்டு வருகிறது என்று சொன்ன விஞ்ஞானிகளின் இமெயில்களை ஹாக் செய்து, அதிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துகளை விக்கிலீக்கில் பதித்தார்கள்.

பொதுவாக, ஒரு விஷயத்தைக் குழுவாகப் பேசும்போது, எதிர்த்தரப்பினரை எப்படி ஜெயிக்கலாம் என்ற கோணத்தில்தான் பேசுவோம்: சில உண்மைகளை மறைக்கலாம் என்று சொல்வோம், சில ஆதாரங்களை 'ஹைலைட்' பண்ணலாம் என்று சொல்வோம்- பொதுவாக ஒன்று சொல்லலாம், நம் இமேயில்களின் ஆதாரம்  கொண்டு  நம்மை எடை போட்டால் நம்மில் எவரும் நம்மை நேர்மையானவராகக் காட்டிக் கொள்ள  முடியாது. கிளைமேட்கேட்  விவகாரத்தில் அதுதான் நடந்தது- அறிவியல் ஆதாரங்கள் இல்லாத நிலையில், இமேயில்களின் அடிப்படையில் அந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் ட்ரௌசரை உருவி அவர்களை அசிங்கப்படுத்தி அவர்களது நம்பகத்தன்மையைக் குலைக்கும் முயற்சிக்கு விக்கிலீக்ஸ் பயன்பட்டது- அவ்வளவுதான்.  கடைசியில் சதி /ஊழல் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றுதான் முடிவானது.

திருமலைராஜனின் கட்டுரையிலேயே, விக்கிலீக்ஸ் பல உண்மைகளை அம்பலப்படுத்தி விட்டது என்று சொல்கிறார்- ஆனால், அதனால் ஒரு விளைவும் இல்லை என்பதுதான் நிஜம். அதற்கு அப்புறம்தான், பாகிஸ்தானில் வெள்ளம் வந்து அது பயங்கர இழப்பீட்டை சந்தித்த நிலையில், இந்தியா அவர்களுக்கு பண உதவி செய்யத் தானாக முன்வந்தது; பாகிஸ்தான் அதை வாங்கிக் கொள்ள மறுத்து, அமேரிக்கா அண்ணன் வாங்கிக் கொள்ளச் சொல்லி கையை முறுக்கிய நிலையில் வேண்டா வெறுப்பாகப் பெற்றுக்  கொண்டு, "என்ன செய்வது, இந்தியா கொடுக்கிற காசை வாங்க  மறுத்தால் நமக்கு இந்தியாவோடு நட்புறவு கொண்டாட ஆசை இல்லை என்று உலக நாடுகள் முடிவு பண்ணி விடும்," என்று வெளிப்படையாகவே புலம்பவும் செய்தது!

ஆனால் விக்கிலீக்ஸ் அசாத்திய சாதனை, அதன் நிறுவனர்  அஸ்ஸாஞ்சே  பலவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாத தைரியசாலி என்பதை மறுப்பதற்கில்லை. அவர் கொடுத்த டெட் டாக் இங்கே- 
தற்போது வெளிவந்திருக்கிற விக்கிலீக்ஸ் ஆவணங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட வீடியோ பாருங்கள்- கண்ணி வெடித் தாக்குதல்கள் நாட்பட நாட்பட அதிகரித்துப்  பரவி, அமேரிக்கா ஆப்கானிஸ்தானில் தோல்விமுகம் காண்பதை எவ்வளவு அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்! இந்த ஒரு ஆதாரம் போதும், அனைத்துக்கும் மேலாக, அமெரிக்காவின் முயற்சிகள் ஆப்கானிஸ்தானில் விழலுக்கிறைத்த நீராக வீண் போவதை அரிய.என்னைப் பொறுத்தவரை, இந்த வீடியோ விக்கிலீக்சின் சாதனை என்று சொல்வேன்- போரென்று வந்தால் மனிதம் செத்துப் போய் விடுகிறது- ஹெலிகாப்டரில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்க வீரர்கள் குருவி சுடுவதுபோல் மனிதர்களைச் சுடுகிறார்கள் பாருங்கள். இந்த  வீடியோ எடுத்தது உட்பட அசாஞ்சே குறித்த விவரங்கள் நியூ யார்க்கரில். இது எல்லாம் திருமலைராஜனின் விக்கிலீக்ஸ் கட்டுரையில் விட்டுப்போனவை என்று சொல்ல மாட்டேன்- இவை அவருக்குத் தேவை இல்லாதவை. விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தி உள்ள ஆவணங்கள், அமெரிக்க அரசின் தவறான கொள்கையை, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை எப்படித் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன என்பதை பாய்ண்ட் பாய்ண்டாக எழுதி இருக்கிறார் அவர். முன்னமேயே சொன்னதுபோல், அவர் சொல்வனத்தில் எழுதி இருக்கிற இந்தக் கட்டுரையை எந்த இதழில் எங்கு வெளி வந்தக் கட்டுரையோடும் ஒப்பிட்டு சிறப்பிக்கலாம்.


இவ்வளவு கஷ்டமான வாத்தியத்தை ஒரு தொன்னூறு வயது முதியவர் எப்படி வாசிக்கிறார் என்று பார்க்கவேண்டும் என்று பெரும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்காகவே அடுத்த ஆகஸ்ட் பதினைந்தன்று அந்த சர்ச்சிற்குச் சென்றேன். தள்ளாடும் வயோதிகத்தில் இருந்த அவரை இருவர் தோள் கொடுத்து நடத்தி வந்து ஆர்கன் முன் அமரச் செய்தனர். உடனே அவர் ஒரு இருபது வயது வாலிபரின் துள்ளலுடன் சற்றும் கூனாது நேராக நிமிர்ந்து சபையை ஒருமுறை திரும்பிப் பார்த்து மோதித்துவிட்டு, அந்த ஆர்கனில் கை (காலும்) வைத்ததுதான் தாமதம், அதுவரை நான் கேட்டிராத ஒரு கம்பீர நாதம் எழுந்தது. அந்த ராட்சத வாத்தியம் ஜல்லிக்கட்டில் அடங்கிய காளை போல அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டது. அந்த ஆர்கனில் ராணுவக்குழு கூட்டு முயற்சியாய் வாசித்தப் பல்வேறு இசை பாகங்களைத் தனி ஒரு மனிதராய் இவர் கால்களாலும் கைகளாலும் ஒரு சேர வாசித்துக் கேட்ட தேசியகீதம் என் மனதுக்கு இனி எப்போதுமே நெருக்கமாக இருக்கப்போகும் ஒன்று
என்று நமது தேசிய கீதம் குறித்த தன் கட்டுரையை முடிக்கிறார் விக்கி. ஆனால் அங்குதான் கட்டுரையே துவங்குகிறது- இதைப் படித்தபின், மீண்டும் முதலிலிருந்து இரண்டாம் முறை படிக்கத் தூண்டுகிறது இவர் எழுதியிருக்கும் விஷயம். இரண்டாம் வாசிப்பு கூடுதல் பொருளும் தருகிறது.

நமது தேசிய கீதத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை (தேசிய கீதத்தையே நினைப்பது இல்லை என்பது வேறு விஷயம்- நான் பள்ளியில் படிக்கிற நாட்களில் திரை அரங்குகளில் படத்தை முடிக்கும் போது திரை விழும் பின்னணியில் அதை இசைப்பார்கள்- ஒரு கடமை உணர்ச்சியின் உந்துதலில் பாட்டு நிற்கும்வரை அசையாமல் இருப்போம். இன்றோ ஜன கண மணவை கடைசியாக எப்போது கேட்டேன் என்பது கூட நினைவிலில்லை!)