Contact/ தொடர்பு கொள்க

சிறுகதையின் வடிவம்...

வில்லியம் ட்ரெவரின் சிறுகதைகள் குறித்தக் கட்டுரையில் ரோனன் மக்டோனால்ட் எழுதுகிறார்-

பெருவாரியான மக்களால் கவனிக்கப்படாத நிலையில் சிறுகதைகள் இருப்பது ஒரு விதத்தில் பொருத்தமானதே. கவனிக்கப்படாத, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, சராசரிகளாகவே இவ்விலக்கியக் கிடையின் கதை மாந்தர் இருக்கின்றனர்.  ஃபோலியோ சொசைட்டிப் பதிப்பின் தன் சிறு முகவுரையில் ஃபிரான்க் ஓ'கானரின் வாதத்தை மேற்கோள் காட்டுகிறார் ட்ரெவர், தன் இயல்பில் நாயகர்கள் இல்லாமல் தனிமை எனும் உணர்வு மேலோங்கிய வடிவே சிறு கதைகளுக்குரியது எனப் பொருள்பட. சிறுகதை தமக்கென்றோர் இடமில்லாதவர்களின், காயப்படக்கூடியவர்களின், தோற்றுப்போன ஊமைகளின், முடக்கப்பட்டக் கனவுலகவாசிகளின் புகல். அத்துனைக்கும் மேலாக அது சொற்களால் விவரிக்கப்படவொண்ணாததை அடைய விழைகிறது. வெளிப்படுத்தவும் பிரதிமைப்படுத்தவும் முரண்டும் சூழல்களை வெளிக்காட்ட, தங்களை இனங்காண இயலாததாலோ அன்றி தங்கள் தேவைகளை சொல்லத் தெரியாததாலோ அலட்சியப்படுத்தப்பட்ட,  ஏளனப்படுத்தப்பட்டு ஏதோவொரு வகையில் நாவெழும்பாத நிலை நிற்கும் பாத்திரங்களை விவரிக்க, தக்கவொரு குறுவடிவம் கொண்டதாக இந்த ஊடகம் அமைந்துள்ளது. பெரும்பாலும், உணர்வுகள் முடங்கிய இக்கையறு நிலையின் ஊடே, வலியுடன் கூடிய வெளிச்சம், சுயம் குறித்தப் பிரக்ஞை வெளிச்சக் கீற்றெனப் புலனாகிறது. சில நேரம், இப்பாத்திரங்களுக்கு சுய தரிசனம் நிகழும் கணம் வாய்க்கிறது: ஆழமில்லாத ஒரு தொடுப்புக்காகத் தன் மனைவியை நீங்கியமை தன்னைக் குடிகாரனாக்கி தனிமை வாழ்விற்குச் சபித்து விட்டது என்று உணர்பவன் ("குழந்தைகளின் அண்மை"), தன் மணவாழ்வு ஒரு புனைவேடம் என்று உணரும் புதிதாய் மணமானப் பெண் ("தெரசாவின் திருமணம்"). வேறு சமயங்களில் இக்குறுகிய வடிவில் காணக்கிடைக்கும் நினைவகலா இல்லாமைகளை வாசகன் தானாய் இட்டு நிரப்ப வேண்டியிருக்கிறது, சிறுகதை வடிவின் திட்டமிடப்பட்ட மௌனம், பாத்திரங்களின் மலட்டு உணர்ச்சிகளோடுத் துல்லியமாய் ஒத்திசைகிறது...."

- Times Literary Supplement, 18.6.2010