Contact/ தொடர்பு கொள்க

ஏன் சொல்வனம்?

இந்த ப்ளாக் ஏறத்தாழ சொல்வனத்துக்காகவே உருவாக்கப்பட்டது என்று சொல்லலாம்.

கடந்த ஒரு வருடமாக, ஏன் அதற்கும் மேல், குட்டிக் குட்டித் துணுக்குகளாக மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நன்னாளன்று நான் அவர்களுக்கு எழுதிய வாசகர் கடிதம் நீண்டு நெடியதாக வளர்ந்திருந்தமையால் அது அங்கு ஒரு கட்டுரையாக உரு மாறியது.

அதில் எனக்கே திருப்தி இல்லை- நீண்ட கட்டுரைகள் எழுதப் பழக வேண்டும் என்ற எண்ணம் வந்தது- அதற்கான பயிற்சிக் களமே இந்த மெகா மரண  மொக்கை. இங்கு சிந்தப்படும் ரத்தத்துக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
--- ---

சொல்வனத்தில் என்னைக் கவர்ந்தது அவர்களிடம் காணப்படுகிற மரபு-நவீனம், தமிழ்- குளோபல் பார்வை என்று இருக்கிற கலவைதான். இந்த மாதிரி இன்னும் பல இதழ்கள் இருந்தால் தமிழில் எழுதுபவர்கள் இன்னும் சிறப்பாய் எழுதக்கூடிய முன்னுதாரணங்கள்/ எண்ணக் கலன்கள்  கிடைக்கும் என்றுத் தோன்றுகிறது.

சொல்வனம்  இன்னும் துணிவாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைக் கொண்டு, குளோபல் தமிழனின் குளோபல்  குரலாக ஒலிக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. நியூ யார்க் டைம்சைப் பாருங்கள் (எல்லாவற்றுக்கும் ந்யூ யார்க் டைம்சைதான் பார்க்கிறது. இது இப்போது மரபாக மாறி விட்டது )- அவர்கள் கானாவில் வாழ்கிற கவிஞனைப் பற்றி எழுதுவார்கள், செனகலில் நிலவும் வறுமை பற்றி எழுதுவார்கள், கொரியாவில் வளரும் தொழில் நுட்பம் பற்றி எழுதுவார்கள், மங்கோலியப் பருவ மழை பற்றி எழுதுவார்கள் (அப்படி ஒன்று இருந்தால்). ஆனால் தமிழில் அரசியலையும், சினிமாவையும், ஐம்பது ஆண்டு கால இலக்கியமும்தான் பேச வேண்டும்.

அமெரிக்கனுக்கு ஒரு நியாயம், தமிழனுக்கு ஒரு நியாயமா? நெஞ்சு கொதிக்கிறது. அதைக் கொஞ்சம் குளிர்விக்கும்  வகையில் சொல்வனம் ஒரு பரந்துபட்ட, அவ்வளவாய் தமிழ்-மையமாய் இல்லாத ஆகக்கூடி ஒரு குளோபல் பார்வை பார்க்கிறார்கள்.

அந்த வகையில், நாடு இன்றைக்கு இருக்கிற நிலையில், ஓரத்தில் நின்று கொண்டு சொல்வனத்துக்காகக் கூவுவது என் கடமைகளில் ஒன்று என்று நினைக்கிறேன்.

 editor@solvanam.com என்ற முகவரிக்கு உங்கள் கருத்துகள், படைப்புகளை அனுப்பலாம்.