Contact/ தொடர்பு கொள்க

யோக வாசிட்டம்- ஆகாசஜன் கதை

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கோடிகள் என்று சொல்வது ஒரு கணக்குக்குத்தான்- காலவெளியின் தோற்றுவாயில் என்று கூட சொல்லலாம், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒரு குக்கிராமத்தில், பிராமண குலத்தில், ஆகாசஜன் என்று ஒருவன் பிறந்தான். அவனது தந்தையின் பெயர் ஆகாசன் என்பதனால்தான் அவன் ஆகாசஜன் என்று பெயரிட்டழைக்கப்படுகிறானேயன்றி, அவனுக்கு இப்பெயரைச் சூட்டுவதற்கோ, வேறு பெயர் கொண்டு அவனை அழைக்காமலிருப்பதற்கோ, காரணங்கள் எதுவும் விசேடமானதாக இல்லை.

அவன் அந்தக் குக்கிராமத்தில் அந்தக் குடும்பத்தில் பிறந்தததற்கும் அதுபோலவே விசேடமானக் காரணங்கள் எதுவும் கிடையாது. உண்மையை அப்பட்டமாக சொல்வதென்றால், அவன் அந்தக் கிராமத்தில், அந்தக் குடும்பத்தில் பிறந்தவனல்லன். அவன் தோன்றியது ஞானாகாசத்தில். அவன் வாழ்ந்தது ஞானாகாசத்தில். அக்காரணத்தால்தானோ என்னவோ, அவனுக்கு அந்தக் குக்கிராமத்தில் வாழ்வதில் வருத்தமொன்றும் தெரியவில்லை. அவன் எப்போதும் நீண்ட, தங்குதடையற்ற மோன நிலையில் தன் நாட்களைக் கழித்து வந்தான்.

அவன் அனைத்து உயிர்களை நோக்கியும் சமபார்வை உடையவனாக இருந்தான். இதை சொல்லி விட்டு, பசுவைப் பார்க்கிற மாதிரிதான் பன்றியையும் பார்த்தான், நாயைப் பார்க்கிற மாதிரிதான் மனிதனையும் பார்த்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?

வேண்டுமானால் நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு இந்த வார்த்தை விளையாட்டுகள் அதி சீக்கிரமாகவே அலுப்பு தட்டி விடுகின்றன.

இவன் இந்தக் குக்கிராமத்தில், மரணமென்பதின்றி தன் பாட்டுக்கு தன் போக்கில் வாழ்ந்து வந்திருந்த வேளையிலே, கால தேவனின் பார்வை இவன் மேல் படலாயிற்று.

இவனைக் கண்ட மறு கணமே கால தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடலாயின . அவற்றில் சில:

"இது என்ன! என்னால் இவனைத் தீண்ட இயலவில்லையே! எத்தனை முயன்றாலும் என்னால் இவன் வரைகளைக் காண இயலாதபடிக்கு இவனது பரிமாணங்கள் விரிந்து கிடக்கின்றனவே! ஒரு பலகாரத்தை விழுங்குகிற மாதிரி இந்த உலகையே விழுங்கி ஏப்பம் விடுகிற எனக்கு இந்த ஆகாசஜன் புதிராக நிற்கிறான்- இவனைக் கட்டுக்குள் கொண்டு வருவது எவ்வண்ணம்! நான் நினைத்தால் இந்தப் படைப்பில் இருக்கிற எதையும் அழிப்பேன். ஆனால் இவன் முன் என் சக்திகள் செல்லுபடியாகாமல் செலவழிகின்றனவே... வாளின் முனை விஷத்தால் மழுங்கிய மாதிரி என் திறன்கள் இவன்கண் மொக்கையாகி விட்டன போல் தெரிகிறது. இருந்தாலும் பரவாயில்லை, முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். இந்த ஆகாசஜன் கதையை எப்பாடு பட்டேனும் முடித்தே தீருவேன்!"

இவ்வண்ணம் தன முயற்சியில் உறுதி  பூண்டவனாக மீண்டும் ஆகாசஜனை நோக்கித் தாக்குதல் தொடுக்கலாயினன் கால தேவன். இம்முறை அவன் தீவிர உறுதி பூண்டிருந்தமையால், தனக்கிருந்த தடைகள் அவ்வளவையும் உடைத்து ஆகாசஜனின் வீட்டுக் கதவுகளைத் தூளாக்கி உள்ளே நுழைந்தான் அவன்.

அத்தனையும் வீணே! ஆகாசஜனின் ஞானாக்கினி அவன் கண்கள் குருடாகும்படிப் பிரகாசித்தது: அதன் மகோன்னத தரிசனத்தைக் கண்ணுற்ற கணமே அவனது உறுதி குலைந்தது. இருந்தாலும் வந்த வேலையை முடிக்காமல் போவதில்லை என்ற முடிவில், முன்னமே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை நோக்கிச் செல்கிற இயந்திரமாய் ஆகாசஜனை நெருங்கினான் கால தேவன்.

தன் ஆயிரம் கைகளால், ஆயிரம் என்ன ஆயிரம், தன் எண்ணற்ற நீண்ட இருகியக் கைகளால் ஆகாசஜனை அணைத்தான் கால தேவன். தன்னால் இயன்ற மட்டும் தன் சக்திகளைத் திரட்டி அவனை இறுக்கி அழிக்க  முயன்றான். தோற்றான். சித்த தேவனே, ஸ்திர புருஷனே, சங்கல்பனே அங்கு வந்து வீற்றிருந்தார்போல ஆடாது அசையாது அமர்ந்திருந்தான் ஆகாசஜன்.

தோற்றாலும் தன் முயற்சியைக் கை விடுவதாய் இல்லை கால தேவன். கொலைக் குற்றங்களில், உயிர் வதையில் தேர்ந்தவனாகிய எம தர்மராஜனிடம் சென்றான் அவன். நடந்ததனைத்தையும் இருந்து கேட்டு விட்டு, யமன் சொல்வான்:

"செயல்களால் உருவானது இந்த உலகம். செயல்களைக் கொண்டே அழியும். ஒருவன் நிகழ்த்திய செயல்களைக் கொண்டுதான் நான் அவனை அழிப்பது வழக்கம்.  நீ ஆகாசஜனின்  செயல்களைக் குறி வை. அவற்றின் விளைவுகளைக் கொண்டு அவனை அழித்து விடலாம்"

உற்சாகமாய் பூமிக்குத் திரும்பினான் காலதேவன். காடு, கரை, கடை, கண்ணி, கோயில்கள், குளங்கள் என்று துவங்கி எட்டு திசைகளில் ஒரு அணுவையும் மிச்சம் வைக்காமல் ஆகாசஜனின் செயல்களைத் தேடி ஓய்ந்தான் அவன். எங்கும் ஆகாசஜனின் தடயம் காணோம்.

திரும்பவும் தன்னிடம் வந்து இந்த தோல்வியை சொன்ன கால தேவனைக் கண் கொட்டாமல் நோக்கினான் யமன், சற்று நேரம். அதன் பின், ஒருவாறு தேற்றம் கொண்டவனாக, கால தேவனை நோக்கிப் புன்னகைத்தான் அவன்.

"தேவனே, களங்கமற்ற ஆகாசத்தில் பிறந்தவனல்லவா ஆகாசஜன். அவன் ஞானாகாசனேயன்றி வேறு எவருமில்லை. அவன் ஞான வடிவினன். அவன் செயல்களால் தோன்றியவனல்லன், ஞானத் தோற்றமாகிய  அவனுக்கு செயல்கள் கிடையாது. அவனை விட்டு விடு. எக்காரியமும் செய்யாதிருக்கிற அவனைப் பற்றுவது ஆகாத காரியம்," என்றான் யமதர்மராஜன்.

கால தேவனுக்கு வேறு வேலையா இல்லை? ஒருவாறு தன் இயலாமையை உணர்ந்தவனாக வீடு திரும்பினான் அவன்.

ஆனால் அதன் பின்னும் ஓன்று நடந்தது. காலம் அனைத்தையும் அழித்தாலும், அது எதையும் மரவாதிருக்கிறது, இல்லையா? கால தேவன் அதன் பின்னும் ஒரு முறை ஆகாசஜனை அடைய வந்தான்.

ஆமாம், மன்வந்தர  இறுதியில், 30,67,20,௦௦௦ ஆண்டுகளுக்குப் பின், தன் பெரும்பசியைத் தணிக்க  அகில அண்டங்களையும் விழுங்கியவனாய் பெருத்த வயிறும் துருத்திய நாவும் சிவந்த கண்களுமாய் ஆகாசஜனை நெருங்கிய கால தேவன் இம்முறையும் தோற்றான்.

ஞானாக்கினியாய்ப் பிரகாசித்து நின்ற ஆகாசஜனைக் கருதி அசையாது நின்றான், அயர்ந்த நிலையில் கால தேவன்.

அப்போது அங்கே வந்த யமன் சொல்வான், "அப்பா, இவனே சங்கல்ப புருஷன். இவனுக்கு அழிவு கிடையாது. தேவ தேவர்களும், இறைவர்களும் இறைவிகளும், கோள்களும் நட்சத்திரங்களும் அனைத்துமே லயத்தில் அடங்குகிற பிரளய காலத்திலும்கூட, யாராலும் ஏதொன்றும் செய்வதற்கில்லாதவனாய், சுயம்பிரகாசமாய், தனித்திருப்பான், தன் ஒளியில் அனைத்தையும் நிறைத்திருப்பான் ஆகாசஜன்," என்று.

"ஆமாம்," என்று அப்போதைக்கு ஒருவாறு ஒப்புக் கொண்டான் கால தேவன், தென்பட்ட அனைத்தையும் விழுங்கி ஆயிற்றா என்று கண்களை எட்டு திசைகளிலும் ஓட்டினான்.

"ஆயிற்று, வா, நம் வேலையைப் பார்ப்போம்," என்றான் கால தேவன். யமனும் அவனும் அவர்களுக்கெனக் காத்திருந்தப் பணிகளுக்காகக் காத்திருக்கத் துவங்கினர், செயல்வகை தெரியாமல்.

எதுவும் இல்லாமல் பாழாய்க் கிடந்தது அண்டம்.

ஆகாசஜன் தன்னொளியில் அனைத்தையும் நிறைத்து நின்றான்.