ராமன் ராஜா ஹிக்ஸ் போஸான் குறித்து அழகாக எழுதி இருக்கிறார்- எளிய நடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது: எளிமையாக எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. ராமன் ராஜா சுவையாக எழுதுவதில் தேர்ச்சி பெற்றவராகத் தெரிகிறார். அறிவியல் விஷயங்களை எழுதும்போது எளிமையாகவும் சுவையாகவும் எழுதுவது மிக அவசியம்- அறிவியல் நமக்கெல்லாம் அந்நியமான விஷயமாதலால் தோளில் கை போட்டு பேசுகிற மாதிரி இருந்தால்தான் காது கொடுத்து கேட்க முடியும். அகராதியைத் தேட வைக்கிற மாதிரி எழுதினால் வேறு வேலை பார்க்கப் போய் விடுவார்கள்.
"கொளுத்திப் போட்டவர்", "தண்ணீர் காட்டி வரும்", "ரூம் போட்டு யோசித்தும்", "காதில் புகை விட்டார்களா"- என்பது போன்ற பதங்களை ராமன் ராஜா பயன்படுத்துகிறார். இது தவிர "போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக் காலம் மாதிரி அற்ப நேரம்தான்.", "‘அப்படியா, எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?’ என்றால் ‘ஹிஹி! அதற்குச் சில பில்லியன் டாலர்கள் செலவாகுமே’ என்று கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டே சொன்னார்கள்," என்பன போன்ற சிந்தனை தெறிப்புகள் இவரது கட்டுரையில் சரளமாக விழுகிறது.
அறிவியல் குறித்து எழுதுகிறவர்கள் சுஜாதாவின் பாதிப்பிலிருந்து தப்புவது எளிதல்ல. அறிவியல் கட்டுரை படிப்பவர்களும் அதில் சுஜாதாவைத்தான் தேடுவார்கள். கடவுள், போஸான் இவற்றை விட அதிக அளவில் சுஜாதா தமிழ் அறிவியல் உலகை ஆக்கிரமித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.
ராமன் ராஜாவின் எழுத்திலும் சுஜாதாவின் நிழல் விழுகிறது- நிழல் என்பதை ஒரு வழக்காகதான் சொல்கிறேனே தவிர அது இயல்பில் வெளிச்சம்தான். வாசகனை பகைத்துக் கொள்ளாத, அவனிடம் தோழமை பாராட்டும் எழுத்து சுஜாதாவுடையது. அதில் மேதைமையை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். சுஜாதாவின் தனிச் சிறப்பு என்று ஒன்றை சொன்னால் அது அவருடைய exhibitionism, வார்த்தை ஜாலத்தில் அவருக்கு இருக்கிற அலுக்காத ஆனந்தம்: அதை வெளிப்படுத்திக் கொள்வதில் அவருக்கு இருக்கிற சுயதம்பட்டம் இல்லாத பெருமை. சுஜாதாவைப் பொறுத்தவரை எழுத்து ஒரு spectator sports.
ராமன் ராஜாவின் இந்தக் கட்டுரையில் அவர் போஸான் குறித்து எழுதியதைவிட இந்த விஷயங்களுக்கு சுஜாதாவின் வார்ப்பை அவர் அழகாகத் தந்திருப்பதே எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. ராமன் ராஜா தன் தமிழ் நடையை ஒரு வித்தையாக, விளையாட்டாக, காட்சிப் பொருளாகக் கையாள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதில் அவர் தேர்ந்தால் எதைப் பற்றி வேண்டுமானாலும் படிப்பவர்கள் அலுக்காத வண்ணம் எழுதலாம். அது அவரால் முடியும்.
ராமன் ராஜா ஒரு ஏழையின் சுஜாதாவாக வேண்டும் என்பது எனது ஆசையல்ல. அவர் சுஜாதாவைக் காப்பி அடிக்க வேண்டும் என்பது எனது விண்ணப்பமுமல்ல. சுஜாதாவை நினைவுபடுத்தாமல் யாராலாவது அறிவியல் சமாச்சாரங்களை எழுத முடிந்தால் எழுதிக் காட்டட்டும். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை, அறிவியலை சுவையாக எழுதுவது மிகக் கடினம். எளிமையாககூட எழுதி விடலாம். ஆனால் என்னைப் போன்ற ஒரு பாமர வாசகனை, ப்ளக்கில் பொருத்தப்பட்ட பக்கம் திருப்பும் இயந்திரமாக மாற்றுவதென்றால், அது சுவையான நடை இருந்தால் மட்டும்தான் சாத்தியம். இந்த விஷயத்தில் style wins over substance .
ராமன் ராஜாவின் கட்டுரையைப் பற்றி எழுத வந்தவன் சுஜாதாவின் நினைவுகளில் ஆழ்கிறேன் என்றாலே அது ராமன் ராஜாவின் சாதனைதான். இதைப் படித்துப் பாருங்கள்:
"சுவிட்சர்லாந்திலுள்ள செர்ன் கழகத்தில் LHC என்ற மாபெரும் ‘துகள் முடுக்கி’ இயந்திரம் ஒன்றை அமைத்தார்கள். எல்.எச்.ஸி என்பது 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டு வட்ட வடிவக் குழாய்கள். தரைக்கு 300 அடி கீழே சுரங்கம் தோண்டி, கான்க்ரீட் லைனிங் கொடுத்துச் செய்த திடகாத்திரமான இயந்திரம் அது. சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து ஃப்ரான்ஸ் எல்லையைக் கடந்து உள்ளே சென்று காவடி போல் மறுபடி திரும்பி ஜெனிவாவிற்கு வருகிறது. குழாய்களுக்குள் இரண்டு ப்ரோட்டான் கொத்துக்கள் எதிர் எதிர் திசையில் சுற்றிக் கொண்டிருக்கும். அவற்றை காந்தம் வைத்து மிக அதி வேகப்படுத்தி, ஏறக் குறைய ஒளியின் ஸ்பீடுக்கு அருகில் கொண்டு வந்துவிடுவார்கள். அடுத்தது ஒரு பயங்கர ‘டமார்’! அந்த வேகத்தில் துகள்கள் நேருக்கு நேர் மோதினால் ப்ரோட்டானாவது, குருமாவாவது ? எல்லாம் நொறுங்கி உள்ளே இருக்கும் ஸ்பேர் பார்ட் அத்தனையும் பொல பொலவென்று கொட்டி விடும். இப்படிக் கொட்டுகிற பார்ட்டிகிள் ஃபிஸிக்ஸ் குப்பையில் எங்காவது நம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா என்று தேடுவதற்குத்தான் இத்தனை நோவும். இதில் ஒரு பிரச்சினை - ஹிக்ஸ் போஸான் தோன்றினாலும் அதை நாம் பார்க்காமல் விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. காரணம் போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக் காலம் மாதிரி அற்ப நேரம்தான்."ராமன் ராஜா எதை எழுதினாலும் நான் படிக்கத் தயாராக இருக்கிறேன் என்று ரத்தத்தில் கையெழுத்து போட்டுத் தரத் தயாராக இருக்கிறேன்- கொண்டு வாருங்கள் உங்கள் ரத்தத்தை!
1 .8 .2010 அன்று திருத்தி எழுதியது:
தற்போது சுஜாதா அவர்களைக் குறித்து அவர் மிகவும் மேம்போக்காக எழுதுபவர் என்ற கருத்து ஏறத்தாழ எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக வலியுறுத்தப்படுவதால், இதை இங்கு சேர்க்கிறேன்-
Don Quixote என்ற நாவல் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த புனைவாகப் பலராலும் கருதப்படுகிறது. பலர் என்றாலும் உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்கள் அல்ல- பல்லை உடைக்கும் பதங்களைப் பழக்கப்பட்ட நாய் போல் ஏவி தங்கள் பணிகளை செய்வித்துக்கொள்ளக் கூடிய இலக்கிய விமர்சகர்கள். "ஆகா நாம் உலகின் தலைசிறந்த இலக்கியத்தைப் படித்து விடலாம்," என்று நினைத்து அந்த நாவலையும் ஒரு தடவை எடுத்துப் படித்தேன். படு போர். இன்றைக்கு தினமலர் வாரமலரிலும் கூட அதைவிட நல்ல கதை வருகிறது. என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் ஒரு தடவை அந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். எத்தனை தடவை சிரித்தீர்கள், எத்தனை நேரம் புல்லரித்துப் போய் தன்னிலை மறந்து இருந்தீர்கள் என்று சொல்லுங்கள்.
ஆனால் அவர்கள் சொல்வது உண்மைதான். டான் க்விக்சொட் இல்லை என்றால் இன்றைய நாவல் நாமறியும் நாவலாக இருக்காது. அது ஒரு புதிய பாதைக்கு புனைவு இலக்கியத்தை எடுத்துச் சென்றது.
என்னை நானே மேற்கோள் காட்டிக் கொள்வது சரியில்லைதான், ஆனால் என்ன செய்வது, இந்த மாதிரி என்னைத் தவிர வேறு யாரும் சொல்லவில்லையே- திரு ஜெயமோகன் அவர்களின் உலோகம் என்ற புதினம் குறித்து நான் வேறு இடத்தில் எழுதியது:
"...எல்லா படைப்புகளுக்கும் பின்புலமாக இன்னொரு படைப்பு இருக்க வேண்டும். ஏற்கனவே இன்னொருத்தர் இலக்கியத்தில் ஆக்கியிருக்கின்ற தளத்தை பின்புலமாக வைத்துதான் பெரும்பாலான படைப்புகள் உருவாகின்றன. இதை நாம் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்கும் போது உணர முடியும். ஆரம்பத்தில் அன்னியமாக இருக்கிற ஒரு வட்டத்து இலக்கியம் பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் படிக்கப் படிக்கப் பழகிப் போய், நமக்கு நன்கு அறிமுகமான, நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற ஒன்றாக ஆகி விடுகிறது
அந்த வகையில் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு genre என்று சொல்ல வேண்டும். அது அந்த மாதிரியான மற்றக் கதைகளை ஏற்றுக் கொள்கிற பின்புலத்தை தமிழ் எழுத்தாளர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இது வரை Graham Greene, Len Deighton, John Le Carre வகையிலான Spy Fiction தமிழில் இல்லாமல் போனதற்கு இந்த நம்பகத் தன்மை இல்லாததுதான் காரணம். ஆனால் இந்த இலங்கை/ ஈழப் போர், அந்த வகையிலான படைப்புகளுக்கு அருமையான சூழலை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஜெயமோகனின் உலோகம் மிக நேர்த்தியாக, ஆங்கிலத்தில் எழுதப்படுகிற நாவல்களுக்கு இணையாக வந்துக் கொண்டிருக்கிறது. இது தமிழில் ஒரு Genreஐ நிறுவும் என்று எதிர்பார்க்கிறேன்.
இனி தமிழில் James Bond, Robert Ludlum வகையிலான கதைகளை எழுதுவது சுலபம். வாசகர்களும் அதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள்..."
நான் சொல்வதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் உலோகத்தின் இறுதிப் பகுதிகள் பழைய தமிழ் பட க்ளைமாக்ஸ் மாதிரி விளக்கம் அது இது என்று நீண்ட உரையாடல்களாய்த் தோய்ந்து போய் முடிந்தது. இருந்தாலும் கூட, அவரது உலோகத்தை நீங்கள் படித்த கையோடு, எனது, "அம்பாறை ஒப்பந்தம்" என்ற நாவலின் ரா உளவாளி ரங்கதுரையின் வீரதீர செயல்களைப் படித்தீர்களானால் அது ரசிக்கிற மாதிரி இருக்கும். ஆனால் ஜெயமோகன் அவர்களது நாவலைப் படிக்காமல் இதைப் படித்தால், ஜூனியர் விகடனில் வருகிற செய்திகளே இதைவிட சுவாரசியமான கதைகளாக இருக்கிறது என்பீர்கள்.
எதற்கு சொல்கிறேன் என்றால், அப்படிதான் எழுத முடியும். ஒரு மொழியில் எந்த ஒரு எழுத்தாளனும் மாயாவி மாதிரித் தோன்றி ஏழேழு தலைமுறையும் ஆழ்ந்து முத்துக் குளிக்கிற மாதிரி கதைகள் கட்டுரைகள் எழுதி வைத்து விட்டுப் போக முடியாது. இது தமிழ் நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ்வொருத்தரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு முன் எழுதியவர்களின் அடியொற்றித்தான் அடுத்து வருகிறவர் தன் படைப்பை நிகழ்த்துகிறார்.
"இல்லை, இல்லை, நான் ஒரு சுயம்பு," என்று ஒருவர் சொல்லிகொள்வாரெயானால், அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால், நூற்றுக்கும் நூற்றெட்டு சதிவிகிதம் அவர் சமகாலத்து வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.
சுஜாதா அவர்களின் அறிவியல் எழுத்தும் கதைகளும் மேம்போக்காக இருந்தன என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றே. உண்மைதான். ஆனால் யாராலும் தமிழ் எழுத்து அன்றைக்கு இருந்த கால கட்டத்தில், ஏன் இன்றைக்கு இருக்கிற காலகட்டத்திலும்கூட, ரொம்ப ஆழமாக அறிவியல் குறித்துப் பேசி, அது பரவலாக அனைவரையும் சென்றடையச் செய்திருக்க முடியாது. காரணம் நம் மொழியில் அதற்கான register கிடையாது. இப்போதுதான் அது உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்த ஒரு விஷயத்தை மட்டுமாவது கருத்தில் கொண்டு அவரது அறிவியல் குறித்த படைப்பாக்கங்களைக் குறித்துப் பேச வேண்டும். அவர் எழுதும் காலத்தில் யார் அறிவியலை மக்களிடம் கொண்டு போனார்கள்? அது பாட்டுக்கு கவனிக்க ஆளில்லாத சவலைக் குழந்தை மாதிரி நின்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர் என்னமோ நன்றாகப் போய்க் கொண்டிருக்கிற கப்பலை கடத்திக் கொண்டு போய் பாறைகளில் முட்டி உடைத்துத் தரை தட்டி விட்ட மாதிரி தமிழ் அறிவியல் படைப்பாக்கத்தையே தப்பான பாதையில் கொண்டு போய் முட்டு சந்தில் நிறுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டு வேறு!
ராமன் ராஜா போன்றவர்கள் அவசரப்பட்டு, "ஆஹா, அவரே சொல்லிட்டார்!" என்ற திகைப்பில், ஆழமான அறிவியல் விஷயங்களை எழுதக் கற்கும் யத்தனமாய் NCBHஐத் தேடிப் போய் அங்கிருப்பவர்களை இருட்டு அறைகளுக்குள் காணாமல் போன புத்தகங்களைத் தேடச் சொல்ல வேண்டாம். அதனால் யாருக்கும் ஒரு பிரயோசனமும் இருக்காது- யாராவது படித்தால்தானே!
மறுபடியும் சொல்கிறேன்: மக்களிடம் அறிவியல் தமிழ் போய் சேர வேண்டுமானால் இன்றைக்கு இருக்கிற நிலையில் style wins over substance. சுஜாதாவை விமர்சிப்பவர்கள்- சொல்லக் கூடாதுதான்- ஆழமாக பல அறிவியல் கட்டுரைகள் எழுதிக் காட்டட்டும்: அதைப் பரவலாக மக்கள் ஏற்கிறார்களா பார்க்கலாம்- தரை தட்டின கப்பல் கரை சேரட்டும்.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். அருண் நரசிம்மனின் "ராகம் தானம் பல்லவி"யைப் படித்ததும் எனக்கு என்னைப் பார்த்து அப்படிதான் கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது- தெரியாதென்பது தெரிந்த விஷயம்தான், ஆனால் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.
இசை விஷயத்தில் மற்ற விஷயங்களைவிட பெரும்பேதை என்பதால் எனக்கு இந்த விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது-
"அக்காலத்தில் பல்லவிப் போட்டிகள் வெகு பிரபலம். சாம்பமூர்த்தி இதைக்குறித்து தனியே ஒரு அத்தியாயமே எழுதியுள்ளார். இரு இசைக்கலைஞர்களிடையே போட்டி என்றால், ஒரு மூத்த இசைக்கலைஞர் அம்பயர். முதலில் இ.க-1 ஒரு ராகத்தில் ஆலாபனை செய்து பொளக்கவேண்டும். இ.க-2 அது என்ன ராகம் என்று கண்டுசொல்லிவிட்டு, ஸ்பாட்டிலேயே அந்த ராகத்தில் பல்லவியின் அனைத்து அங்கங்களும் மிளிர ஒரு பல்லவி கம்போஸ் செய்து காட்டவேண்டும். அப்பல்லவியை இ.க-1 சமத்காரமாகப் பாடிவிட்டால், ஆட்டம் எதிர்ப்புறம் திரும்பும். இப்போது இ.க-2 ஒரு ராக ஆலபனை செய்யவேண்டும். இ.க-1 இதில் பல்லவி. இ.க-2 அதைப் பாடவேண்டும்.இருவரும் சரியாய் செய்துவிட்டால் ஆட்டம் டிரா. அம்பயர் தாத்தா இருவரையும் தழுவி தட்டிக்கொடுத்து பரிசளித்து அனுப்பிவிடுவார்."
எந்த ஊரில் இப்படியெல்லாம் நடந்தது என்பதை அருண் நரசிம்மன் குறிப்பிடத் தவறி விட்டார்- திருவிளையாடல் படத்தில் வருகிற காட்சி மாதிரி இருக்கிறது இது.
கர்நாடக சங்கீதத்தை எளிதாக அறிமுகப்படுத்தும் கட்டுரை இது என்று சொல்ல மாட்டேன். பிரயாசைப்படாமல் பழகாது இதில் உள்ள விஷயங்கள். சொல் குற்றம் இல்லை, பொருள் குற்றம். ஆனால் ஒன்று: இந்தக் கட்டுரைகளைத் தொகுத்தால் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும். அது உறுதி. அதைத் திரும்பத் திரும்பப் படித்து இவர் எழுதி இருக்கிற விஷயங்களைப் புரிந்து கொண்டு விடலாம்.
சைக்கிள் ஓட்டுவது எப்படி? என்று ஒரு புத்தகம் இருக்கிறது. சைக்கிள் ஓட்டுபவர்கள் அதைப் படித்தால், "ஆமாமாம், இப்படிதான் சைக்கிள் ஓட்ட வேண்டும்," என்று சொல்லி விடுவார்கள். ஆனால் ஓட்டத் தெரியாதவர்கள், "சைக்கிள் கீழே விழுவது centripetal force என்ற ஒரு வகை உந்து சக்தியால். இதை எதிர்கொள்ள, centripetal force சைக்கிளை வளைக்கிற திசையில் உங்கள் சைக்கிளின் ஹாண்டில் பாரையும் வளைத்து கொஞ்சம் விரைவாக பெடலை மிதிக்க வேண்டும், அப்போது சைக்கிள் நேர்திசையில் பயணிக்கத் துவங்கி விடும், centripetal force மீண்டும் தன் வேலையைக் காட்டாத வரை" என்று சொன்னால் சைக்கிள் ஓட்டத் தெரிந்த நீங்கள் இந்த சக்தியைப் பற்றி எதுவும் தெரியாமலேயே சைக்கிள் ஓட்டுவது குறித்து எப்படி பேசுவது என்பதைப் புரிந்து கொண்டு விடுவீர்கள். ஆனால் பழகுநரின் கதி? இப்படிதான் சொல்லியாக வேண்டும்- புத்தகமாக போட்டால். ஆனால் சைக்கிளில் உட்கார வைத்து இதையே சொன்னால் எளிதாகத் தெரிந்து விடும்.
அருண் நரசிம்மனின் இந்த கட்டுரைகள் மல்ட்டிமீடியாவில் ஐபோனிலோ ஆடியோபுக்காகவோ வேறு வடிவிலோ இன்னும் கொஞ்சம் திருத்தப்பட்டு தொகுப்பாக வெளி வரும்போது அது அற்புதமான படைப்பாக இருக்கக்கூடும்- எதற்கும் சொல்வனம் இந்த விஷயத்தில் உரிமத்தில் பங்கு கேட்டு துண்டு போட்டு வைத்துக் கொள்வது நல்லது- பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு போனாலும் போகலாம். காலச்சக்கரம் எப்படி திரும்பும் என்பதை சொல்ல முடியாது.
எனக்கு இவர் எழுதுவதில் உள்ள ஒரே குறை: வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு dumb down செய்கிறார்-
இது போன்ற விபரீத விளையாட்டுகளைத் தவிர்த்து- இந்த இடத்தில் இன்னொரு மேற்கோள்: இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் அவர் விழுவதைப் பாருங்கள்:"ஒரு மூடி போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி, திறவுங்கள். என்ன வரும்? நிறைய நாய்கள். ஏனென்றால், எம்ப்டி வெஸல்ஸ் கிரியேட் மோர் நாய்ஸ்.சரி, நாய்கள் வெளியேறியதும், மால்ட்டொவாவில் இருக்கும் மால், பக்கத்தில் (அருகில்) பக்கத்தில் இருக்கும் தாள், தீக்ஷதர் முத்திரையான குருகுஹா, தமிழுக்காக முருகா அல்லது மால்மருகா, பழந்தமிழுக்காக ஷண்முகா (புதுத்தமிழில் டண்முகா?), பெண்களை கவர வள்ளிமணாளா என்று சொற்களை பாட்டி(லி)ல் அடைத்து, துணிமேலிட்ட மூடி போட்டு குலுக்கினால் கால்மணியில் பல்லவி திரண்டுவிடும்."
"சிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றோ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ‘ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு’ என்று அங்கலாய்ப்பர்."சங்கீதம் தெரியாதவர்கள் ஜிகிர்தண்டாவை ரசித்து மேற்கொண்டு படித்தால் ஆதிதாளம் தாண்டி மிஸ்ர ஜம்பைக்கு வரும்போது ஒரே ஜம்ப். நாலு பத்தி தள்ளி வேறேதாவது ஜிகிர்தண்டா தெரிகிறதா என்றுத் தேட ஆரம்பித்து விடுவார்கள். சங்கீத ஞானம் உள்ளவர்களுக்கு ஜிகிர்தண்டா எதற்கு? பில்டர் காப்பியில் கோக்கைக் கலந்தாற்போல் போல் இருக்காது?
அடுத்ததாக அரவிந்தன் நீலகண்டனின் ஹாலிவுட் அறிவியல்: காலப்பயணம் -1 எழுதலாம் என்று உட்கார்ந்தேன். களைப்பாக இருக்கிறது, நாளை அவகாசப்பட்டால் எழுதுகிறேன்.