Contact/ தொடர்பு கொள்க

திரு இம்மானுவேல் கான்ட் அவர்களை விருந்துக்கு அழைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பத்து கட்டளைகள்

இம்மானுவேல் கான்ட் என்பவரை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த ஜெர்மானிய தத்துவ மேதை ஒரு  நல்ல விருந்து  என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது குறித்து ஒரு வலைதளத்தில் படித்தேன்- இங்கே, Immanuel Kant's Guide to a Good Dinner Party . இனி நான் எழுதுவது எல்லாம் ஏறத்தாழ அதிலிருந்து உருவிய தமிழ்ப்படுத்தல்தான்.  ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்கள் மேற்கண்ட சுட்டியைத் தட்டி இங்கிருந்து தப்பி ஓடி விடலாம்.

மனிதப்பிறவி எடுத்ததற்குப் பயன்  எது என்று கேட்டால்  அது  நன்றாகப் பேசுபவர்களுடன் உட்கார்ந்து நன்றாக சாப்பிடும் இன்பம்தான்  என்று இந்தத் தத்துவ மேதை சொல்லி இருக்கிறாராம். கான்ட் சொன்ன தத்துவம் குறித்து எதுவும் தெரியா விட்டாலும், இந்த அரிய உண்மையை அவர் கண்டுபிடித்து சொன்னதிலிருந்தே அவர் ரொம்ப நல்லவர் என்று தெரிகிறது.




இப்போது கான்ட் சொன்ன ஒரு ஜோக்கைப் படித்து விட்டு சீரியஸ் மேட்டர்களைப் பார்க்கலாம்-

ஒரு தடவை கவுண்ட்டஸ் வான் கெய்சர்லிங் வீட்டுக்கு கவுண்ட் சாக்ரமொசோ வந்திருந்தார் (ஜெர்மானியர்கள் ஏன் இப்படி கடுமையான பெயர்களைத் தங்களுக்கு  வைத்துக் கொள்கிறார்கள்? ரங்கன், குமார்- இந்த  எளிய பெயர்கள் அவர்கள் வாயில் நுழையாதா என்ன!).

அந்த ஊரில் ஒரு பள்ளி ஆசிரியர் இருந்தார். அவர் ஹாம்பர்க்கில்  புதிதாய்க் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க வேண்டி வனவிலங்குகளை சேகரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஆசிரியர் இவர்கள் இருந்த வீடு வழியாக வரும்போது, மரியாதை நிமித்தமாக பேச்சு கொடுக்கும் வகையில்  கவுண்ட் சாக்ரமொசோ அந்த வாத்தியாரைப் பார்த்து, "ஹாம்பர்க்கில் எனக்கு ஒரு அத்தை உண்டு. அவள் இப்போது இறந்து போய் விட்டாள்," என்று சொன்னார்.

நம்மாள்தான் எப்போதும்  வனவிலங்குகள் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பவராயிற்றே- "ரொம்ப நல்லது ஐயா. தோலை  உரித்துப்  பாடம் பண்ணித் தலைகீழாய்த் தொங்க விட்டிருக்கிறீர்கள்தானே?" என்று பதில் தந்தாராம்.

இதுதான் ஜோக். இந்த இடம் வந்ததும் நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்.

(இங்கே  கான்ட் வரைமுறைப்படுத்திய தத்துவத்தை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்:  இந்த உலகம் மற்றும் அதன் அனுபவம் குறித்து நமக்கு அது பற்றி எதுவும் தெரிவதற்கு முன்னமேயே அது குறித்து சில அனுமானங்கள் இருப்பதால்தான் அதை நாம் அறிகிற வகையில் அறிகிறோம். எதுவும் தெரிவதற்கு முன்னமேயே எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருப்பதால் இதை இவ்வாறுத்  தெரிந்து கொள்கிறோம். அந்த ஒரு காரணத்தின் பொருட்டே  அனுபவத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிவுக் கண் கொண்டு நம்மால்  காண இயலாது. இந்த மாதிரி என்னமோ சொல்கிறார் கான்ட். அதற்கு இந்த ஜோக்கே ஒரு சிறந்த உதாரணம். இந்த ஜோக்கை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தவர்களுக்குதான் சிரிப்பு வரும். மற்றவர்களுக்கு வெறுப்புதான் வரும், இல்லையா?)

கான்ட் சொன்ன ஜோக்குக்கு வருகிறேன்: நீங்கள் கட்டாயம் சிரித்திருப்பீர்கள் என்று தெரியும், ஆனால் சிரிக்காதவர்களும் இருக்கலாம் இல்லையா? அவர்களுக்கு தத்துவ மேதை கான்ட் மேலதிக விபரம் தருவார்:  அத்தை என்ற பதத்தைக் குறிக்க ஆன்ட் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் கெய்சர்லிங். ஆனால் விலங்குகளை நினைத்துக் கொண்டிருந்த அந்த ஆசிரியர் காதில் அந்த சொல் என்ட் என்று விழுந்தது. என்ட் என்றால் ஜெர்மன் மொழியில் வாத்து.

இப்போது கூட சிரிக்காவிட்டால் உங்களுக்கு கான்ட் உடன் உட்கார்ந்து சாப்பிடுகிற தகுதி கிடையாது. அடடா, இதில் சிரிப்பதற்குரிய ஜோக் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? அதற்கும் கான்ட் ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்.  அது குறித்துத்  தெளிவு பெற உங்களை மாதிரி சீரியசான ஆட்களை எல்லாம் ஜோக்குகள் குறித்த கான்ட்டின் பார்வையை ஆயும் இந்தக் கட்டுரையைப் படிக்க அனுப்ப வேண்டும்: ஆனால் அதை செய்ய மாட்டீர்கள் என்பதால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்: ஆசை காட்டி மோசம் செய்கிற கதைகள்தான் ஜோக்குகளின் அடிப்படை என்று அவர் நம்பியதாக அந்த கட்டுரையைப் படித்தபின் அறிகிறேன். அப்படியா?

அவர் சொன்ன இன்னொரு ஜோக்கைப் பாருங்கள்:

சூரத் நகரில்  ஒரு வெள்ளைக்காரர் பீர் பாட்டிலை உடைத்தாராம். அதிலிருந்து பொங்கி வந்த நுரையைப் பார்த்து அங்கிருந்த இந்தியர் திகைத்துப் போய் சிலைபோல் நின்று விட்டார்.

"அப்படி என்னடா ஒரு பெரிய அதிசயத்தைப் பார்த்து விட்டாய்?" என்று கேட்டார் வெள்ளைக்காரர்.

"ஒண்ணுமில்லை எஜமான்: நுரை வெளிய வருவது ஒன்றும் புதுசில்லை: ஆனால் அத்தனை நுரையையும் எப்படி பாட்டிலுக்குள் போட்டு வைத்தீர்கள்?" என்று கேட்டார் அந்த இந்தியர்.

ஜோக் சொல்கிறேன் என்று ஆசை காட்டி மோசம் செய்து விட்டாரல்லவா கான்ட்? அதுதான் ஜோக். இப்போதாவது சிரித்துத் தொலையுங்கள்.

(கான்ட்டின் நகைச்சுவை குறித்த புரிதல் (ஆசை காட்டி மோசம் செய்தல்) அபத்தமாகத் தோன்றினாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வி எஸ் ராமச்சந்திரன் என்ற நரம்பியல் அறிஞர், மூளையில் வலிக்கும் சிரிப்பும் இடையே இருக்கிற தூரம் அதிகமில்லை என்கிறார். வலிக்கும்போதெல்லாம் கொல் கொல் என்று சிரித்தவர்களும் உண்டாம். அவ்வளவு ஏன், சிரித்து சிரித்து செத்தவர்களும் உண்டு என்கிறார்- அவர்களது ஓயாத சிரிப்பு ஆனந்தத்தின் உச்சத்தைத் தொட்டதால் எழுந்ததல்ல- நில்லாத வலியின் அலறல். இது குறித்து பின்னொரு நாள் பார்ப்போம், இப்போதைக்கு கான்ட்).

மொத்தத்தில் கான்ட் சாப்பிடும்போது இந்த மாதிரி நல்ல நல்ல ஜோக்குகளை சொல்லி சிரித்தபடி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தவராதலால், அதிலும் ஒரு மேதைமை அடையப் பெற்றார். அவர் "டின்னருக்கான பத்து கட்டளைகள்" என்று மோசஸ் கணக்காக பட்டியலே தந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்டவருடன் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், இல்லையா?

(நன்றி: kaliningrad)

இனி அவர் இட்ட  பத்து கட்டளைகளுக்கு வருவோம். 


  1. குறைந்தது மூன்று பேர் உடன் சாப்பிட இருக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்கள்  எண்ணிக்கை ஒன்பதைத் தாண்டக் கூடாது.
  2. வெறுமே வயிற்றை ரொப்பிக் கொள்ள மட்டும் இலையில் உட்காரக் கூடாது, சந்தோஷமாகக் கூடி மகிழ்வதும் சாப்பிடுபவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். 
  3. சாப்பிடும்போது பேசிக் கொள்ளப்படுகிற விஷயங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்கள்  ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒளிவு மறைவில்லாமல் பேசி மகிழ முடியும். 
  4. சாப்பிடும்போது நிகழ்த்தப்படுகிற உரையாடல்கள் மூன்று கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடைந்து கடக்க வேண்டும்: முதலில் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட  வேண்டும் (வம்புப்  பேச்சு என்று நினைக்கிறேன்). அடுத்தது வெவ்வேறு விஷயங்கள் குறித்த கனமான சிந்தனை. மனம் களைத்துப்போன  நிலை அடைந்ததும்  கொஞ்சம் தமாசு பண்ணி விட்டு கையைக் கழுவப் போக வேண்டும். 
  5. சாப்பிடும் போது பாட்டு போடக் கூடாது (டிவியில் அழுகை சீரியல் பார்க்கிறவர்களுக்கு போஜனம் கிடையாது)
  6. அனைவருக்கும் பேச விருப்பமான விஷயங்களைப் பேசி மகிழ வேண்டும்.
  7. பேச்சு அவ்வப்போது உயர்ந்து அடங்கலாம்- ஆனால் உணவை உண்டு மகிழும் மனங்களுக்கிடையே நீண்ட மௌனத் திரை விழுவதை எப்போதும் அனுமதிக்கக் கூடாது.
  8. உரையாடல் ஒழுங்காக, சீரான பாதையில் போக வேண்டும். நினைத்த விஷயங்களை எல்லாம் நினைத்த மாதிரி ஒன்று மாற்றி ஒன்று என்று பேசக் கூடாது.
  9. தீவிரவாதிகளுக்கு இலை போடலாகாது. ஆணித்தரமாக அடித்துப் பேசுபவர்களைத் தவிர்த்து விடுங்கள்- அப்படியே யாராவது அறச்சீற்றம் கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணினால் சமயம் பார்த்து  மொக்கை ஜோக் அடித்து பேச்சை மாற்றி எல்லாரையும் சிரிக்கப் பண்ணி விடுங்கள். 
  10. என்ன ஆனாலும் சாப்பிடும் போது கொள்கை மோதல்கள் வரக்கூடாது என்று கவனமாக சுயக் கட்டுப்பாட்டைக் கடை பிடிக்க வேண்டும். இதற்கு தொனியை கவனம் செய்வது மிக அவசியம். எக்காரணம் கொண்டும் நன்றாக  சாப்பிட உட்கார்கிறவர்கள் விரோதிகளாக எழுந்திருக்கலாகாது. 

இந்த பத்து கட்டளைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

யோசித்துப் பாருங்கள், சாப்பிடும்போது மட்டுமா, நண்பர்களாக ஒன்று கூடும் இடங்களில் எல்லாம், அவ்வளவு ஏன்,  பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா  உரையாடல்களின் போதும்  இந்தப் பத்து கட்டளைகளையும் கடைபிடிப்பது நல்லதுதானே!

கான்ட் நல்ல நண்பர்களுடன் நன்றாகப் பேசியபடி விருந்து சாப்பிடுவதை விரும்பினார் என்ற காரணத்திலேயே அவர் நட்பின் இயல்பு குறித்த உண்மை நிலவரத்தை அறிந்தவராக இருந்தார் என்பது தெளிவு.

கான்ட்டின் பார்வையில் நட்பு என்பது எப்படிப்பட்டது? நான் வேறோரிடத்தில் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்- படித்து பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்!- மார்க் வெர்னான் கார்டியனில் நட்பும் ஜனநாயகமும் குறித்து எழுதியது


“நட்பின் மதிப்பீடுகள் ஜனநாயகத்தின் மதிப்பீட்டிலிருந்து வேறுபட்டவை. குறிப்பாக ஒரு தனிநபரின் பாலன்றி பொதுவானதாயிருக்கிற நட்பு நட்பேயில்லை. உங்கள் நண்பர்கள் உங்களது தனி கவனத்துக்குரிய நபர்கள், நீங்கள் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி நடத்துகிறீர்கள். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொன்னால், மற்றவர்கள் அப்படி அல்ல என்றுதான் பொருள் வருகிறது, இன்னும் சொல்லப் போனால், வேறொருவர் உங்களிருவருக்கும் விரோதி என்றுகூட சொல்ல முடியும். நண்பராக இருப்பது என்றால் அபிமானத்துக்குரியவராக இருப்பது, அபிமானத்துடன் நடத்தப்படுவது. அதனால்தான் வேலை செய்யும் இடங்களில் நட்பு வெளிப்படையாகத் தெரிவது குறித்து நாம் தயக்கம் காட்டுகிறோம், “nepotism” “cronyism” போன்ற அவலச் சொற்களால் அதை விவரிக்கிறோம். தன்னோடு நட்பாயிருப்பவர்களை சிறப்பாக கவனித்துக் கொண்டார் என்பது தெளிவாகத் தெரிந்தால் ஒரு மேலதிகாரியை நீதி மன்றத்துக்குக் கொண்டு போக முடியும். நட்பு என்பது அடிப்படையில் நியாயமில்லாதது.
இம்மானுவேல் கான்ட் அப்படித்தான் நினைத்தார். அவர் நட்பே அதர்மம் என்று நம்பினார். நாம் நமது நண்பர்களுடன் இணைந்து செயல்படும்போது தர்ம நியாயங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை. நமது உணர்வுகள், நினைப்புகள் மற்றும் விசுவாச உணர்வால் உந்தப்படுகிறோம். இதை தத்துவ மொழியில் சொல்வதானால், பாரபட்சத்தன்மை இருப்பதால் “friendship is not amenable to universalisable imperatives”. மற்றவர்களிடமிருந்து நீ எதை எதிர்பார்க்கிறாயோ, அதையே அவர்களுக்கும் கொடு என்பதுதான் ஒழுக்கத்தின் பொன்னான விதி என்றால், நட்பு அதை மீறுகிறது. நீ மற்றவர்களுக்கு செய்வதை விட மிக அதிக உதவியை உன் நண்பன் உனக்குச் செய்வான். கான்ட் எந்த அளவுக்கு போனாரென்றால், அவர் சுவர்க்கத்தில் நட்பே இருக்காது என்றார், அங்கு முழுமையான ஒழுக்கம் இருக்கும் என்பதனால்.
நவீன ஜனநாயகத்தில், இந்த சமதர்ம சிந்தனை மிக முக்கியமானது. ஒருவருக்கு ஒரு ஓட்டுதான். சட்டத்தின் முன் அனைவரும் சமம. எல்லாருக்கும் உரித்தாயிருந்தாலொழிய மனித உரிமைகள் உரிமைகளே அல்ல. நட்பு என்பது அதன் அபிமானத்தால் இப்படிப்பட்ட மதிப்பீடுகளை எள்ளி நகையாடுகிறது….”-
என்ன போடு போடுகிறார் பார்த்தீர்களா...

விலைமதிப்பில்லாத நட்பு கூட பொதுவெளியில் செயல் வடிவம் பெறும்போது செல்லாக்காசாகி விடுகிறது, கான்ட்டின் கையில்- இன்னும் ஒரு படி மேலே போய்  அதைக் கள்ளப் பணமென்ற சொல்லல்லாம். உணர்வென்று வரும்போது நட்பை விரும்பி மெச்சுகிற கான்ட், செயலென்று வரும்போது அதை வெறுத்து ஒதுக்குவதுதான் அவருக்கு சிறப்பு சேர்க்கிறது. ஒரு விஷயத்தை விரும்புபவன், அது கேடு செய்கிற இடங்களில் அதைத் தீவிரமாகத் தவிர்ப்பது சாமானிய விஷயமல்ல. இந்த தெளிந்த பார்வைதான் நம் போன்ற சாமானியர்களிடமிருந்து கான்ட்டை வேறுபடுத்திக் காட்டுகிறது, இல்லையா?

கடைசி வரிகள்:

இந்த பதிவின் நோக்கம்:
  • கான்ட் சொன்ன ஜோக்குகள் வாயிலாக கான்ட்டின் a priori concept குறித்த எளிய அறிமுகம்.
  • கான்ட் நல்ல விருந்தின் இயல்புகளாக சொன்ன பத்து கட்டளைகள் வாயிலாக நாலு பேர் கூடிப் பழகுகிற இடங்களில் விவாதம் எவ்வண்ணம் இணக்கமான சூழ்நிலையில், நட்பு மற்றும் நேய உணர்வு அடிபடாமல் நிகழ்த்தப்படக் கூடும் என்பது குறித்த ஒரு பார்வை.
  • நட்பு எவ்வளவு உயர்ந்ததாக  இருந்தாலும், அதன் காரணமாக பொது வாழ்வில் ஏற்படக்கூடிய தவறுகள் குறித்த கான்ட்டின் கறாரான மதிப்பீடு.