நான் சொல்வனம் இதழை வாசிப்பதற்கும் அது குறித்து வெவ்வேறு இடங்களில் பகிர்ந்து கொள்வதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது ஒவ்வொன்றாகத் தக்க சமயம் வரும்போது சொல்கிறேன். இப்போது சொல்லும் காரணம், இந்த இதழில் நான் எழுதிய ஒன்றைப் பதிப்பித்து விட்டார்கள். அதற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், நான் சொல்வனத்துக்குக் கடிதம் எழுதும் முன்னமேயே இந்த இதழ் குறித்தான பதிவுகளை எழுதி வருகிற காரணத்தால், சொல்வனம் இதழில் வெளி வருகிற படைப்புகள் பற்றிய என் பார்வையைப் பகிர்ந்து கொள்வதைத் தொடரத்தான் போகிறேன். படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம். யாருடைய மௌசையும் சிறை பிடித்து இதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது, இல்லையா?
பத்ரி சேஷாத்ரி ஆக்கப்பூர்வமாக யோசிக்கப் போய், ஏறத்தாழ இந்தியா பாகிஸ்தானைத் தத்தெடுக்க வேண்டும் என்கிற அளவில் சொல்கிறார், தனது "பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா" என்ற கட்டுரையில்- தாராளமாகக் கடன், பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை மற்றும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத இதர சலுகைகள்- , அந்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டண உதவி- இப்படி நீள்கிறது பட்டியல். பாகிஸ்தான் அரசுடன் இந்தியா பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற நிலையில் தொலை நோக்குப் பார்வையுடன் அந்நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதே நமக்கு சிறந்த உபாயம் என்கிறார்.
எப்படியும் சண்டை போட்டு நமக்கு லாபம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்பதால் இதையும் முயற்சித்துப் பார்க்கலாம்தான்- ஆனால் இந்த மாதிரி துணிந்து செய்கிற அரசு ரொம்ப நாளைக்கு மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
இறுதித் தீர்வு என்பதெல்லாம் பாசிச கனவு. அரசியலில், சமுதாயப் பிரச்சினைகளில் அப்படி ஒன்று கிடையவே கிடையாது. அப்படியொரு தீர்வை ஏற்படுத்த நினைக்கிறவர்கள் பிணங்களின் மேல்தான் தங்களது கனவு சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டி இருக்கும். பாகிஸ்தான் எவ்வளவுதான் குத்தல் குடைச்சல் தந்தாலும், எப்படியாவது இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும் என்ற எண்ணத்தைக் கை விட்டு, ஒரு தேர்ந்த செஸ் வீரனைப் போல் வெற்றி கண்ணுக்குத் தெரியாதபோதும், ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி ஒரு பீஸ் சாதகமாக இருக்கிற நிலையைத் தக்க வைத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்ய முடியுமோ அதை நோக்கி பயணிக்கலாம்.
அந்த வகையில் பத்ரி சேஷாத்ரி சொல்கிற விஷயத்தின் அடிப்படையில் மக்களின் இதயங்களைக் கைப்பற்றும் முயற்சிகள் என்னென்ன உண்டோ அவை எல்லாம் கட்டாயம் செய்யப்பட வேண்டியவையே. அவ்வப்போது காணப்படும் அரசியல் சூழலுக்கேற்ப கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர இல்லாதபோதும் தன் அடர்ந்த கரிய நிழலைச் சாய்க்கிற மதசார்பின்மை கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் அறிவாளர்கள் அரசியல் சூதாடிகள் இதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
---
"எழுத்து இதழ் நிறுத்தப்பட்டதற்கே இலங்கை சந்தாதாரர்களை அது இழந்ததுதான் முக்கிய காரணமாயிற்று. ஏனென்றால் எழுத்தின் பாதிக்கு மேலான சந்தாதாரர்கள் அங்கேதான் இருந்தார்கள். இதே நிலைதான் சரஸ்வதிக்கும் ஏற்பட்டது," என்ற திடுக்கிடும் செய்தியை முன் வைக்கிறார் வெங்கட் சாமிநாதன்.
இன்றும் எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது- இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் எப்படி வடிவேலுவின் நகைச்சுவையை மேற்கோள் காட்டுகிறார்கள் என்று. அவர்களின் பின்புலத்திலிருந்து மதுரைத் தமிழ் போல கண்டித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் பேசுபவர் நகைச்சுவை செய்தால் அதற்கு நம் மக்கள் வடிவேலுவுக்குத் தந்த மாதிரியான பெரும் வரவேற்பு கொடுத்து ஏற்பார்களா என்று தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் வெங்கட் சாமிநாதனின் பேட்டியில் வெளி வருகிற ஈழ மக்களின் இந்தத் தமிழ் இலக்கிய தாகம் பெரிய அளவில் பேசப்படாமல், அந்தோணி மார்க்ஸ் என்பவர் அந்தோணி மார்க்ஸ்தானா என்பது விவாதப் பொருளாகி விட்டது- டுவிட்டரில் நான் தொடர்கிற காலப் பிரவாகத்தில்!
"அங்கே நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நிலவியது அவர்களிடத்தே அக்காலத்தில். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருந்தது," என்று வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழர்கள் குறித்து சொல்கிற விஷயத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை- அல்லது யாரும் கவனித்ததை நான் கவனிக்கவில்லை. எப்படி இருந்தாலும் வெகுஜன அளவில் ஈழத்தமிழர்கள் எவரும் சிலோன் மனோகருக்கு அப்புறம் பெருமளவில் கலை இலக்கியம் இசைத் துறைகளில் (பெரும்பான்மையான, 'பாமர') தமிழர்கள் மத்தியில் முத்திரை பதிக்காதது குறையாகத்தான் தெரிகிறது.
இது பெரியவர்கள், படித்தவர்கள் விவாதிக்க வேண்டிய விஷயம். என் எண்ணத்தை சொல்கிறேன், அவ்வளவுதான். தனது நீண்ட அனுபவத்திலிருந்து இன்னும் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார், வெங்கட் சாமிநாதன். ஒவ்வொன்றையும் பேசிக் கொண்டிருக்க முடியாது, இல்லையா? இந்த நாள், இந்த கணத்தில் என்னைக் கவர்ந்தது ஈழ இலக்கிய ஆர்வம குறித்து வெங்கட் சாமிநாதன் சொன்னது. இதே சொல்வனத்தில் எழுதுகிற எம். ரிஷான் ஷெரீப் நானறிந்த வரை நன்றாகக் கவிதை எழுதுகிறார். அவரைப் பற்றி வெங்கட் சாமிநாதன் பார்வை எப்படியோ? தெரியவில்லை.
சொல்வனம் ரிஷான் ஷெரீப் போன்ற தமிழகத்துக்கு வெளியே வாழும், அவர்களின் வாழ்வைக் கூறும் படைப்பாளர்களின் ஆக்கங்களைக் கேட்டு வாங்கிப் பதிப்பிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்: "தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழுணர்வுக்கும் வெளியேயும் இருக்கிறது உலகம்" என்ற புரிதலையே நான் சொல்வனத்தின் முத்திரையாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் தென் முனையில் நீட்டிக்கொண்டிருக்கிற இந்த முக்கோணத்தோடு அடங்கி விடாமல், அதனினும் பரந்து விரிந்த ஒரு பன்முகப் பார்வையைக் காட்டும்போது அதில் ஒரு அந்நிய பாவனை வரத்தான் செய்யும். ஆனால் அதுதான் தமிழ்ப் படைப்பாக்கத்தின் எதிர்காலம்- "பைன் மரங்களையும் இனி தமிழன் பாடுவான்," என்று எங்கேயோ படித்தேன்: நீங்கள் குமுதத்திலேயோ விகடனிலோ பைன் மரங்களைப் பற்றி எங்கேயாவது படித்தீர்களா? பத்து இருபது ஆண்டுகளில் படிப்பீர்கள். இலுப்ப மரம் நம் நினைவை நீங்கி விடும்- பைன் மரங்கள்தான் நம் எதிர்காலம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுதான் நிஜம்.
---
இப்படி ஒரு எண்ணம வரக் காரணம் இந்தக் கட்டுரை- செருப்பால் அடித்த மாதிரி சொல்கிறார் நாஞ்சில் நாடன்- "ஆயுதக் கிடங்கில் நின்றாலும் எதையும் பயன்படுத்தத் தெரியாத ஒரு கோழையான சமூகத்துக்கு அந்த ஆயுதங்களால் என்ன பயன்?" என்று, நாம் நம் பாரம்பரியத்தில் அக்கறை இல்லாமல் இழக்கிற விஷயங்கள் குறித்து. அம்மா அப்பாவை டாடி மம்மி என்று கூப்பிட்டால்கூட தப்பில்லை, நம்மைச் சுற்றி இருக்கிற செடி கொடி புல் பூண்டு நம் கண்களுக்குத் தெரிகிறதா, நம் நினைவைத் தொடுகிறதா, நம் மொழி வழி அறியப்படுகின்றனவா?
காக்கை, குருவி, கொக்கு, புறா, கோழி, கழுகு இவற்றைத் தவிர உங்களுக்குத் தெரிந்த பறவைகளின் பெயர்களை சொல்லுங்கள், எவ்வளவு என்று பார்க்கலாம். ஒன்றாம் வகுப்பில் ஆனா ஆவன்ன்னா படிக்கும்போது இவற்றையும் படித்ததால் இந்த பறவைகளின் பெயர்கள் தப்பித்தன, இல்லையா? நம்மை சுற்றி எத்தனை செடிகள், மரங்கள். ஆனால் இந்த பாழாய்ப் போன மரமண்டைக்கு ஏதாவது தெரியும் என்கிறீர்கள்?
"அப்பா, இந்த செடி பேர் என்ன?" என்று கேட்கிறான் என் மகன். "இருடா கண்ணா," என்று சொல்லி விட்டு அதன் இலை மற்றும் பூக்களைக் கைபேசியில் புகைப்படமெடுத்து வலை ஏற்றி, கூகுளாண்டவரிடம் போய் இது போல் இருக்கிற வேறு இமேஜ்கள் கொண்டு வந்து தாரும் என்று விண்ணப்பித்து, "எப்படி லேட்டரலா யோசிச்சேன், பாத்தியா!" என்று பிள்ளையிடம் பெருமை அடித்துக் கொள்பவன் இந்தத் தமிழன்.
டீ, காப்பி இந்த எழவை எல்லாம் என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், நஷ்டமில்லை, ஆனால் நம்மைச் சுற்றி இருக்கிற தாவரங்களும்கூட முகவரி இழந்து வெள்ளைக்காரப் பெயர் வைத்துக் கொள்கின்றனவே, இதை என்ன சொல்ல?
"இப்படியே நமது வாசிக்கும் பழக்கம் பெருவழியிற் போனால், ஒரு ரூபாய்க் கூழ்த்தாள் தினசரிகளையும், சாலையோரச் சுவரொட்டிகளையும், ப்ளக்ஸ் தட்டிகளையும் மட்டுமே வாசிக்கும் அற்ப மாந்தராய் நாம் போய்விடுவோம் என்று கவலையாக இருக்கிறது. செம்மொழி என்பதன் பொருள் செத்துக்கொண்டிருக்கும் மொழி என்பதல்ல," என்று எழுதுகிற நாஞ்சில் நாடன் நல்ல எழுத்தாளர், ரொம்ப டீசண்டானவர். அவர் முகத்தில் அறைந்தாற்போல், மூக்கில் குத்துகிற மாதிரியெல்லாம் எழுத முயன்று பயனில்லை. அதற்கு வைவதற்கு பிஞ்ச செருப்பை தொழில் முறை ஆயுதமாக உபயோகிக்கிற நல்ல நான்காம் தர எழுத்தாளர்கள்தான் வர வேண்டும்- ஆனால் அதுவும் உறைக்காது, இல்லையா, அவர்களைக் காமடி பீசாக்கி விடுவோம்.
நல்ல இலக்கியத்தைதான் வாசிக்க மனமில்லை, நம் நினைவுகளை, நம் அப்பாவின் நினைவுகளை, தாத்தாவின் நினைவுகளைக் கூடவா வாசிக்காமல் அனாதையாக்கி அவர்கள் உலகத்தை நம் நினைவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்? தங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லித் தராமல் அதைவிட முக்கியமானது என்று உயர்ந்த, தரமான கல்வியை படித்த, பட்டம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நமக்கு பள்ளியில், புத்தகத்தில், பணம் கொடுத்து படிப்பிக்க வைத்தார்களே, அந்தப் பாவத்துக்கு நாம் செய்கிற கைமாறுதான் இது.
நாஞ்சில் நாடன் "தமிழரும், தாவரமும்" என்ற தலைப்பில் வெறுமே புத்தக அறிமுகம் செய்யவில்லை: நம் செல்வங்கள் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போன கருமாந்தரத்தைப் பதிவு செய்துத் தந்திருக்கிறார்- "நூலகக் கட்டிடம் கட்டி, மேஜை நாற்காலிகள் போட்டு, மின்விளக்குகள் காற்றாடிகள் அமைத்து, புத்தகங்களை விலைக்கு வாங்கி, அட்டவணைப்படுத்தி, அடுக்கி வைத்து, மனிதக்கரம் படாமலேயே மட்கும் அவலம் சங்கடப்படுத்துகிறது. இதற்கு மேல் எந்த அரசும் என்ன செய்ய இயலும்? மக்களுக்கு வாசிக்கும், தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லையே?"
தான் வசிக்கிற உலகத்தையே பெயர் சொல்லக்கூடத் தெரியாமல் புறம்போக விட்டு விட்டான், இதில் அதன் பதிவுகளைப் பிரதி எடுத்துப் புடம் போட்டு பதிப்பித்தனவற்றைப் படிக்க வேண்டுமாம்!- நல்ல கதை.
(சொல்வனம் முப்பதாம் இதழின் வாசிப்பு பாகம் இரண்டு இன்னும் ஓரிரு நாளில் தொடரப்படும்.)
:)