இது போன்ற எண்ணங்கள் நான் அண்மையில் படித்த ஒரு புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தைப் பற்றி எழுத நினைக்கையில் எழுந்தது. எழுத்தாளர்களைப் பற்றிய சுவையான சில விஷயங்கள்- இதில் தமிழில் எழுதுபவர்கள் யாரும் இல்லாததற்குக் காரணம் நான் படித்த புத்தகத்தில் அவர்களைப் பற்றிக் குறிப்பிடப்படாததுதான்- John Sutherland என்பவர் எழுதிய Curiosities of Literature (Arrow Books பதிப்பு), என்ற புத்தகத்தில் இலக்கிய சாதனைகள் என்ற ஒரு அத்தியாயம் சுவாரசியமாக இருக்கிறது.
அடுக்கு மொழித் தமிழை ரசித்து வளர்ந்த நமக்கு, தமிழில் எழுதி இருந்தாரென்றால் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த Anna Margaret McKittrick Ros இன்று ஆதர்ச எழுத்தாளராக இருந்திருப்பார். ஆனால் தமிழின் இழப்பு, அவர் ஆங்கிலத்தில் Irene Iddesleigh, Delina Delaney, Donald Dudley, Helen Huddleston, The Lusty Lawyer போன்ற நாவல்களையும் Fumes of Formation, Poems of Puncture ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் தன் மொழிக்குத்தான் கொடையாக வழங்க முடிந்தது-
"Sympathise with me, Indeed! Ah, no! Cast your sympathy on the chill waves of troubled waters; fling it on the oases of futurity; dash it against the rock of gossip; or better still, allow it to remain with the false and faithless bosom of buried scorn"என்று பட்டையைக் கிளப்பும் விதமாக தனது Irene Iddesleigh என்ற நாவலைத் துவக்குகிறார் இந்த அடுக்குமொழி அம்மையார்.
இதில் என்ன கொடுமை என்றால் இவரது சமகாலத்தவர்களான J.R.R. Tolkien, C.S. Lewis போன்ற இலக்கிய மேதைகள் ஒன்று கூடி யாரால் கொஞ்சம் கூட சிரிக்காமல் நீண்ட நேரம் இவர் எழுதியதைப் படிக்க முடிகிறது என்று தங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வார்களாம். இன்று ஆங்கிலத்தில் வெளியானவற்றில் மட்டமான எழுத்து இவருடையதுதான் என்று கொண்டாடப்படுகிறது. என்ன கொடுமை இது சரவணன், என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லை? (இல்லையா?- எத்தனை நாளைக்குடா இந்தப் பழைய பட வசனத்தைப் பேசப் போறீங்கன்னு கேக்கத் தோணுதா, எனக்கும் அப்படிதான். ஆனால் என்ன செய்வது, என் நண்பர் ஒருவர், "அவப்போது தமிழ்த் திரைப்படங்களைத் தொட்டு எழுதினால்தான் நீ எழுதுவதைப் படிக்கிறவர்கள் ரசிப்பார்கள்" என்று சொல்லி இருக்கிறார்).
சிறந்த எழுத்தாளர் யார் என்று சொல்ல முடியாது- அது நானாகக்கூட இருக்கலாம் என்று நம்மில் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிகம் எழுதியவர் யார் என்று சொல்லி விடலாம், அதற்கு பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் போதும்.
அதற்கு முன் விரைவாக எழுதியவர்கள் யார் யார் என்று பார்த்தால் வியக்க வைக்கும் விஷயங்கள் வெளி வருகின்றன-
Mickey Spillane தனது I, the Jury என்ற நாவலை ஒன்பதே நாட்களில் எழுதி முடித்தாராம். அது மூன்று ஆண்டுகளில் ஏழு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாம். இவ்வளவு விரைவாக எழுதக்கூடிய அவர், எப்படி எழுதுவது என்று கவலைப்படுவார் என்கிறீர்கள்? ஒரு தடவை அவர் எழுதி வைத்திருந்த The Body Lovers என்ற நாவலின கைப்பிரதி காரோடு சேர்த்து திருட்டுப் போனபோது கொஞ்சம்கூட அசரவில்லை மனுஷன். "மூன்று நாட்கள் மெனக்கெட்டால் போதும், நாவலைத் திரும்ப எழுதி விடுவேன்- ஆனால் தொலைந்து போன கார் கிடைக்குமோ கிடைக்காதோ," என்றுதான் கவலைப்பட்டாராம்!
Mickey Spillane போன்ற குப்பை எழுத்தாளர்கள் எழுதிக் குவிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று மேதாவித்தனமாக நினைப்பீர்களேயானால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி- மூன்றே நாட்களில் எழுதிக் காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டு Alexander Dumas, Le Chevalier de Maison Rouge என்ற நாவலை எழுதி முடித்தார். "அவரும் குப்பைதான்," என்கிறீர்களா? எனக்குத் தெரியாதைய்யா, அவரது நாவல் ஒன்றை எனக்குப் பள்ளியில் உப பாடமாக வைத்திருந்தார்கள்.
Dumasக்கு உதவியது காப்பி- On the Road என்ற அதிநவீனத்தை எழுதிய Jack Kerouacக்கும் அதுதான் பெட்ரோலாக இருந்தது. ஒரே வேறுபாடு, அவர் அதில் Benzedrine குளிகைகளைக் கலந்தடித்தாராம்- தான் ஒரு தடவை எட்டே வாரங்களில் இருநூறு சிறுகதைகளை எழுதிக் குவித்ததாகப் பெருமை அடித்துக் கொள்கிறார் இவர்: அவற்றில் எத்தனை வெளியானது என்ற தகவல் இல்லை.
நிறைய பேர் அதிகமாக எழுதி இருக்கிறார்கள்- John Creasey 564 நாவல்கள் எழுதி இருக்கிறார் என்றால் சில எழுத்தாளர்களுக்கு ஒரு கல்ட் பிகராகவே இருந்த பிரஞ்சு எழுத்தாளர் Simenon 500 நாவல்களை எழுதியிருக்கிறார்: ராஜேஷ் குமார் எவ்வளவு எழுதி இருக்கிறார் என்று தெரியாது, ஆனால் நிச்சயம் அவர் நம்மூர் இலக்கியவாதிகளின் பட்டியலில் இருக்க மாட்டார். அதே மாதிரி Simenon தான் தன் வாழ்நாளில் ஆயிரம் இரவுப் பெண்டிரோடு சல்லாபித்திருந்ததாக ஒரு சாதனையைச் சொல்லிக் கொள்கிறார்- அந்த சாதனைக்கும் போட்டி போடக்கூடிய ஒரே தமிழ் எழுத்தாளர் யார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
அடுத்தது, பெரிய நாவல்கள் என்று பார்த்தால் ஆங்கில நாவல் இலக்கியத்தின் முன்னோடியாக இருந்த Samuel Richardsonன் Clarissa ஒரு லட்சம் சொற்களைக் கொண்ட தலையணை. தமிழில் இது போன்ற நாவல்கள் வெளிவர வேண்டும் என்று இன்னமும் சொல்கிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கிப் படிக்க வாசகர்கள்தான் தயாராக் இல்லை.
ஆங்கில இலக்கியத்தில்- பதிப்பிக்கப்படுவன எல்லாம் இலக்கியம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால்- ஆரோக்கியமான நிலை இருக்கிறது. Stephen Kingன் The Stand என்ற நாவல் 4,64,216 சொற்களால் வடிவமைக்கப்பட்ட காவியம். தங்களில் யார் பெரிய எழுத்தாளர் என்று சண்டை போடுகிறவர்கள், தாங்கள் எழுதிய படைப்புகளைக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்ளலாம் என்று அனுமதித்தால் Stephen Kingஐ அடிக்க ஆள் கிடையாது- அவரது எதிரிகளால் இந்த காகித மலையோடு மோத முடியும் என்கிறீர்கள்? அவ்வளவு ஏன், இந்த நாவல் கை தவறி உங்கள் காலில் விழுந்தால் கதை கந்தல்தான்.
ஆனால் இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. நம்ம ஊர் Vikram Sethன் The Suitable Boy 5,91,554 சொற்களைக் கொண்ட அரும்பெரும் காப்பியம். அதற்கு வாசகர்கள் தந்த மாபெரும் வரவேற்பின் விளைவு, தனது அடுத்த நாவலில் தான் எழுதுகிற நூறு சொற்களுக்கு மேல் இருக்கிற ஒவ்வொரு பத்தாயிரம் சொற்களுக்கும் ஒரு விரலை வெட்டித் தருவதாக Vikram Seth வாக்கு கொடுத்திருக்கிறார். இன்னமும் அவரது அடுத்த நாவல் வெளிவரவில்லை.
இதெல்லாம் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சாதாரண எழுத்தாளர்கள் பற்றிய விபரம்தான். அசாதாரண எழுத்தாளர்கள் மூவர் பற்றிய குறிப்பு படித்தேன்- அது எனக்கு எழுதுபவர்களை விட எழுத்தின்மேல் பிரமிப்பு வரச் செய்தது-
Larry Eigner, Christy Brown இருவரும் Cerebral Palsyயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் லாரி ஐக்னர் வலது கை ஆட்காட்டிவிரல் கொண்டு தட்டச்சு யந்திரத்தைப் பயன்படுத்தி கவிதைகள் எழுதினாராம். அதிலும் இவரால் தொடர்ந்து தட்டச்சு செய்ய இயலாது என்பதால் விட்டு விட்டு விடாமுயற்சியோடு தட்டச்சு செய்து இந்த சாதனையைச் செய்திருக்கிறார். எழுத்து இவருக்கு வேள்விதான். இவரது கவிதைகள் L=A=N=G=U=A=G=E என்றக்கப்பட்ட கவிதை இயக்கம் பிறக்கக் காரணமாக இருந்தது என்கிறார் சதர்லன்ட். அப்படியானால் இவர் நல்ல கவிஞராகதான் இருந்திருக்க வேண்டும்.
கிறிஸ்டி ப்ரௌன் ஐந்தாவது வயது வரை மூளை வளர்ச்சி இல்லாதவராகவே வீட்டிலுள்ளவர்களால் நினைக்கப்பட்டார். ஒரு நல்ல நாளன்று தன் வீட்டில் கீழே கிடந்த சாக்குக் கட்டியை தனது இடது காலால் எடுத்து அகர முதல -"A" என்ற எழுத்து- எழுத முயன்றாராம். இவர்தான் பிறவி எழுத்தாளர், இல்லையா? இதைப் பார்த்தபின்தான் அவரது குடும்பத்தினர் இவர் குறித்த உண்மை நிலையை அறிந்தனர். எல்லா தாய்களையும் போலவே, தன் மகனின் திறமை மீது எதனாலும் குலையாத திட நம்பிக்கை வைத்து அவரது தாயார் அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தந்தார். எந்த பள்ளிக்கும் போகாமலேயே, சுயமாகப் பயின்று- அதிலும் சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களைப் படித்து எழுத்தாளரானார் இவர்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இடது கால் பெருவிரலைக் கொண்டு தட்டச்சு செய்து இவர் எழுதிய சுயசரிதை, "மை லெப்ட் புட்"! அது விற்பனையில் சாதனைகள் செய்து அதன் பின் திரைப்படமாகி பாராட்டுகள் பல பெற்ற கதை உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.
இது எல்லாவற்றையும் மிஞ்சும் சாதனை Jean-Dominique Bauby செய்தது. ஒரு பிரபல பாஷன் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்த அவர் ஒரு நன்னாளன்று முடக்கப்பட்டார். அன்று அவர் தன்னால் தனது உடலின் வலது கண்ணிமையைத் தவிர வேறு எந்த உறுப்பையும் அசைக்க இயலாத நிலையை அடைந்தார். அவரது உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்- அவர் தனது வலது கண்ணிமையை இமைப்பதன் மூலம் எந்த எழுத்தை எழுத வேண்டும் என்று டிக்டேட் செய்வார். இப்படி ஏறத்தாழ இரண்டு லட்சம் தடவை கண்ணடித்து இவர் எழுதிய Le Scaphandre et le Papillon என்ற சுயசரிதை The Diving Bell and the Butterfly என்ற அற்புதமான திரைப்படமாக வெளிவந்தது.
ஏன் எழுதுகிறோம்? ஏதோ ஒரு உந்துதல். நான் சிறந்த எழுத்தாளன், எனது எழுத்துகளுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்ற பெரும்புலவர்கள், காவியகர்த்தாக்களின் புலம்பல்களுக்கு அப்பால், எழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் இந்த உடற்கூட்டில் சிறை பிடிக்கப்பட்ட மனப்பறவையின் சங்கீதமாயிருக்கிறது. இன்றைக்கு பாருங்கள்: குழுமங்கள், பேஸ்புக், டிவிட்டர், வலைமனைகள் என்று எங்கெங்கும் எழுத்து இருப்பின் தனித்துவத்தைப் பாடியபடி உள்ளது.
இது சொற்களின் பொற்காலம், இல்லையா?