Contact/ தொடர்பு கொள்க

புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சொல்வனம் முப்பத்திரண்டு - I

சொல்வனம் முப்பத்து இரண்டில்  ஆக்கங்கள் என்று பார்த்தால் பதினொன்று வந்திருக்கிறது- ஆனால் அருண் நரசிம்மனின் ராகம் தானம் பல்லவியைக் காணவில்லை என்பது ஒரு குறைதான்.



அழகான பார்சலோனா கடலை பார்வையிட்டபடி ராம்ப்ளாஸ் என்ற செழிப்பான பகுதிக்குள் அப்பாவும் மகனும் நுழைந்தனர். அங்கிருந்த ஒரு வாத்தியக்கருவி கடைக்குள் அடிவைத்த அச்சிறுவன் வேறொரு உலகுக்கு கால இயந்திரத்தில் ஏறியது போல் மாய உலகினுள் நுழைந்தான். அக்கடையில் பழைய இசைக்குறிப்புகள் தொகுப்புகளாகக் குவிந்து கிடந்தன. தன் ஊரில் பார்த்திராத இசைக்குறிப்புகளை பெயர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை என இலக்கின்றி தேடினான். ஆர்வமிகுதியால் அக்கூடையைக் கிளறும் போது செபாஸ்டியன் பாக் அமைத்த `வயலின்செல்லோ கருவிக்கான ஆறு பகுதிகள்` (Six Sonatas or Suites for ViolinCello by Sebastian Bach) இசைக்குறிப்பு சிறுவனின் கைகளில் சிக்கியது.
இசை உலகின் உன்னதமான காலம் அந்நிமிடத்தில் தொடங்கியது. துறைமுக மரங்களில் மோதிய அலைகள் ஆங்காங்கு அப்படியே நின்றன; பல நிகழ்வுகள் தங்கள் இயல்பிலிருந்து நழுவின. தேவதூதன் பிறந்த செய்தியைத் தெரிவித்த நட்சத்திரங்கள் போல உலகின் மூலைகளில் இருந்த பல இசை ஆர்வலர்கள் மனதில் மணி அடித்தது
என்று துவங்குகிறார் ரா கிரிதரன் தனது பாப்லோ கசல்ஸ் கட்டுரையை.

எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் உண்மையைச் சொல்கிறேன்- கதை எழுதுவது கட்டுரை எழுதுவது போல் எளிதல்ல- அதிலும் கட்டுரையை கதை போல் எழுதுவது மிகக் கடினம். ஆனால் முதல் வாக்கியத்தில் தொடங்கி. திரைப்படத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிற மாதிரி பாப்லோ கசல்ஸ் பற்றி எழுதி இருக்கிறார் ரா கிரிதரன். இசை பற்றி கொஞ்ச நஞ்ச அறிவுகூட இல்லாதவர்களுக்கும், "யார் இந்த கசல்ஸ்? என்ன சாதித்து விட்டார்?" என்று மேற்கொண்டு படிக்கிற ஆர்வம் எழுகிற மாதிரி எழுதுகிறார்.
ஆர்ப்பரிக்கும் கடலலைக்கு முன் அவர் நின்றுகொண்டிருந்தார். அலை ஓசையைத் தாண்டி நீலக்கடல் ஆழத்தின் கனத்த ஓலம் மட்டும் அவருக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தது. செல்லோவின் கீழ் சுருதி ஒலி நினைவுக்கு வந்தது. தன் பங்களா இருந்த பகுதியைத் திரும்பிப் பார்த்தார். ஓங்காரமான செல்லோ இசை மூலம் அந்நகரத்தின் ஆழ்ந்த மெளனத்தைக் கலைக்க முற்படலாம். ஆனாலும், கடலலையை மீறி எதுவும் செய்ய முடியாது என்பது நிச்சயம். எங்கோ வெடித்த துப்பாக்கிச் சத்தம் நகரத்தை மேலும் மெளனமாக்கியது. நகரை அரவணைத்த குரூரமான பேரமைதி கலைந்து மக்களிடையே குதூகலம் திரும்பும்போது செல்லோவை இசைத்தால் போதுமெனத் தான் எடுத்த முடிவின் தீவிரம் முன்னைவிட அதிகமானது.
-ரா கிரிதரன் - பாப்லோ கசல்ஸ்




இந்த சொல்வனம் இதழில் எனக்குப் பிடித்த வரி இதுதான்: "தனிப்பட்ட வலைப்பதிவுகளுக்கும் இணையப் பத்திரிகைக்கும் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு என்றே நம்புகிறேன்."- இது ஹரன் பிரசன்னா எழுதிய எதிர்வினையில் இருக்கிறது.

ஒருவர் எழுதியது இணையப் பத்திரிக்கையில் வெளியாகிறது என்றால், என்னதான் அது அவரது தனிக் கருத்து என்று சொன்னாலும், அந்தக் கருத்துக்கு ஒரு நிறுவனம் சார்ந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது போன்ற தோற்றம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

நான் கூகுள் ரீடரே கதியென்று கிடக்கிறவன். அதில் வலை தளங்களை வெவ்வேறு போல்டரில், அவற்றில் தொனி மற்றும் மையக் கருத்துக்கேற்ப, சேர்த்து வைத்திருக்கிறேன். அந்த போல்டர் ஒவ்வொன்றும் அவற்றின் உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட சார்பு உடையதாக (நகைச்சுவை, திரைப்படம், தீவிர இலக்கியம், மேம்போக்கு இலக்கியம், செய்தி, பைத்தியக்காரர்கள், வலை உலகம் என்று) இருக்கிற காரணத்தால்  வாரம் ஒரு முறை படிக்கிறபோது அவை இணைய இதழை ஒத்தனவாக  இருக்குமா? இருக்காது என்பதற்கு முக்கிய காரணம், அவற்றுக்கு ஒரு பொதுப்படையான பார்வை இல்லை என்பது மட்டுமல்லாமல் ஒரு குழுவினர் இணைந்து தருகிற நிறுவன அங்கீகாரம் கிடையாது என்பதும்தான்.

தனி நபர்களுக்கு எழுதச் சுதந்திரம் கொடுக்கிற அதே வேளை, அவர்களிடமிருந்து ஒரு குறைந்தபட்ச எழுத்துத் திறன், எழுது பொருளின் பொருத்தம், எல்லாவற்றுக்கும் மேலாக நம் நோக்கங்களுக்கு முரண்படாத கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பது குறித்த பிரக்ஞை இவற்றை எந்த இதழும் எதிர்பார்க்கும். அப்படி இல்லாவிட்டால் ஒரு இதழைப் படித்த திருப்தி கிடைக்காது: பார்வையின் நீட்சியில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அதன் மையத்தில் ஒரு ஒழுங்கு இருப்பதுதான் பத்திரிக்கைகளின் இருப்புக்கான குறைந்த பட்ச அடையாளம். அந்த வகையில் ஒரு தனி நபரின் பதிவு, கட்டுரை என்ற கிடைகளை  மீறி, அது ஒரு இதழில் வெளியாகிறபோது,  குழு என்று சொல்லக் கூடாது, ஒரு முறைப்படுத்தப்பட்ட பார்வை மூலம் தெரியவரும் காட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது என்று நினைக்கிறேன்- அப்படி இல்லாவிட்டால், வலைதளங்களில் நான் காண்கிற சுவையான பதிவுகளைப் பற்றி எழுதாமல் சொல்வனத்தில் வருகிற கட்டுரைகள் என்று மதிப்பு கொடுத்து நான் ஏன் எழுதப் போகிறேன்? நாலு பேர் அங்கீகரித்துப் பதித்த படைப்பு என்ற அடையாளம் இருப்பதனால்தானே!

ஆனால் நான் முன் சொன்னது நாஞ்சில் நாடன் போன்ற நிறுவனர்களுக்குப் பொருந்தாது- அவர் எங்கு எழுதினாலும் தன் மனதுக்குப் பட்டபடிதான் எழுதுவார் என்று நமக்குத் தெரியும். ஆனால் அருணகிரி போன்றவர்களின் எழுத்தைப் படிக்கும்போது நாம் அவரது தனிக்கருத்தையும் மீறி அதை சொல்வனத்தின் குரலாய்தான் கேட்கிறோம் என்று தோன்றுகிறது.



நாஞ்சில் நாடன் என்று சொன்னேனே, அவர் இந்த இதழில் செங்கோட்டை ஆவுடை அக்காளின் பாடல்கள் குறித்து எழுதி இருக்கிறார்.யதேச்சையாக இந்த இதழ் வெளிவருவதற்கு ஓரிரு நாட்கள் முன்   பாவண்ணனும், அவர் எழுதியதன் எதிர்வினையாக கல்பனா சேக்கிழார் தனது வலைமனையிலும் இவரைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். மூன்றுமே தரமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. நாஞ்சில் நாடன், பெருமளவில் ஆவுடை அக்காவின் பாடல்களுக்கும் பாரதி பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை மெச்சி எழுதி இருக்கிறார். பாவண்ணனது கட்டுரையில் அதோடுகூட அவரது ஆன்மிகம் குறித்த விவாதமும் இருக்கிறது. பாவண்ணன்,
பெண் கவிஞர்களை வரிசைப்படுத்தும் ஒவ்வொரு வரும் காக்கைப்பாடினியாரிடம் தொடங்கி, ஒளவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் வரைக்கும் வந்து, பிறகு ஒரே தாவலில் நவீன கவிதையாசிரியர்களிடம் கொண்டுவந்து முடிப்பதுதான் வழக்கம். அது எவ்வளவு பிழையானது என்பதுதான் அக்காவின் பாடல்களைப் படித்துமுடித்ததும் தோன்றிய முதல் கருத்து. அக்காவின் பெயரை இணைத்துக்கொள்ளாமல் இனிமேல் எந்த இலக்கிய வரலாறும் எழுதப்படக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன். இலக்கிய வரலாற்றில் தேடிப் பார்த்தால் இன்னும் பல அக்காக்கள் கிடைக்கக்கூடும். அவர்களைக் கண்டடைவது நம் கடமை
என்று எழுதுகிறார். நாஞ்சில் நாடனும் ஆவுடை அக்காளை உயர்த்தியே எழுதுகிறார்-
ஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஆவுடையக்காள் பாடல்களை திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட அந்தணப் பெண்டுகள் பூஜாகாலத்தில் பாராயணமாகவும், கல்யாண காலங்களிலும் பாடினார்கள் என்றும் தெரிகிறது
.ரமணர், மதுரைப் பக்கத்தில் ஆவுடை அம்மாவின் பாடல்கள் மிகப் பிரபலமாக இருந்தன என்று சொல்லியிருப்பதாகப் படித்த நினைவு.

இந்தக் கட்டுரைகளில் ஆவுடை அக்காளின் குரு திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் என்பது தெரியப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். எனக்கும் அது தெரிந்திருக்காது: ஆண்டுதோறும் என் நண்பரொருவர் அவரது கிராமத்தில் ஐயாவாளுக்கு ஆராதனையோ  எதுவோ செய்யும்போது அதையொட்டி இருப்பத்தைந்து ரூபாய் வசூலிப்பார். ஒரு தடவை, கையில் காசு இல்லாததாலோ என்னவோ, அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தராமல் விட்டு விட்டேன். அதற்கப்புறம் அவர் என்னிடம் கேட்கவே இல்லை.


ச. திருமலைராஜனின் விக்கிலீக்சை எந்த இதழில் எங்கு வெளி வந்தக் கட்டுரையோடும் ஒப்பிட்டு சிறப்பிக்கலாம். கோர்வையாக, தெளிவாக, ஆர்ப்பாட்டமில்லாத நடையில் சுவாரசியமாக விஷயத்தை சொல்கிறார். இதைப் படிக்கும் எவருக்கும், விக்கிலீக்ஸ் குறித்து பிரமிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனக்கு இந்தக் கட்டுரையில் ஒரே ஒரு குறைதான்=
இதுவரை விக்கிலீக் 5 லட்சம் பக்கங்களிலான பல்வேறு ஊழல்களின் உண்மைகளைத் தன் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. கென்யாவில் நடந்த படுகொலை பற்றிய உண்மைகள், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் சிவிலியன் மக்களைத் தவறுதலாகக் கொன்ற ஹெலிகாப்டர் தாக்குதல், அமெரிக்க துணைஜனாதிபதியாகப் போட்டியிட்டு ரஷ்யா தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும் என்பதால் தனக்கு வெளியுறவுத் துறை அறிவு இருக்கும் என்று உளறிய சாராப் பெல்லனின் தனி யாகூ இமெயில்கள், ஐரோப்பாவின் சில வங்கி ஊழல்கள், க்ளைமேட் சேஞ்ச் அமைப்பில் நடந்த ஊழல்கள், செப்டம்பர் 11 தாக்குதலின் பொழுது விமானங்களில் இறந்தவர்கள் செல்ஃபோனில் பரிமாறிய பேச்சுக்கள் ஆகியவற்றை விக்கிலீக் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
என்று திருமலைராஜன் எழுதுகிறார். ஆனால் விக்கிலீக்ஸ் கிளைமேட் சேன்ஜ் அமைப்பில் நடந்த ஊழல்கள் என்று சில ஈ மெயில்களை வெளியிட்டதே, அது பரபரப்பை உண்டாக்கியதே அன்றி எந்த ஊழலையும் நிருபிக்கவில்லை- இது குறித்த சுட்டி இங்கே.  அந்த ஈ மெயில்களில் என்னதான் இருந்தது என்ற விவரங்கள் இங்கே.

விக்கிலீக்சின் வீக்னஸ் க்ளைமேட்கேட் விவகாரத்தில் வெளிச்சமாகியது- பூமி வெப்பமாகிக் கொண்டு வருகிறது என்று சொன்ன விஞ்ஞானிகளின் இமெயில்களை ஹாக் செய்து, அதிலிருந்து தேர்ந்தெடுத்த முத்துகளை விக்கிலீக்கில் பதித்தார்கள்.

பொதுவாக, ஒரு விஷயத்தைக் குழுவாகப் பேசும்போது, எதிர்த்தரப்பினரை எப்படி ஜெயிக்கலாம் என்ற கோணத்தில்தான் பேசுவோம்: சில உண்மைகளை மறைக்கலாம் என்று சொல்வோம், சில ஆதாரங்களை 'ஹைலைட்' பண்ணலாம் என்று சொல்வோம்- பொதுவாக ஒன்று சொல்லலாம், நம் இமேயில்களின் ஆதாரம்  கொண்டு  நம்மை எடை போட்டால் நம்மில் எவரும் நம்மை நேர்மையானவராகக் காட்டிக் கொள்ள  முடியாது. கிளைமேட்கேட்  விவகாரத்தில் அதுதான் நடந்தது- அறிவியல் ஆதாரங்கள் இல்லாத நிலையில், இமேயில்களின் அடிப்படையில் அந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் ட்ரௌசரை உருவி அவர்களை அசிங்கப்படுத்தி அவர்களது நம்பகத்தன்மையைக் குலைக்கும் முயற்சிக்கு விக்கிலீக்ஸ் பயன்பட்டது- அவ்வளவுதான்.  கடைசியில் சதி /ஊழல் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றுதான் முடிவானது.

திருமலைராஜனின் கட்டுரையிலேயே, விக்கிலீக்ஸ் பல உண்மைகளை அம்பலப்படுத்தி விட்டது என்று சொல்கிறார்- ஆனால், அதனால் ஒரு விளைவும் இல்லை என்பதுதான் நிஜம். அதற்கு அப்புறம்தான், பாகிஸ்தானில் வெள்ளம் வந்து அது பயங்கர இழப்பீட்டை சந்தித்த நிலையில், இந்தியா அவர்களுக்கு பண உதவி செய்யத் தானாக முன்வந்தது; பாகிஸ்தான் அதை வாங்கிக் கொள்ள மறுத்து, அமேரிக்கா அண்ணன் வாங்கிக் கொள்ளச் சொல்லி கையை முறுக்கிய நிலையில் வேண்டா வெறுப்பாகப் பெற்றுக்  கொண்டு, "என்ன செய்வது, இந்தியா கொடுக்கிற காசை வாங்க  மறுத்தால் நமக்கு இந்தியாவோடு நட்புறவு கொண்டாட ஆசை இல்லை என்று உலக நாடுகள் முடிவு பண்ணி விடும்," என்று வெளிப்படையாகவே புலம்பவும் செய்தது!

ஆனால் விக்கிலீக்ஸ் அசாத்திய சாதனை, அதன் நிறுவனர்  அஸ்ஸாஞ்சே  பலவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாத தைரியசாலி என்பதை மறுப்பதற்கில்லை. அவர் கொடுத்த டெட் டாக் இங்கே- 




தற்போது வெளிவந்திருக்கிற விக்கிலீக்ஸ் ஆவணங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட வீடியோ பாருங்கள்- கண்ணி வெடித் தாக்குதல்கள் நாட்பட நாட்பட அதிகரித்துப்  பரவி, அமேரிக்கா ஆப்கானிஸ்தானில் தோல்விமுகம் காண்பதை எவ்வளவு அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்! இந்த ஒரு ஆதாரம் போதும், அனைத்துக்கும் மேலாக, அமெரிக்காவின் முயற்சிகள் ஆப்கானிஸ்தானில் விழலுக்கிறைத்த நீராக வீண் போவதை அரிய.



என்னைப் பொறுத்தவரை, இந்த வீடியோ விக்கிலீக்சின் சாதனை என்று சொல்வேன்- போரென்று வந்தால் மனிதம் செத்துப் போய் விடுகிறது- ஹெலிகாப்டரில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்க வீரர்கள் குருவி சுடுவதுபோல் மனிதர்களைச் சுடுகிறார்கள் பாருங்கள். இந்த  வீடியோ எடுத்தது உட்பட அசாஞ்சே குறித்த விவரங்கள் நியூ யார்க்கரில். 



இது எல்லாம் திருமலைராஜனின் விக்கிலீக்ஸ் கட்டுரையில் விட்டுப்போனவை என்று சொல்ல மாட்டேன்- இவை அவருக்குத் தேவை இல்லாதவை. விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தி உள்ள ஆவணங்கள், அமெரிக்க அரசின் தவறான கொள்கையை, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை எப்படித் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன என்பதை பாய்ண்ட் பாய்ண்டாக எழுதி இருக்கிறார் அவர். முன்னமேயே சொன்னதுபோல், அவர் சொல்வனத்தில் எழுதி இருக்கிற இந்தக் கட்டுரையை எந்த இதழில் எங்கு வெளி வந்தக் கட்டுரையோடும் ஒப்பிட்டு சிறப்பிக்கலாம்.


இவ்வளவு கஷ்டமான வாத்தியத்தை ஒரு தொன்னூறு வயது முதியவர் எப்படி வாசிக்கிறார் என்று பார்க்கவேண்டும் என்று பெரும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்காகவே அடுத்த ஆகஸ்ட் பதினைந்தன்று அந்த சர்ச்சிற்குச் சென்றேன். தள்ளாடும் வயோதிகத்தில் இருந்த அவரை இருவர் தோள் கொடுத்து நடத்தி வந்து ஆர்கன் முன் அமரச் செய்தனர். உடனே அவர் ஒரு இருபது வயது வாலிபரின் துள்ளலுடன் சற்றும் கூனாது நேராக நிமிர்ந்து சபையை ஒருமுறை திரும்பிப் பார்த்து மோதித்துவிட்டு, அந்த ஆர்கனில் கை (காலும்) வைத்ததுதான் தாமதம், அதுவரை நான் கேட்டிராத ஒரு கம்பீர நாதம் எழுந்தது. அந்த ராட்சத வாத்தியம் ஜல்லிக்கட்டில் அடங்கிய காளை போல அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டது. அந்த ஆர்கனில் ராணுவக்குழு கூட்டு முயற்சியாய் வாசித்தப் பல்வேறு இசை பாகங்களைத் தனி ஒரு மனிதராய் இவர் கால்களாலும் கைகளாலும் ஒரு சேர வாசித்துக் கேட்ட தேசியகீதம் என் மனதுக்கு இனி எப்போதுமே நெருக்கமாக இருக்கப்போகும் ஒன்று
என்று நமது தேசிய கீதம் குறித்த தன் கட்டுரையை முடிக்கிறார் விக்கி. ஆனால் அங்குதான் கட்டுரையே துவங்குகிறது- இதைப் படித்தபின், மீண்டும் முதலிலிருந்து இரண்டாம் முறை படிக்கத் தூண்டுகிறது இவர் எழுதியிருக்கும் விஷயம். இரண்டாம் வாசிப்பு கூடுதல் பொருளும் தருகிறது.

நமது தேசிய கீதத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை (தேசிய கீதத்தையே நினைப்பது இல்லை என்பது வேறு விஷயம்- நான் பள்ளியில் படிக்கிற நாட்களில் திரை அரங்குகளில் படத்தை முடிக்கும் போது திரை விழும் பின்னணியில் அதை இசைப்பார்கள்- ஒரு கடமை உணர்ச்சியின் உந்துதலில் பாட்டு நிற்கும்வரை அசையாமல் இருப்போம். இன்றோ ஜன கண மணவை கடைசியாக எப்போது கேட்டேன் என்பது கூட நினைவிலில்லை!)


சொல்வனம் முப்பத்தொன்று - 2

நான் ஒன்றும் பெரிய யோக்கியன் இல்லை.

எந்த நேரத்தில் ராமன் ராஜா நன்றாக எழுதுகிறார், சக்கை போடு போடுகிறார், style wins over substance - என்றெல்லாம் சொன்னேனோ, இந்த சொல்வனத்தில் சொதப்பி விட்டார். இதை சொல்லக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது? எனது நண்பர் ஒருவர், இதைப் பற்றியெல்லாம் எழுத மாட்டீர்களா என்று கேட்ட பின்னும் நேரமில்லை அது இது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இவரை மாதிரி நண்பர்கள் இருக்கிற வரை என்னால் மனசாட்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு நிம்மதியாய் இருக்க முடியாது. நீங்க நல்லா இருங்க ஐயா!

ராமன் ராஜா DSM மீது பல நியாயமான குற்றங்களைக் கூறி இருக்கலாம். ஆனால் DSMஇல் நோய்களை வகை பிரித்து பேர் சூட்டி இருப்பதே மருத்துவ நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் என்று சொல்லியிருப்பது ரொம்ப ஓவர். இது தீவிர இடதுசாரி அல்லது வலதுசாரி என்று ஏதோ ஒரு சாரியில் போகிறப் பத்திரிக்கையில் வந்திருந்தால் தனியாகத் தெரிந்திருக்காது: ஆனால் பன்முகப் பார்வைகளை வழங்குகிற  சொல்வனத்தில் பொருத்தமில்லாமல் தனியாகத் தெரிகிறது.

இந்த விஷயத்தைப் பேசும்போது இன்னொரு குறையும் சொல்லத் தோன்றுகிறது: கட்டுரைகளை எழுதுகிறவர்கள் கூடுமானவரை சுட்டிகளைத் தர வேண்டும். புத்தகம் என்றால் பெயர் மற்றும் பக்க எண்கள், வலையில் கிட்டுகிறதென்றால் உரலி. அதுதானே நியாயம்? ராமன் ராஜா நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகிறார், ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவைகள் சொல்லப்படுகின்றன என்பதை உணர்த்த ஒரு சுட்டி கூட இல்லை. ஒரு அறிமுகக் கட்டுரை, நகைச்சுவை கட்டுரை என்றால் பரவாயில்லை- தலையங்கத்துக்கு ஒப்பான கனமுடைய விஷயத்தை எழுதும்போது சுட்டிகளை நிராகரிப்பது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை.

DSM குறித்து மேற்கத்திய நாடுகளிலேயே தீவிரமாக விவாதிக்கிறார்கள்: சில சுட்டிகள்:
ராமன் ராஜா ADHD மற்றும் அநியாயத்துக்கு நோய்களை வரையறுத்து மருந்து தருவது குறித்துத் தெரிவித்த கருத்துகளை ஒத்த சுட்டி இங்கே.  இது தவிர ஏறத்தாழ எல்லாரையுமே மனநோயாளிகள் என்று சொல்கிற வகையில் DSM வரையறை செய்கிறது என்று சொல்பவர்கள் இங்கே, இங்கே, இங்கே. இது போல் இன்னம் பல தரலாம் உதாரணத்துக்கு  இங்கேயும் ஒன்று. இதன் அபத்தங்கள் இங்கே.

இப்படி சுட்டி தருவதால் இண்டர்நெட்டைப் பார்த்து கட் அண்ட் பேஸ்ட் செய்கிறான் என்று சொல்வார்கள்- சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டு போகட்டும். ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள், விஞ்ஞானிகள்கூட, சுட்டி தரத் தயங்குவதில்லை. சுட்டிகள் தருவது நம் வாதத்துக்கு வலு சேர்க்கிறது என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அமெரிக்க DSM நமக்குப் பொருந்தாது என்று நான் சொல்வதானால் இதுதான் காரணமாக இருக்கும்.

ராமன் ராஜாவின் கட்டுரைக்கு எதிராக இன்னொரு விஷயத்தை சொல்லலாம்- அவர் ரொம்ப எளிமைப்படுத்தி இருக்கிறார் என்று- என் நண்பரின் குற்றச்சாட்டு, குறிப்பாக இது குறித்தே-
"DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர். 
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது. 
அடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள்! 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு. 
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில்! இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு"
இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்- நம்மைப் போன்ற பொது மக்கள், இந்த மருந்து மாத்திரைகளின் பயனாளர்கள் இப்படி பேசவும் செய்கிறார்கள். ADHD என்றொரு பிரச்சினை இல்லை என்று சாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதன் அடிப்படை, நோய்க்கூறுகள் நம்பத்தகுந்தனவாக இருப்பினும் இல்லாவிட்டாலும், இந்த மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளில் பலர் நன்றாகவே இருக்கிறார்கள்.

நான்கூட, இப்படிப்பட்ட பிள்ளைகளைதான் நாம் மக்கு என்று படிக்கும் காலத்தில் ஒதுக்கி வைத்தோம் என்று நினைத்ததுண்டு. ADHDக்கு மருந்து சாப்பிடுகிற குழந்தைகள் அதனால் பயனடைவது கண்கூடான ஒன்று. இதை எந்த மனநல மருத்துவரைக் கேட்டாலும் சொல்வார்கள்.

இந்த விஷயத்தில் அநியாயத்துக்கு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லியிருக்க வேண்டாம், அதன் பயன்களை நோக்காமல் ஒரேயடியாக பயம் காட்டி இருக்க வேண்டாம்: ஒருதலைபட்சமாக எழுதி இருப்பது சரியாகத் தோன்றவில்லை. மருந்துக் கம்பெனிகளின் கையாளாக DSM மாறி விட்டது என்பது போன்ற தொனி அவசியமில்லாத ஒன்று, அவ்வளவு நியாயமில்லாத ஒன்றும் கூட. முன்னமேயே சொன்னதுபோல் இது தீவிர சாரிப் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே உரிய பார்வை: தன் கருத்துகளுக்கு எதிர் தரப்பு இருக்கக்கூடும் என்பது குறித்த ஒரு வார்த்தைகூட  இல்லாமல் இது எழுதப்பட்டிருப்பது ஒரு பெரிய பின்னடைவு.

ஆனால் ஒன்று: இதை ராமன் ராஜா சிறப்பாக, சுவையாக, அழகாக எழுதி இருக்கிறார். நிச்சயம் படிக்கலாம். படித்தால் நீங்களே அவர் சொன்னதை பெருமளவுக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.

என் தலைவிதி. நேற்று சொன்னதை இன்று தவறென்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது. Style wins over substance என்று நான் சொன்னது முட்டாள்தனம். சாரம் இருக்க வேண்டும் சாமி, அது இல்லாமல் எழுப்பப்படுகிற கட்டிடத்துக்கு சீட்டுக்கட்டு மாளிகைக்கு இருக்கிற பலம்தான் இருக்கும். எவ்வளவுதான் அழகாக, ரசிக்கும்படியாக இருந்தாலும், கண்டவனும் சுலபமாக அதன் கட்டுமானங்களை உடைத்து விட்டுப் போய் விடுவான்.

இந்த இடத்தில் என் மனசாட்சியின் தூக்கத்தைக் கெடுத்துத் தொலைத்த அந்த நண்பரின் சொற்களைத் தருவதே பொருத்தமாக இருக்கும்:
"நீங்கள் உங்களுக்குப்பட்டதை எழுதுங்கள். அது உங்கள் கருத்து.ஓ இப்படியும் யோசிக்கலாமே என்று பார்வை கொஞ்சம் மேம்படும். அதில் மனவருத்தப்பட என்ன இருக்கிறது.
நீங்கள் குறைநிறைகளை எழுதவேண்டும் அப்பொழுதுதானே எழுதுபவர்கள் வளர முடியும்.மரணமொக்கை சொல்வனம் விமர்சனப்பக்கமல்லவா? நியாயம் அனியாயத்தைவிட, தரவுகளையே தவறாகத்தந்தால் அதைச்சுட்டிக்காட்டலாமா?"
ஒருவன் செய்யக் கூடிய தவறுகளிலேயே பெரிய தவறு தெரிந்தே செய்யும் தவறு.  சரியான சமயத்தில் அதை சுட்டிக் காட்டி என்னைத் திருத்திய திரு நண்பர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.





இந்த இதழில் வந்திருக்கிற ராகம் தானம் பல்லவி மிகவும் சுவையான ஒன்று. மேற்காணும் சுட்டி கச்சேரிகளில் எப்படி தாளம் போட வேண்டும் என்பதன் செயல்முறை விளக்கம். எளிய அறிமுகம், ஆனால் இனிய என்று சொல்ல முடியாது- அருண் நரசிம்மனின் குரலைக் கேட்டால் தாளம் தப்பினால் ஸ்கேலால் முட்டியில் தாளவாத்தியக் கச்சேரி நடத்தி விடுவாரோ  என்ற பயம் வருகிறது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது கர்நாடக இசையின் கட்டுமானங்கள் ஒரு கணித சமன்பாட்டைப் போல எவ்வளவு நளினமாக, காம்ப்லாக்சாகக் கட்டப்பட்டிருக்கின்றன என்பது ஒருவாறு தெரிகிறது. அவர் தான் எழுதி இருப்பது அடிப்படை விஷயம்தான் என்று சொல்லிக் கொள்கிறார்- ஆனால் அதனுள் அடங்கி இருப்பது ஏராளம். என் மகனும் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்: அவன் தனது நோட்டுப் புத்தகத்தில் "தொம் தொம் கிட தக தக தரி கிட தா!" என்று ஏதோ டான்ஸ் மாஸ்டர் கணக்காக எழுதி வைத்திருக்கிறானே, இதற்குத்தான் வாரம் ரெண்டு வகுப்பு என்று மாசம் நானூறு ரூபாய் அழுகிறோமா என்று நினைத்தேன், அருண் நரசிம்மன் எழுதி இருப்பதைப் படிக்கிறபோது இது கலை மட்டும் இல்லை, கணிதமும்கூட என்று ஒருவாறு மேலோட்டமாக விளங்குகிறது.

ஒரு விஷயம்: தேவையில்லாத கேள்வி என்று தோன்றலாம்- எல்லாரும் இதில் தேர்ச்சி பெற்று கச்சேரி செய்து கை தட்டல் பெறப் போவதில்லை. நாம் இதை எல்லாம் எதற்குப் படிக்க வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை ஒரே பதில்தான்: இதைப் படித்துவிட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாட்டைக் கேட்கும்போது என் கவனம் திரையில் மட்டும் இல்லை. இத்தனை நாட்கள் எனக்கு ஆட்டத்திற்கு எதுவாக ஏதோ சத்தம் என்ற அளவில்தான் பாட்டு இருந்தது. இப்போது அது தனி வடிவம் பெறுகிறது- சொல்லப் போனால், இது போன்ற விஷயங்களைப் படிப்பது ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது.

இது தொடர்பாக இன்னொன்று- அண்மையில் மலேஷியா வாசுதேவன் பற்றி ஒரு கட்டுரை படித்தேன். என் சகோதரன் ஒருவன் அந்தக் காலத்திலேயே மலேஷியா வாசுதேவனின் ரசிகன். நாங்கள் எஸ்பிபி, ஜேசுதாசைத்  தாண்டியதில்லை- ஓரிருவர் ஜெயச்சந்திரனைப் பாராட்டி இருக்கலாம். எல்லாருமாய் சேர்ந்து அவனைக் கண்டபடிக்குக் கிண்டல் பண்ணுவோம். இப்போது ஷாஜி எழுதி இருக்கிறதைப் படிக்கும்போதுதான் எங்களுக்கு ரசனை போதாது என்றுத் தெரிகிறது.

சில பேருக்குப் பிறக்கும்போதே இந்த விஷயங்கள் கைவந்து விடுகின்றன, என்னைப் போன்ற பலருக்கும் சுட்டிக் காட்டி சொல்லிக் கொடுத்தால்தான் புரியும். அந்த வகையில் அருண் நரசிம்மனின் கட்டுரை தேவையான ஒன்றே. இனி எனக்கு தாளம் என்பது எதையோ தட்டுகிற சத்தமாக மட்டும் இருக்கப் போவதில்லை.

நிறைய காணொளிகளோடு சிறப்பாக இந்த இதழில் இவரது கட்டுரை வந்திருக்கிறது: நான் முன்னமேயே சொன்ன மாதிரி இது ஆடியோ புக்காக வர வேண்டியது: அவரது குரல், தொனி எல்லாம் சூப்பராக செட் ஆகிறது. காணொளி தருவதென்றால் அதிகப் பிரசங்கித்தனமாக ஒரு ஐடியா- இதுவரை எது அதிகப்பிரசங்கித்தனமாக சொல்லவில்லை என்கிறீர்களா? அது வேறு கதை.

என் ஐடியா என்னவென்றால் காணொளிகளில் அவருக்கு பக்க வாத்தியங்கள் தேவை: சூட்டிகையாக, சீக்கிரம் கற்றுக் கொள்கிற ஒரு சிறுமி,  ஒரு முட்டாள் மச்சினன் டைப் யுவன்: இருவருக்கும் ஒருசேர இவர் கற்றுத் தருகிற மாதிரி ஒரு காணொளி கிடைத்தால் பார்க்க விறுவிறுப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.



சுஜாதா தேசிகனின் கை நிறைய காண்டம்  படித்ததும் எனக்கு கொரியாவில் கைது செய்யப்பட்ட இந்தியா மாலுமிகளின் நினைவு வந்தது. உலகளாவிய வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், இது போன்ற விரிவடையும் சுதந்திரங்கள் நம்மை கொரியா போன்ற அச்சுறுத்தல் நிலைகளுக்கும் ஆளாக்குகின்றது என்பது ஒரு கசப்பான உண்மை.
நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படும் சமயம், எங்கள் டீம் உறுப்பினர் ஒவ்வொருவர் பின்புறமும் நாற்காலி போட்டுக்கொண்டு ஒருவர் என்று வந்து உட்கார்ந்துக்கொண்டார்கள். என்ன என்று விசாரித்ததில், “நாங்கள் ஹோட்டலுக்குப் போய்விடாமல் இருக்க இவர்கள் காவல்!” என்றார். கொத்தடிமைகளை கொரியாவிலிருந்து எப்படி மீட்பது என்று புரியாமல் விழித்தேன்.
துவாரபாலகர்கள் பொழுதுபோகாமல், கையில் வீடியோ கேம், அல்லது அக்குபஞ்சர் பந்தை வைத்துக்கொண்டு அழுத்திக்கொண்டு இருந்தார்கள். காலை 6 மணிக்கு எல்லோரையும் காரில் ஏற்றிக்கொண்டு ஹோட்டலில் விட்டுவிட்டு குளித்து முடித்தபின் காலை எட்டரை மணிக்கு வந்து கதவைத் தட்டி திரும்ப அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
அப்புறம் என்ன நடந்தது என்பதை இந்தச் சுட்டியைத் தட்டித் தெரிந்து கொள்ளவும்.  அத்தோடு, கை நிறைய காண்டம் எங்கே எப்படி கிடைக்கிறது என்பது குறித்த மேல்விவரங்களும் உங்கள் பார்வைக்குக் காத்திருக்கிறது.


இது இந்த இதழ் குறித்த என் கடைசி சுட்டி- வெடித்து கிளம்பும் விக்கிலீக்ஸ். ஏராளமான பரபரப்புத் தகவல்கள் இந்தக் கட்டுரையில் இருக்கின்றன: இது ஒரு தொடராக வரப் போகிறது என்று தெரிகிறது: தலைப்பு விக்கிலீக்ஸ் பற்றி இருந்தாலும் எனக்கு தகவலாக இருந்தது இதுதான்-
"ஜார்க்கண்டில் இந்தியப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி 80 காவலர்களைக் கொன்ற கொடூரமான நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்கள் கழித்து கனடாவில் இருந்து இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு தகவல் வந்தது. அந்த தகவலைப் பற்றி இந்திய ஊடகங்கள் எவையும் மூச்சு விட்டதாக நினைவில் இல்லை. இந்தியாவையே உலுக்கி புரட்டிப் போட்டிருக்க வேண்டிய பூகம்பம் போலான அதி முக்கியமான இந்தியாவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு தகவல் அது. அமெரிக்காவிலும், கனடாவிலும் அரசாங்க ரகசியங்களைக் களவு செய்யும் சைபர் கொள்ளையர்களைக் கண்காணிப்பதற்காக ஒரு சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு கனடாவின் மன்க் ஸ்கூல் ஆஃப் க்ளோபல் அஃபேர்ஸ் என்ற டொராண்டோ பல்கலைக்கழகத்துறையில் இருந்து இந்திய உளவுத் துறைக்கு அனுப்பியதே அந்த அதிர்ச்சிகரமான தகவல்.
இந்தியாவின் அதி முக்கியமான ராணுவம், வெளியுறவு, உள்நாட்டு ஆவணங்களும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தால் மிக மிக ரகசியம் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்களும், இந்தியா ஆப்கானிஸ்தானில் செய்து வரும் வேலைகள் பற்றிய தகவல்களும், இந்திய தூதர்கள், ஒற்றர்கள் பற்றிய தகவல்களும் ஒன்று விடாமல் களவாடப்பட்ட விபரத்தை அந்த ஆராய்ச்சி அமைப்பினர் இந்தியாவுக்குத் தெரிவித்தனர்."
காலப்போக்கில் ரகசியமே இருக்கக் கூடாது என்பது நடைமுறையாகி விடும் என்றுத் தோன்றுகிறது: ஒரு காலத்தில் அணு ஆயுதம் வல்லரசுகளுக்கு இடையில் சமன்பாடு உண்டாக்கியதேன்றால் இப்போது தொலை தொடர்பு திறன்.

அதில் நம் நாடு வீக்காக இருப்பது கவலைக்குரிய விஷயம்- அடுத்த தடவை போர் என்று வந்தால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போவது ஆயுதங்களல்ல, தகவல்கள்தான்.

ஜியார்ஜியாவுடனான போரில் ரஷ்யா ஜியார்ஜியாவின் கணினிகளை முடக்கியதாக இருக்கிறக் குற்றச்சாட்டுகள் கவனத்துக்குரியவை.  இது தொடர்பான அருமையான கட்டுரை எகானமிஸ்ட் பத்திரிக்கையில் இருக்கிறது.


இத இதழில் வெளியான பதினைந்து படைப்புகில் ஒன்பது குறித்து என் கருத்தை எழுதி விட்டேன். பொதுவாக நிறைகள் இருக்கும் இடத்தில்தான் குறை காண வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாக வைத்திருக்கிறேன் :)

நான் முன்வைக்கிற குறைகளும் அந்த எண்ணத்தில் முன் வைக்கப்பட்டனவே. எங்காவது நிறைகளே காணாமல் போகும் அளவுக்கு குறைகளைப் பற்றிப் பேசி இருந்தால் மன்னிக்கவும்- அது என் நோக்கமல்ல.

சொல்வனம் முப்பத்தொன்று - 1

போன தடவை எழுதும்போது பத்ரி அவர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சொன்னதை கொள்கை அளவில் ஆதரித்து எழுதினேன். இப்போது அருணகிரி அவர்கள் அதற்கு எதிர்வினை ஆற்றிவிட்ட நிலையில் எப்படி எதிர் அணிக்குத்  தாவலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பாகிஸ்தான் உடம்பெங்கும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு வத்திப்பட்டியை உரசி  விளையாட்டு காட்டுகிற வீட்டுக்கு அடங்காத பெண். "எல்லாம் காஸ்தானே, மண்ணெண்ணெய் அங்கே கிடைக்கிறதா?" என்று கேட்பவர்களுக்கு- ஆமாம் ஐயா, சிலிண்டரைத் திறந்து வைத்துக் கொண்டு, "அடுப்பைப் பற்ற வைக்கப் போகிறேன், அதற்குள் என்னைக்  கட்டிப் புடிடா! கட்டிப் புடிடா!" என்று மல்லுக் கட்டுகிற ராட்சச மனைவி என்று சொல்கிறேன். சனியனோடு வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியாது.

பத்ரி வாழ வழி சொல்கிறார்- அருணகிரி, வெட்டிக் கொண்டு விடலாம் என்று சொல்கிறார்.
"சிதிலமடைந்த கூடு தேசமாய் ஆகி வருகிறது பாகிஸ்தான். சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தானம், வடமேற்கு என ஏகப்பட்ட உள்ளுறைப்பூசல்களைக் கொண்ட நாடு அது. பிரச்சினை கைக்கடங்காமல் போனால் மேற்கு நாடுகள் அதனைக் கூறு போடவும் தயங்காது. ஆனால் திறனின்றித் தோற்றவன் கண்டுபிடிக்கும் நொண்டிச்சாக்கு போல, அதற்கான பழியையும் பாகிஸ்தான் இந்தியாவின் மீதே சுமத்தும். பாகிஸ்தானை நேர்வழிப்படுத்தவே முடியாதா என்றால் அதற்கான விடை, அது இந்தியாவின் கையில் கிடையாது, அது இந்தியாவின் வேலையும் கிடையாது என்பதே."
 சண்டை என்று வந்தால் இப்படி எல்லாம் ஏச வேண்டியதுதான்- ஆனால் தீர்வு என்று தேடும்போது நாம் பாகிஸ்தானை அடிக்கிற மாதிரி அடித்துக் கொண்டு, மொத்தத்தில்  அணைத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

அவர்களுக்குப் போர் என்று வந்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் கிடையாது- இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நமக்கு? அது பாகிஸ்தானுக்கும் தெரியும்- அதனால் படுக்கை அறையில் ஒரு பேச்சு, நம்ம வீடு மனுஷர்கள் நாலு பேர் நம் வீட்டுக்கு வரும் நன்னாள் அன்று வரவேற்பு  அறையில் வேறு பேச்சு என்று அதன் முரண்போக்கு தொடரவே செய்யும். 

என்ன செய்வது? இந்தியாவும் பாகிஸ்தானும் சொத்து பிரித்துக் கொண்டு சேர்ந்து வாழும் பார்ட்னர்கள்  மாதிரி: ஒருத்தருக்கு இவ்வளவு கொடுத்தும் முதுகை விட்டு இறங்க  மாட்டேன் என்கிறானே என்ற கடுப்பு, இன்னொருத்தனுக்கு இவனை விட்டால் எனக்கு ஆளே இல்லையா, நான் எவ்வளவு பெரிய ஆள் பார் என்று வாழ்ந்து காட்ட வேண்டிய  நிர்பந்தம். 

அதற்கு பாகிஸ்தான் தேர்ந்தெடுத்த வழி, "நான் செத்தால் நீ காலி!" என்ற மிரட்டல்.

அது எல்லாம் இருக்கட்டும்- அருணகிரி பத்ரியிடம்  பாயிண்ட் பாயிண்டாக கேட்டிருக்கிறத் தப்பாட்டப் பாட்டுக்கு அவரால் பதில் பாட்டு போட முடியாது என்று தோன்றுகிறது-  அதிலும் இந்த மாதிரி கேட்டால் எப்படி பதில் சொல்வது? அவர் தன் சிலபல பதிவுகளைத் திருத்தி எழுதிவிட்டுதான் ஆககூடி இன்னொரு எதிர்வினை செய்ய முடியும்!
நாட்டின் வளம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புத்தகக் கடை போட்டு மடிக்கணிணி பறிகொடுத்த கதையாகி விடும். நோய்க்கூறு மனநிலை இருப்பவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் முன் -யோசனையும் தெளிவும் முதலில் இருக்க வேண்டும். பறிகொடுத்தபின் புலம்ப தேசமும் சுதந்திரமும் கடைச்சரக்கல்ல.
பெல்ட்டுக்குக் கீழ எல்லாம் அடிக்கக்கூடாதுங்ணா!

என்னைக் கேட்டால் அருணகிரி ஒரு கோணத்தை விவாதித்திருக்க வேண்டும்- பாகிஸ்தானில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பெருமளவில்  கையில் வைத்திருக்கிறவர்கள் பொது மக்கள் அல்ல: நீங்கள் நினைத்த மாதிரியே  உயர் ராணுவ அதிகாரிகள்தான். எந்த அளவுக்கு என்று ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுவோம்! அதை யாராவது எதிர்வினை செய்யலாமே? அந்தக் கோணத்தைப் பார்க்காமல் பாகிஸ்தான் ஏன் சாவை நோக்கிப் பயணிக்கிறது, அது ஏன் அமைதியை நோக்கி அடியெடுத்து வைக்க மறுக்கிறது, எப்படிப்பட்ட வர்த்தக உறவை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம்  பேச முடியாது என்பது அடியேனின் எண்ணம்.

"சொல்வனத்தில் நாஞ்சில் நாடன் எழுதுகிறார்"- இப்படி ஒரு பேனரே வைக்கலாம். இந்த இதழில் புத்தகத் தலைப்புகளைப் பற்றி எழுதி இருக்கிறார். நானாயிருந்தால் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு ஒவ்வொரு புத்தகத்துக்கு மூன்று வரிகள் என்று அட்டவணைப் பதிவு செய்திருப்பேன். அவ்வளவுதான் நம்மால் முடியும்.

பல்லாண்டு காலமாகப் புத்தகங்களையும் நாடகங்களையும் திரைப்படங்களையும் தேடித் தேடிப் படித்த வாழ்க்கை  நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரையாக வடிவம் பெற்றிருக்கிறது- வெறும் தகவலாக இல்லாமல் உயிரோட்டமுள்ள ஒரு விஷயமாக  எப்படி எழுதுவது என்பது இந்த மாதிரி எழுத்தைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீளமாக இருந்தாலும் மலையாளத்தில் அற்புதமாய்த் தலைப்பு வைப்பார்கள், சிறுகதை, நாவல், நாடகத்துக்கு. பி.கெ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய ‘இனி ஞான் உறங்கட்டெ?’ எனும் நாவலை சாகித்ய அகாதமிக்காகத் தமிழாக்கம் செய்த, தமிழின் அற்புதமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆ.மாதவன் பட்டபாடு எனக்குத் தெரியும். பாரதப்போர் முடிந்த பிறகு, வெஞ்சினம் ஈடேறி வெற்றிக் கனிக்குப் பிந்தைய விரக்தி, உபபாண்டவர் மரணம் ஈந்த சோகம், அலுப்பு, களைப்பு, சோர்வு யாவும் தொனிக்க திரெளபதி கேட்பதானது அந்தத் தலைப்பு. கெஞ்சல் தொனியுடனும் விடுபட முயன்றும், ‘இனி ஞான் உறங்கட்டெ?’. திரெளபதியின் உறக்கம் எனத் தொடங்கி, தொடர்ந்து பல தலைப்புகள் பரிசீலித்து, ‘இனி ஞான் உறங்கட்டும்’ என்று நிலைத்தார் ஆ.மாதவன். எனக்கும் அதில் கொஞ்சம் பங்குண்டு. ஆனால் இருவருக்குமே நிறைவில்லாத தலைப்பு. யோசித்து, மேலும் பொருத்தமாக ஒரு தலைப்புச் சொல்லுங்கள், ஒரு சவால் எனக்கொண்டு.
உலகத்து நாடகங்களில் பல, கருத்தாழம் மிக்க தலைப்புகள் கொண்டவை. உங்களுக்கு நினைவிருக்கும் மலையாளத்து தோப்பில் பாசி நாடகத் தலைப்பு ‘நிங்ஙள் என்ன கம்மூனிஸ்ட் ஆக்கி’. வேறொரு மலையாள நாடகத் தலைப்பு ‘கிறிஸ்துவின்ட ஆறாம் திருமுறிவு’. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது ஆணியடித்து ஆழமான காயங்கள் ஏற்படுத்திய இடங்கள் ஐந்து. அந்த நாடகம் ஆறாவது ஆணி பற்றிக் குறிப்புணர்த்துவது. முறிவு எனில் காயம், திரு என்பது சிறப்பு அடைமொழி.
பரபரப்பாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட பஞ்சாபி நாடகங்களின் தலைப்புகளே நகைச்சுவையுடன் இருந்தன. ‘சடீ புட்டேனு ஜவானி’ எனும் நாடகத் தலைப்பின் தமிழ்ப் பெயர்ப்பு என்றால் ‘கிழவனுக்கு வாலிபம் ஏறிவிட்டது’ எனலாம். இன்னொரு தலைப்பு, ‘ஸாலி ஆதே கர்வாலி’. தமிழில், ‘மைத்துனி பாதி வீட்டுகாரி’ எனலாம். எங்கள் ஊரில் ஒரு சொலவம் உண்டு. ‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்று. அதுபோல.
எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: அவ்வளவு  சரக்கு இருக்கிறது இதில்.


"தலைசீவாத கதாநாயகன், அவனுக்கென்று வேலை எதுவும் இருக்காது; கால் சட்டை தெரியும் அளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டுள்ள கைலியும் வாயில் புகையும் பீடியும் தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் அடையாளம் என்று சொல்கிறது தமிழ் சினிமா. கதாநாயகிக்கு காதலிக்கவும் செத்துபோகவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் பேச தெரியக்கூடாது எனபது எழுதப்படாத விதி. ஆனால் தமிழ் கிராமத்து பெண்களே மறந்துவிட்ட தாவணியை உடலில் சுற்றிக்கொண்டு கதாநாயகன் போகும் வழியில் குறுக்கேயும் மறுக்கேயும் போய் அவனைக் கண் சிமிட்டாமல் சைட் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். கதாநாயகன் வாயெல்லாம் பல்லாக தலையை ஆட்டிக்கொண்டே நிற்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக வரும் தமிழ் படங்களை பார்த்திருப்பவர்கள் கவனித்திருக்கலாம். இப்படிப்பட்ட ‘யதார்த்தத்தை’த்தான் முன்வைக்கிறது இன்றைய தமிழ் சினிமா."
 என்று எழுதுகிற வெ. சந்திரமோகன் தமிழ் சினிமாவை ஏகத்துக்கும் தாக்கி இருக்கிறார்- கூடவே நமக்கெல்லாமும் பாட்டு கிடைக்கிறது.
"‘சின்ன தம்பியில்’ ரஜினி படம் பார்க்கும் கவுண்டமணி தான் நினைவுக்கு வருகிறார். ஒரு வயதானவரை ‘சைடு வில்லன்’ தள்ளி விட்டதும் கூட்டம் பதறிப்போக கவுண்டர் மட்டும் கை தட்டுவார். அவருக்காவது படத்தில் கண் தெரியாது. நம் மக்களுக்கு சினிமா என்றாலே என்ன என்று தெரியவில்லை."
நானும் ஓவராத்தான் திட்டி இருக்காருன்னு நினைக்கிறேன். ஆனால் அண்மையில் வெளி வந்து பல தரப்பினரிடையும் பாராட்டு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி குறித்து இவர் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரையில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. 

நானறிந்தவரை கேபிள் ஷங்கருக்கு அடுத்தபடி இவர் ஒருவர்தான் களவாணியை சராசரி படமாகப் பார்த்திருக்கிறார். அந்த ஒரிஜினாலிட்டிக்காகவே இருவரையும் பாராட்டலாம். 

கான் திரைப்பட விழாவில் முதல் பரிசு பெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படத்துக்கு யூட்யூப் சுட்டி தந்திருக்கிறார்கள்.ஒரு நிமிட அளவு கூட ஓடுவதில்லை இந்த படம்- ஒரு வசனம்கூட இல்லை. இசை, காட்சிகள் வாயிலாக உன்னதமான ஒரு உணர்வுக்கு நம்மை ஆளாக்குகிறது இந்தப்  படம்.

நம்ம ஊரில் ஏன் இப்படி எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று கேட்க மாட்டேன்- எல்லாவற்றையும் நாமே செய்து விட்டால் அப்புறம் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வதாம்? பிழைத்துப்  போகட்டும், விடுங்கள். 

திரைப்படங்கள் குறித்துப் பேச வந்தாச்சு. ரவி நடராஜன் இரு பரிமாண அனிமேஷன் படங்கள் குறித்து டெக்னிகலாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் நான் படித்த ஒரு ஆச்சரியப்படும் விஷயம்:
 "அந்நாளைய இரு பரிமாண அனிமேஷன் திரைப்படங்களில் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் சுவாரசியமாக இருக்கும். அதிகம் ஜூம் (zoom) காட்சிகள் இருக்காது. பான் (Pan) காட்சிகளே இருக்கும்....
...ஒரு இடத்தில் தொடங்கி காட்சியை பதிவு செய்து, அதே மட்ட நிலையில் இடதோ அல்லது வலது பக்கத்திற்குகோ காமிராவை நகர்த்திய வண்ணம் காட்சிகளை பதிவு செய்கிறார்கள். இது ‘பான் ஷாட்’ என்று சொல்லப்படும். மலைமீதிருந்து தூரத்தில் ஒரு ஏரி தெரிகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி வீடியோ எடுப்பீர்கள்? தூரத்தில் உள்ள ஏரியை காட்சியாக படம்பிடித்து மெதுவாக ஜூம் செய்வீர்கள். அதாவது, பார்ப்பதற்கு, ஏரி அருகே வருவது போல காட்சியளிக்கும். ஏரி அருகே உள்ள ஒரு மலரை பதிவு செய்து உங்கள் உள்ளிருக்கும் பாலு மகேந்திராவை உங்கள் நண்பர்களிடம் காட்டுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி!"
இதை ஏன் அனிமேஷனில் செய்ய அந்த காலத்தில் கஷ்டப்பட்டார்கள்? அந்த விவரம் படிப்பதற்கே சுவையாக இருக்கிறது- மனசைக் கொஞ்சம் டெக்னிக்கலா மாற்றிக் கொண்டு ரவி நடராஜனின் கட்டுரையைப் படிக்க இங்கே போங்க- "அனிமேஷன் திரைப்பயணம்: 02 - இரு பரிமாண உலகம்"

சொல்வனம் இதழ் முப்பது- இரண்டாம் பார்வை.

அப்படி இப்படி எழுத உட்கார்ந்தாகிவிட்டது- வீட்டில் கணிப்பொறியில் கோளாறு: ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் இரவல் கணினி கிடைப்பதாயில்லை. பார்க்கலாம் இந்த தடவை எவ்வளவு நேரம் எழுத வாய்க்கிறது என்று-

ராமன் ராஜா ஹிக்ஸ் போஸான் குறித்து அழகாக எழுதி இருக்கிறார்- எளிய நடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது: எளிமையாக எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. ராமன் ராஜா சுவையாக எழுதுவதில் தேர்ச்சி பெற்றவராகத் தெரிகிறார். அறிவியல் விஷயங்களை எழுதும்போது எளிமையாகவும் சுவையாகவும் எழுதுவது மிக அவசியம்- அறிவியல் நமக்கெல்லாம் அந்நியமான விஷயமாதலால் தோளில் கை போட்டு பேசுகிற மாதிரி இருந்தால்தான் காது கொடுத்து கேட்க முடியும். அகராதியைத் தேட வைக்கிற  மாதிரி எழுதினால் வேறு வேலை பார்க்கப் போய் விடுவார்கள்.

"கொளுத்திப் போட்டவர்", "தண்ணீர் காட்டி வரும்", "ரூம் போட்டு யோசித்தும்", "காதில் புகை விட்டார்களா"- என்பது போன்ற பதங்களை ராமன் ராஜா பயன்படுத்துகிறார். இது தவிர "போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக் காலம் மாதிரி அற்ப நேரம்தான்.", "‘அப்படியா, எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்?’ என்றால் ‘ஹிஹி! அதற்குச் சில பில்லியன் டாலர்கள் செலவாகுமே’ என்று கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டே சொன்னார்கள்," என்பன போன்ற சிந்தனை தெறிப்புகள் இவரது கட்டுரையில் சரளமாக விழுகிறது.

அறிவியல் குறித்து எழுதுகிறவர்கள் சுஜாதாவின் பாதிப்பிலிருந்து தப்புவது எளிதல்ல. அறிவியல் கட்டுரை படிப்பவர்களும் அதில் சுஜாதாவைத்தான் தேடுவார்கள். கடவுள், போஸான் இவற்றை விட அதிக அளவில் சுஜாதா தமிழ் அறிவியல் உலகை ஆக்கிரமித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

ராமன் ராஜாவின் எழுத்திலும் சுஜாதாவின் நிழல் விழுகிறது- நிழல் என்பதை ஒரு வழக்காகதான் சொல்கிறேனே தவிர அது இயல்பில் வெளிச்சம்தான். வாசகனை பகைத்துக் கொள்ளாத, அவனிடம் தோழமை பாராட்டும் எழுத்து சுஜாதாவுடையது. அதில் மேதைமையை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். சுஜாதாவின் தனிச் சிறப்பு என்று ஒன்றை சொன்னால் அது அவருடைய exhibitionism, வார்த்தை ஜாலத்தில் அவருக்கு இருக்கிற அலுக்காத ஆனந்தம்: அதை வெளிப்படுத்திக் கொள்வதில் அவருக்கு இருக்கிற சுயதம்பட்டம் இல்லாத பெருமை. சுஜாதாவைப் பொறுத்தவரை எழுத்து ஒரு spectator sports.

ராமன் ராஜாவின் இந்தக் கட்டுரையில் அவர் போஸான் குறித்து எழுதியதைவிட இந்த விஷயங்களுக்கு சுஜாதாவின் வார்ப்பை அவர் அழகாகத் தந்திருப்பதே எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. ராமன் ராஜா தன் தமிழ் நடையை ஒரு வித்தையாக, விளையாட்டாக, காட்சிப் பொருளாகக் கையாள  வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதில் அவர் தேர்ந்தால் எதைப் பற்றி வேண்டுமானாலும் படிப்பவர்கள் அலுக்காத வண்ணம் எழுதலாம். அது அவரால் முடியும்.

ராமன் ராஜா ஒரு ஏழையின் சுஜாதாவாக வேண்டும் என்பது எனது ஆசையல்ல. அவர் சுஜாதாவைக் காப்பி அடிக்க வேண்டும் என்பது எனது விண்ணப்பமுமல்ல. சுஜாதாவை நினைவுபடுத்தாமல் யாராலாவது அறிவியல் சமாச்சாரங்களை எழுத முடிந்தால் எழுதிக் காட்டட்டும். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, அறிவியலை சுவையாக எழுதுவது மிகக் கடினம். எளிமையாககூட எழுதி விடலாம். ஆனால் என்னைப் போன்ற ஒரு பாமர வாசகனை, ப்ளக்கில் பொருத்தப்பட்ட பக்கம் திருப்பும் இயந்திரமாக மாற்றுவதென்றால், அது சுவையான நடை இருந்தால் மட்டும்தான் சாத்தியம். இந்த விஷயத்தில் style wins over substance .

ராமன்  ராஜாவின் கட்டுரையைப் பற்றி எழுத வந்தவன் சுஜாதாவின் நினைவுகளில் ஆழ்கிறேன் என்றாலே அது ராமன் ராஜாவின் சாதனைதான். இதைப் படித்துப் பாருங்கள்:
"சுவிட்சர்லாந்திலுள்ள செர்ன் கழகத்தில் LHC என்ற மாபெரும் ‘துகள் முடுக்கி’ இயந்திரம் ஒன்றை அமைத்தார்கள். எல்.எச்.ஸி என்பது 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டு வட்ட வடிவக் குழாய்கள். தரைக்கு 300 அடி கீழே சுரங்கம் தோண்டி, கான்க்ரீட் லைனிங் கொடுத்துச் செய்த திடகாத்திரமான இயந்திரம் அது. சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து ஃப்ரான்ஸ் எல்லையைக் கடந்து உள்ளே சென்று காவடி போல் மறுபடி திரும்பி ஜெனிவாவிற்கு வருகிறது. குழாய்களுக்குள் இரண்டு ப்ரோட்டான் கொத்துக்கள் எதிர் எதிர் திசையில் சுற்றிக் கொண்டிருக்கும். அவற்றை காந்தம் வைத்து மிக அதி வேகப்படுத்தி, ஏறக் குறைய ஒளியின் ஸ்பீடுக்கு அருகில் கொண்டு வந்துவிடுவார்கள். அடுத்தது ஒரு பயங்கர ‘டமார்’! அந்த வேகத்தில் துகள்கள் நேருக்கு நேர் மோதினால் ப்ரோட்டானாவது, குருமாவாவது ? எல்லாம் நொறுங்கி உள்ளே இருக்கும் ஸ்பேர் பார்ட் அத்தனையும் பொல பொலவென்று கொட்டி விடும். இப்படிக் கொட்டுகிற பார்ட்டிகிள் ஃபிஸிக்ஸ் குப்பையில் எங்காவது நம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா என்று தேடுவதற்குத்தான் இத்தனை நோவும். இதில் ஒரு பிரச்சினை - ஹிக்ஸ் போஸான் தோன்றினாலும் அதை நாம் பார்க்காமல் விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. காரணம் போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக் காலம் மாதிரி அற்ப நேரம்தான்."
ராமன் ராஜா எதை எழுதினாலும் நான் படிக்கத் தயாராக இருக்கிறேன் என்று ரத்தத்தில் கையெழுத்து போட்டுத் தரத் தயாராக இருக்கிறேன்- கொண்டு வாருங்கள் உங்கள் ரத்தத்தை!





 
1 .8 .2010 அன்று  திருத்தி  எழுதியது:

தற்போது சுஜாதா அவர்களைக் குறித்து அவர் மிகவும் மேம்போக்காக எழுதுபவர் என்ற கருத்து ஏறத்தாழ எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக வலியுறுத்தப்படுவதால்,  இதை இங்கு சேர்க்கிறேன்-

Don Quixote என்ற நாவல் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த புனைவாகப் பலராலும் கருதப்படுகிறது. பலர் என்றாலும் உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்கள் அல்ல- பல்லை உடைக்கும் பதங்களைப்  பழக்கப்பட்ட நாய் போல் ஏவி தங்கள் பணிகளை செய்வித்துக்கொள்ளக் கூடிய இலக்கிய விமர்சகர்கள். "ஆகா நாம் உலகின் தலைசிறந்த இலக்கியத்தைப் படித்து விடலாம்," என்று நினைத்து அந்த நாவலையும் ஒரு தடவை எடுத்துப் படித்தேன். படு போர். இன்றைக்கு தினமலர் வாரமலரிலும் கூட அதைவிட நல்ல கதை வருகிறது. என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் ஒரு தடவை அந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். எத்தனை தடவை சிரித்தீர்கள், எத்தனை நேரம் புல்லரித்துப் போய் தன்னிலை மறந்து இருந்தீர்கள் என்று சொல்லுங்கள்.

ஆனால் அவர்கள் சொல்வது உண்மைதான். டான் க்விக்சொட் இல்லை என்றால் இன்றைய நாவல் நாமறியும்  நாவலாக இருக்காது. அது ஒரு புதிய பாதைக்கு புனைவு இலக்கியத்தை எடுத்துச் சென்றது.

என்னை நானே மேற்கோள் காட்டிக் கொள்வது சரியில்லைதான், ஆனால் என்ன செய்வது, இந்த மாதிரி என்னைத் தவிர வேறு யாரும் சொல்லவில்லையே- திரு ஜெயமோகன் அவர்களின்  உலோகம் என்ற புதினம் குறித்து நான் வேறு இடத்தில் எழுதியது:
 "...எல்லா படைப்புகளுக்கும் பின்புலமாக இன்னொரு படைப்பு இருக்க வேண்டும். ஏற்கனவே இன்னொருத்தர் இலக்கியத்தில் ஆக்கியிருக்கின்ற தளத்தை பின்புலமாக வைத்துதான் பெரும்பாலான படைப்புகள் உருவாகின்றன. இதை நாம் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்கும் போது உணர முடியும். ஆரம்பத்தில் அன்னியமாக இருக்கிற ஒரு வட்டத்து இலக்கியம் பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களைப் படிக்கப் படிக்கப் பழகிப் போய், நமக்கு நன்கு அறிமுகமான, நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற ஒன்றாக ஆகி விடுகிறது
அந்த வகையில் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு genre என்று சொல்ல வேண்டும். அது அந்த மாதிரியான மற்றக் கதைகளை ஏற்றுக் கொள்கிற பின்புலத்தை தமிழ் எழுத்தாளர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இது வரை Graham Greene, Len Deighton, John Le Carre வகையிலான Spy Fiction தமிழில் இல்லாமல் போனதற்கு இந்த நம்பகத் தன்மை இல்லாததுதான் காரணம். ஆனால் இந்த இலங்கை/ ஈழப் போர், அந்த வகையிலான படைப்புகளுக்கு அருமையான சூழலை அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஜெயமோகனின் உலோகம் மிக நேர்த்தியாக, ஆங்கிலத்தில் எழுதப்படுகிற நாவல்களுக்கு இணையாக வந்துக் கொண்டிருக்கிறது. இது தமிழில் ஒரு Genreஐ நிறுவும் என்று எதிர்பார்க்கிறேன்.
இனி தமிழில் James Bond, Robert Ludlum வகையிலான கதைகளை எழுதுவது சுலபம். வாசகர்களும் அதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள்..."
நான் சொல்வதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் உலோகத்தின் இறுதிப் பகுதிகள் பழைய தமிழ் பட க்ளைமாக்ஸ் மாதிரி விளக்கம் அது இது என்று நீண்ட உரையாடல்களாய்த் தோய்ந்து போய் முடிந்தது. இருந்தாலும் கூட, அவரது உலோகத்தை நீங்கள் படித்த கையோடு, எனது, "அம்பாறை ஒப்பந்தம்" என்ற நாவலின் ரா உளவாளி ரங்கதுரையின் வீரதீர செயல்களைப் படித்தீர்களானால் அது ரசிக்கிற  மாதிரி இருக்கும். ஆனால் ஜெயமோகன் அவர்களது நாவலைப் படிக்காமல் இதைப் படித்தால், ஜூனியர் விகடனில் வருகிற செய்திகளே இதைவிட சுவாரசியமான கதைகளாக இருக்கிறது என்பீர்கள். 

எதற்கு சொல்கிறேன் என்றால், அப்படிதான் எழுத முடியும். ஒரு மொழியில்  எந்த ஒரு எழுத்தாளனும் மாயாவி மாதிரித்  தோன்றி  ஏழேழு தலைமுறையும் ஆழ்ந்து முத்துக் குளிக்கிற மாதிரி கதைகள் கட்டுரைகள்  எழுதி வைத்து விட்டுப் போக முடியாது. இது தமிழ் நாவல்களைப் படிப்பவர்கள் ஒவ்வொருத்தரும் அறிந்த ஒன்றுதான். தனக்கு முன் எழுதியவர்களின் அடியொற்றித்தான் அடுத்து வருகிறவர் தன் படைப்பை நிகழ்த்துகிறார். 

"இல்லை, இல்லை, நான் ஒரு சுயம்பு," என்று ஒருவர் சொல்லிகொள்வாரெயானால், அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால், நூற்றுக்கும் நூற்றெட்டு சதிவிகிதம் அவர் சமகாலத்து வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருப்பார்.

சுஜாதா அவர்களின் அறிவியல் எழுத்தும் கதைகளும் மேம்போக்காக இருந்தன என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றே. உண்மைதான். ஆனால் யாராலும் தமிழ் எழுத்து அன்றைக்கு இருந்த கால கட்டத்தில், ஏன் இன்றைக்கு இருக்கிற காலகட்டத்திலும்கூட, ரொம்ப ஆழமாக அறிவியல் குறித்துப் பேசி, அது பரவலாக அனைவரையும் சென்றடையச் செய்திருக்க முடியாது. காரணம் நம் மொழியில் அதற்கான register கிடையாது. இப்போதுதான் அது உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஒரு விஷயத்தை மட்டுமாவது கருத்தில் கொண்டு அவரது அறிவியல் குறித்த படைப்பாக்கங்களைக் குறித்துப் பேச வேண்டும். அவர் எழுதும் காலத்தில் யார்  அறிவியலை மக்களிடம் கொண்டு போனார்கள்?  அது பாட்டுக்கு கவனிக்க  ஆளில்லாத சவலைக் குழந்தை மாதிரி நின்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில்  அவர் என்னமோ நன்றாகப் போய்க் கொண்டிருக்கிற கப்பலை கடத்திக் கொண்டு போய் பாறைகளில் முட்டி உடைத்துத் தரை தட்டி விட்ட  மாதிரி தமிழ் அறிவியல் படைப்பாக்கத்தையே தப்பான பாதையில் கொண்டு போய் முட்டு சந்தில் நிறுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டு வேறு!

ராமன் ராஜா போன்றவர்கள்  அவசரப்பட்டு, "ஆஹா, அவரே சொல்லிட்டார்!" என்ற திகைப்பில்,  ஆழமான அறிவியல் விஷயங்களை எழுதக் கற்கும் யத்தனமாய்  NCBHஐத்  தேடிப் போய் அங்கிருப்பவர்களை  இருட்டு அறைகளுக்குள் காணாமல் போன புத்தகங்களைத் தேடச் சொல்ல வேண்டாம். அதனால் யாருக்கும் ஒரு பிரயோசனமும் இருக்காது- யாராவது படித்தால்தானே! 

மறுபடியும் சொல்கிறேன்: மக்களிடம் அறிவியல் தமிழ் போய் சேர வேண்டுமானால் இன்றைக்கு இருக்கிற நிலையில் style wins over substance. சுஜாதாவை விமர்சிப்பவர்கள்- சொல்லக் கூடாதுதான்- ஆழமாக பல அறிவியல் கட்டுரைகள்  எழுதிக் காட்டட்டும்: அதைப் பரவலாக மக்கள் ஏற்கிறார்களா பார்க்கலாம்- தரை தட்டின கப்பல்  கரை சேரட்டும்.




கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். அருண் நரசிம்மனின் "ராகம் தானம் பல்லவி"யைப் படித்ததும் எனக்கு என்னைப் பார்த்து  அப்படிதான் கேட்டுக் கொள்ளத் தோன்றுகிறது- தெரியாதென்பது தெரிந்த விஷயம்தான், ஆனால் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.

இசை விஷயத்தில் மற்ற விஷயங்களைவிட பெரும்பேதை என்பதால் எனக்கு இந்த விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது-

 "அக்காலத்தில் பல்லவிப் போட்டிகள் வெகு பிரபலம். சாம்பமூர்த்தி  இதைக்குறித்து தனியே ஒரு அத்தியாயமே எழுதியுள்ளார். இரு இசைக்கலைஞர்களிடையே போட்டி என்றால், ஒரு மூத்த இசைக்கலைஞர் அம்பயர். முதலில் இ.க-1 ஒரு ராகத்தில் ஆலாபனை செய்து பொளக்கவேண்டும். இ.க-2 அது என்ன ராகம் என்று கண்டுசொல்லிவிட்டு, ஸ்பாட்டிலேயே அந்த ராகத்தில் பல்லவியின் அனைத்து அங்கங்களும் மிளிர ஒரு பல்லவி கம்போஸ் செய்து காட்டவேண்டும். அப்பல்லவியை இ.க-1 சமத்காரமாகப் பாடிவிட்டால், ஆட்டம் எதிர்ப்புறம் திரும்பும். இப்போது இ.க-2 ஒரு ராக ஆலபனை செய்யவேண்டும். இ.க-1 இதில் பல்லவி. இ.க-2 அதைப் பாடவேண்டும்.
இருவரும் சரியாய் செய்துவிட்டால் ஆட்டம் டிரா. அம்பயர் தாத்தா இருவரையும் தழுவி தட்டிக்கொடுத்து பரிசளித்து அனுப்பிவிடுவார்."

எந்த ஊரில் இப்படியெல்லாம் நடந்தது என்பதை அருண் நரசிம்மன் குறிப்பிடத் தவறி விட்டார்- திருவிளையாடல் படத்தில் வருகிற காட்சி மாதிரி இருக்கிறது இது.

கர்நாடக சங்கீதத்தை எளிதாக அறிமுகப்படுத்தும் கட்டுரை இது என்று சொல்ல மாட்டேன். பிரயாசைப்படாமல் பழகாது இதில் உள்ள விஷயங்கள். சொல் குற்றம் இல்லை, பொருள் குற்றம். ஆனால் ஒன்று: இந்தக் கட்டுரைகளைத் தொகுத்தால் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும். அது உறுதி. அதைத் திரும்பத் திரும்பப் படித்து இவர் எழுதி இருக்கிற விஷயங்களைப் புரிந்து கொண்டு விடலாம்.

சைக்கிள் ஓட்டுவது எப்படி? என்று ஒரு புத்தகம் இருக்கிறது. சைக்கிள் ஓட்டுபவர்கள் அதைப் படித்தால், "ஆமாமாம், இப்படிதான் சைக்கிள் ஓட்ட வேண்டும்," என்று சொல்லி விடுவார்கள். ஆனால் ஓட்டத் தெரியாதவர்கள், "சைக்கிள் கீழே விழுவது centripetal force என்ற ஒரு வகை உந்து சக்தியால். இதை எதிர்கொள்ள, centripetal force சைக்கிளை வளைக்கிற திசையில் உங்கள் சைக்கிளின் ஹாண்டில் பாரையும் வளைத்து கொஞ்சம் விரைவாக பெடலை மிதிக்க  வேண்டும், அப்போது சைக்கிள் நேர்திசையில் பயணிக்கத் துவங்கி விடும், centripetal force மீண்டும் தன் வேலையைக் காட்டாத வரை" என்று சொன்னால் சைக்கிள் ஓட்டத் தெரிந்த நீங்கள் இந்த சக்தியைப் பற்றி எதுவும் தெரியாமலேயே சைக்கிள் ஓட்டுவது குறித்து எப்படி பேசுவது என்பதைப் புரிந்து கொண்டு விடுவீர்கள். ஆனால் பழகுநரின் கதி? இப்படிதான் சொல்லியாக வேண்டும்- புத்தகமாக போட்டால். ஆனால் சைக்கிளில் உட்கார வைத்து இதையே சொன்னால் எளிதாகத் தெரிந்து விடும்.

அருண் நரசிம்மனின் இந்த கட்டுரைகள் மல்ட்டிமீடியாவில் ஐபோனிலோ ஆடியோபுக்காகவோ வேறு வடிவிலோ  இன்னும் கொஞ்சம் திருத்தப்பட்டு தொகுப்பாக  வெளி வரும்போது அது அற்புதமான படைப்பாக இருக்கக்கூடும்-  எதற்கும் சொல்வனம் இந்த விஷயத்தில் உரிமத்தில் பங்கு கேட்டு  துண்டு போட்டு வைத்துக் கொள்வது நல்லது- பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு போனாலும் போகலாம். காலச்சக்கரம் எப்படி திரும்பும் என்பதை சொல்ல முடியாது.

எனக்கு இவர் எழுதுவதில் உள்ள ஒரே குறை: வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு dumb down செய்கிறார்-

"ஒரு மூடி போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி, திறவுங்கள். என்ன வரும்? நிறைய நாய்கள். ஏனென்றால், எம்ப்டி வெஸல்ஸ் கிரியேட் மோர் நாய்ஸ்.
சரி, நாய்கள் வெளியேறியதும், மால்ட்டொவாவில் இருக்கும் மால், பக்கத்தில் (அருகில்) பக்கத்தில் இருக்கும் தாள், தீக்‌ஷதர் முத்திரையான குருகுஹா, தமிழுக்காக முருகா அல்லது மால்மருகா, பழந்தமிழுக்காக ஷண்முகா (புதுத்தமிழில் டண்முகா?), பெண்களை கவர வள்ளிமணாளா என்று சொற்களை பாட்டி(லி)ல் அடைத்து, துணிமேலிட்ட மூடி போட்டு குலுக்கினால் கால்மணியில் பல்லவி திரண்டுவிடும்."
இது போன்ற விபரீத விளையாட்டுகளைத் தவிர்த்து- இந்த இடத்தில் இன்னொரு மேற்கோள்: இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் அவர் விழுவதைப் பாருங்கள்:

"சிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றோ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ‘ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு’ என்று அங்கலாய்ப்பர்."
சங்கீதம் தெரியாதவர்கள் ஜிகிர்தண்டாவை ரசித்து மேற்கொண்டு படித்தால் ஆதிதாளம் தாண்டி மிஸ்ர ஜம்பைக்கு வரும்போது ஒரே ஜம்ப். நாலு பத்தி தள்ளி வேறேதாவது ஜிகிர்தண்டா தெரிகிறதா என்றுத்  தேட ஆரம்பித்து விடுவார்கள். சங்கீத ஞானம் உள்ளவர்களுக்கு ஜிகிர்தண்டா எதற்கு? பில்டர் காப்பியில் கோக்கைக் கலந்தாற்போல் போல் இருக்காது?


அடுத்ததாக அரவிந்தன் நீலகண்டனின் ஹாலிவுட் அறிவியல்: காலப்பயணம் -1 எழுதலாம் என்று உட்கார்ந்தேன்.  களைப்பாக இருக்கிறது, நாளை அவகாசப்பட்டால் எழுதுகிறேன்.

சொல்வனம் முப்பது- 1

நான் சொல்வனம் இதழை வாசிப்பதற்கும் அது குறித்து வெவ்வேறு இடங்களில் பகிர்ந்து கொள்வதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது ஒவ்வொன்றாகத் தக்க சமயம் வரும்போது சொல்கிறேன். இப்போது சொல்லும் காரணம், இந்த இதழில் நான் எழுதிய ஒன்றைப் பதிப்பித்து விட்டார்கள். அதற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், நான் சொல்வனத்துக்குக் கடிதம் எழுதும் முன்னமேயே இந்த இதழ் குறித்தான பதிவுகளை எழுதி வருகிற காரணத்தால், சொல்வனம் இதழில் வெளி வருகிற படைப்புகள் பற்றிய என் பார்வையைப் பகிர்ந்து கொள்வதைத் தொடரத்தான் போகிறேன். படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம். யாருடைய மௌசையும் சிறை பிடித்து இதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது, இல்லையா?

பத்ரி சேஷாத்ரி ஆக்கப்பூர்வமாக யோசிக்கப் போய், ஏறத்தாழ இந்தியா பாகிஸ்தானைத் தத்தெடுக்க வேண்டும் என்கிற அளவில் சொல்கிறார், தனது "பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா" என்ற கட்டுரையில்- தாராளமாகக் கடன், பாகிஸ்தானிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை மற்றும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத இதர சலுகைகள்- , அந்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் கல்விக் கட்டண உதவி- இப்படி நீள்கிறது பட்டியல். பாகிஸ்தான் அரசுடன் இந்தியா பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற நிலையில் தொலை நோக்குப் பார்வையுடன் அந்நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதே நமக்கு சிறந்த உபாயம் என்கிறார்.

எப்படியும் சண்டை போட்டு நமக்கு லாபம் ஒன்றும் இருக்கப் போவதில்லை என்பதால் இதையும் முயற்சித்துப் பார்க்கலாம்தான்- ஆனால் இந்த மாதிரி துணிந்து செய்கிற அரசு ரொம்ப நாளைக்கு மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

இறுதித் தீர்வு என்பதெல்லாம் பாசிச கனவு. அரசியலில், சமுதாயப் பிரச்சினைகளில் அப்படி ஒன்று கிடையவே கிடையாது. அப்படியொரு தீர்வை ஏற்படுத்த நினைக்கிறவர்கள் பிணங்களின் மேல்தான் தங்களது கனவு சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டி இருக்கும். பாகிஸ்தான் எவ்வளவுதான் குத்தல் குடைச்சல் தந்தாலும், எப்படியாவது இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும் என்ற எண்ணத்தைக் கை விட்டு, ஒரு தேர்ந்த செஸ் வீரனைப் போல் வெற்றி கண்ணுக்குத் தெரியாதபோதும், ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி ஒரு பீஸ் சாதகமாக இருக்கிற நிலையைத் தக்க வைத்துக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்ய முடியுமோ அதை நோக்கி பயணிக்கலாம்.

அந்த வகையில் பத்ரி சேஷாத்ரி சொல்கிற விஷயத்தின் அடிப்படையில் மக்களின் இதயங்களைக் கைப்பற்றும் முயற்சிகள் என்னென்ன உண்டோ அவை எல்லாம் கட்டாயம் செய்யப்பட வேண்டியவையே. அவ்வப்போது காணப்படும் அரசியல் சூழலுக்கேற்ப கம்யூனிஸ்டுகள் மற்றும் இதர இல்லாதபோதும் தன் அடர்ந்த கரிய நிழலைச் சாய்க்கிற மதசார்பின்மை கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கும் அறிவாளர்கள் அரசியல் சூதாடிகள் இதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

---

"எழுத்து இதழ் நிறுத்தப்பட்டதற்கே இலங்கை சந்தாதாரர்களை அது இழந்ததுதான் முக்கிய காரணமாயிற்று. ஏனென்றால் எழுத்தின் பாதிக்கு மேலான சந்தாதாரர்கள் அங்கேதான் இருந்தார்கள். இதே நிலைதான் சரஸ்வதிக்கும் ஏற்பட்டது," என்ற திடுக்கிடும் செய்தியை முன் வைக்கிறார் வெங்கட் சாமிநாதன்.

இன்றும் எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது- இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் எப்படி வடிவேலுவின் நகைச்சுவையை மேற்கோள் காட்டுகிறார்கள் என்று. அவர்களின் பின்புலத்திலிருந்து மதுரைத் தமிழ் போல கண்டித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் பேசுபவர் நகைச்சுவை செய்தால் அதற்கு நம் மக்கள் வடிவேலுவுக்குத் தந்த மாதிரியான பெரும் வரவேற்பு கொடுத்து ஏற்பார்களா என்று தெரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆனால் வெங்கட் சாமிநாதனின் பேட்டியில் வெளி வருகிற ஈழ மக்களின் இந்தத் தமிழ் இலக்கிய தாகம் பெரிய அளவில் பேசப்படாமல், அந்தோணி மார்க்ஸ் என்பவர் அந்தோணி மார்க்ஸ்தானா என்பது விவாதப் பொருளாகி விட்டது- டுவிட்டரில் நான் தொடர்கிற காலப் பிரவாகத்தில்!

"அங்கே நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நிலவியது அவர்களிடத்தே அக்காலத்தில். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருந்தது," என்று வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழர்கள் குறித்து சொல்கிற விஷயத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை- அல்லது யாரும் கவனித்ததை நான் கவனிக்கவில்லை. எப்படி இருந்தாலும் வெகுஜன அளவில் ஈழத்தமிழர்கள் எவரும் சிலோன் மனோகருக்கு அப்புறம் பெருமளவில் கலை இலக்கியம் இசைத் துறைகளில் (பெரும்பான்மையான, 'பாமர') தமிழர்கள் மத்தியில் முத்திரை பதிக்காதது குறையாகத்தான் தெரிகிறது.

இது பெரியவர்கள், படித்தவர்கள் விவாதிக்க வேண்டிய விஷயம். என் எண்ணத்தை சொல்கிறேன், அவ்வளவுதான். தனது நீண்ட அனுபவத்திலிருந்து இன்னும் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார், வெங்கட் சாமிநாதன். ஒவ்வொன்றையும் பேசிக் கொண்டிருக்க முடியாது, இல்லையா? இந்த நாள், இந்த கணத்தில் என்னைக் கவர்ந்தது ஈழ இலக்கிய ஆர்வம குறித்து வெங்கட் சாமிநாதன் சொன்னது. இதே சொல்வனத்தில் எழுதுகிற எம். ரிஷான் ஷெரீப் நானறிந்த வரை நன்றாகக் கவிதை எழுதுகிறார். அவரைப் பற்றி வெங்கட் சாமிநாதன் பார்வை எப்படியோ? தெரியவில்லை.

சொல்வனம் ரிஷான் ஷெரீப் போன்ற தமிழகத்துக்கு வெளியே வாழும், அவர்களின் வாழ்வைக் கூறும் படைப்பாளர்களின் ஆக்கங்களைக் கேட்டு வாங்கிப் பதிப்பிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்: "தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழுணர்வுக்கும் வெளியேயும் இருக்கிறது உலகம்" என்ற புரிதலையே நான் சொல்வனத்தின் முத்திரையாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் தென் முனையில் நீட்டிக்கொண்டிருக்கிற இந்த முக்கோணத்தோடு அடங்கி விடாமல், அதனினும் பரந்து விரிந்த ஒரு பன்முகப் பார்வையைக் காட்டும்போது அதில் ஒரு அந்நிய பாவனை வரத்தான் செய்யும். ஆனால் அதுதான் தமிழ்ப் படைப்பாக்கத்தின் எதிர்காலம்- "பைன் மரங்களையும் இனி தமிழன் பாடுவான்," என்று எங்கேயோ படித்தேன்: நீங்கள் குமுதத்திலேயோ விகடனிலோ பைன் மரங்களைப் பற்றி எங்கேயாவது படித்தீர்களா? பத்து இருபது ஆண்டுகளில் படிப்பீர்கள். இலுப்ப மரம் நம் நினைவை நீங்கி விடும்- பைன் மரங்கள்தான் நம் எதிர்காலம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுதான் நிஜம்.

---

இப்படி ஒரு எண்ணம வரக் காரணம் இந்தக் கட்டுரை- செருப்பால் அடித்த மாதிரி சொல்கிறார் நாஞ்சில் நாடன்- "ஆயுதக் கிடங்கில் நின்றாலும் எதையும் பயன்படுத்தத் தெரியாத ஒரு கோழையான சமூகத்துக்கு அந்த ஆயுதங்களால் என்ன பயன்?" என்று, நாம் நம் பாரம்பரியத்தில் அக்கறை இல்லாமல் இழக்கிற விஷயங்கள் குறித்து. அம்மா அப்பாவை டாடி மம்மி என்று கூப்பிட்டால்கூட தப்பில்லை, நம்மைச் சுற்றி இருக்கிற செடி கொடி புல் பூண்டு நம் கண்களுக்குத் தெரிகிறதா, நம் நினைவைத் தொடுகிறதா, நம் மொழி வழி அறியப்படுகின்றனவா?

காக்கை, குருவி, கொக்கு, புறா, கோழி, கழுகு இவற்றைத் தவிர உங்களுக்குத் தெரிந்த பறவைகளின் பெயர்களை சொல்லுங்கள், எவ்வளவு என்று பார்க்கலாம். ஒன்றாம் வகுப்பில் ஆனா ஆவன்ன்னா படிக்கும்போது இவற்றையும் படித்ததால் இந்த பறவைகளின் பெயர்கள் தப்பித்தன, இல்லையா? நம்மை சுற்றி எத்தனை செடிகள், மரங்கள். ஆனால் இந்த பாழாய்ப் போன மரமண்டைக்கு ஏதாவது தெரியும் என்கிறீர்கள்?

"அப்பா, இந்த செடி பேர் என்ன?" என்று கேட்கிறான் என் மகன். "இருடா கண்ணா," என்று சொல்லி விட்டு அதன் இலை மற்றும் பூக்களைக் கைபேசியில் புகைப்படமெடுத்து வலை ஏற்றி, கூகுளாண்டவரிடம் போய் இது போல் இருக்கிற வேறு இமேஜ்கள் கொண்டு வந்து தாரும் என்று விண்ணப்பித்து, "எப்படி லேட்டரலா யோசிச்சேன், பாத்தியா!" என்று பிள்ளையிடம் பெருமை அடித்துக் கொள்பவன் இந்தத் தமிழன்.

டீ, காப்பி இந்த எழவை எல்லாம் என்ன மொழியில் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், நஷ்டமில்லை, ஆனால் நம்மைச் சுற்றி இருக்கிற தாவரங்களும்கூட முகவரி இழந்து வெள்ளைக்காரப் பெயர் வைத்துக் கொள்கின்றனவே, இதை என்ன சொல்ல?

"இப்படியே நமது வாசிக்கும் பழக்கம் பெருவழியிற் போனால், ஒரு ரூபாய்க் கூழ்த்தாள் தினசரிகளையும், சாலையோரச் சுவரொட்டிகளையும், ப்ளக்ஸ் தட்டிகளையும் மட்டுமே வாசிக்கும் அற்ப மாந்தராய் நாம் போய்விடுவோம் என்று கவலையாக இருக்கிறது. செம்மொழி என்பதன் பொருள் செத்துக்கொண்டிருக்கும் மொழி என்பதல்ல," என்று எழுதுகிற நாஞ்சில் நாடன் நல்ல எழுத்தாளர், ரொம்ப டீசண்டானவர். அவர் முகத்தில் அறைந்தாற்போல், மூக்கில் குத்துகிற மாதிரியெல்லாம் எழுத முயன்று  பயனில்லை. அதற்கு வைவதற்கு பிஞ்ச செருப்பை தொழில் முறை ஆயுதமாக உபயோகிக்கிற நல்ல நான்காம் தர எழுத்தாளர்கள்தான் வர வேண்டும்- ஆனால் அதுவும் உறைக்காது, இல்லையா, அவர்களைக் காமடி பீசாக்கி விடுவோம்.

நல்ல இலக்கியத்தைதான் வாசிக்க மனமில்லை, நம் நினைவுகளை, நம் அப்பாவின் நினைவுகளை, தாத்தாவின் நினைவுகளைக் கூடவா வாசிக்காமல் அனாதையாக்கி அவர்கள் உலகத்தை நம் நினைவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்? தங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லித் தராமல் அதைவிட முக்கியமானது என்று உயர்ந்த, தரமான கல்வியை படித்த, பட்டம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நமக்கு பள்ளியில், புத்தகத்தில், பணம் கொடுத்து படிப்பிக்க வைத்தார்களே, அந்தப் பாவத்துக்கு நாம் செய்கிற கைமாறுதான் இது.

நாஞ்சில் நாடன் "தமிழரும், தாவரமும்" என்ற தலைப்பில் வெறுமே புத்தக அறிமுகம் செய்யவில்லை: நம் செல்வங்கள் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போன கருமாந்தரத்தைப் பதிவு செய்துத் தந்திருக்கிறார்- "நூலகக் கட்டிடம் கட்டி, மேஜை நாற்காலிகள் போட்டு, மின்விளக்குகள் காற்றாடிகள் அமைத்து, புத்தகங்களை விலைக்கு வாங்கி, அட்டவணைப்படுத்தி, அடுக்கி வைத்து, மனிதக்கரம் படாமலேயே மட்கும் அவலம் சங்கடப்படுத்துகிறது. இதற்கு மேல் எந்த அரசும் என்ன செய்ய இயலும்? மக்களுக்கு வாசிக்கும், தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லையே?"

தான் வசிக்கிற உலகத்தையே பெயர் சொல்லக்கூடத் தெரியாமல் புறம்போக விட்டு விட்டான், இதில் அதன் பதிவுகளைப் பிரதி எடுத்துப் புடம் போட்டு பதிப்பித்தனவற்றைப் படிக்க வேண்டுமாம்!- நல்ல கதை.

(சொல்வனம் முப்பதாம் இதழின் வாசிப்பு பாகம் இரண்டு இன்னும் ஓரிரு நாளில் தொடரப்படும்.)

:)

மனப்பறவையின் சங்கீதம்

நாம் ஏன் எழுதுகிறோம், படிக்கிறோம் என்பன போன்ற கேள்விகள் நாம் ஏன் ஒருவரோடொருவர் பேசிக்கொள்கிறோம் என்ற கேள்விக்கு ஒப்பாகும்- நம்மால் பேசாமல் இருக்க முடியாது. சிந்தனையின் சுமையை உணர்ந்தவர்களும் வாழ்க்கையின் தரிசனங்களைப் போற்ற நினைப்பவர்களும் எழுத வருகிறார்கள்- இவர்களில் வெகு சிலரே நன்றாக எழுதுகின்றனர், மற்ற பலர் நம்மைப் போல இதரும் பலர் என்ற நிலையிலேயே இருக்கின்றனர். நமக்கு எழுத்தில் சாதனை செய்தவர்கள், விற்பனையிலோ அல்லது படைப்பாக்கத்திலோ உயர்ந்த இலக்கைத் தொட்டவர்கள் ஆதர்சங்களாக இருக்கின்றனர். இவர்களைப் பேசி நாம் நம்மை, நம் எழுத்தைக் கொண்டாடுகிறோம், இல்லையா?

இது போன்ற எண்ணங்கள் நான் அண்மையில் படித்த ஒரு புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தைப் பற்றி எழுத நினைக்கையில் எழுந்தது. எழுத்தாளர்களைப் பற்றிய சுவையான சில விஷயங்கள்- இதில் தமிழில் எழுதுபவர்கள் யாரும் இல்லாததற்குக் காரணம் நான் படித்த புத்தகத்தில் அவர்களைப் பற்றிக் குறிப்பிடப்படாததுதான்- John Sutherland என்பவர் எழுதிய Curiosities of Literature (Arrow Books பதிப்பு), என்ற புத்தகத்தில் இலக்கிய சாதனைகள் என்ற ஒரு அத்தியாயம் சுவாரசியமாக இருக்கிறது.

அடுக்கு மொழித் தமிழை ரசித்து வளர்ந்த நமக்கு, தமிழில் எழுதி இருந்தாரென்றால் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த Anna Margaret McKittrick Ros இன்று ஆதர்ச எழுத்தாளராக இருந்திருப்பார். ஆனால் தமிழின் இழப்பு, அவர் ஆங்கிலத்தில் Irene Iddesleigh, Delina Delaney, Donald Dudley, Helen Huddleston, The Lusty Lawyer போன்ற நாவல்களையும் Fumes of Formation, Poems of Puncture ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் தன் மொழிக்குத்தான் கொடையாக வழங்க முடிந்தது-
"Sympathise with me, Indeed! Ah, no! Cast your sympathy on the chill waves of troubled waters; fling it on the oases of futurity; dash it against the rock of gossip; or better still, allow it to remain with the false and faithless bosom of buried scorn"
என்று பட்டையைக் கிளப்பும் விதமாக தனது Irene Iddesleigh என்ற நாவலைத் துவக்குகிறார் இந்த அடுக்குமொழி அம்மையார்.

இதில் என்ன கொடுமை என்றால் இவரது சமகாலத்தவர்களான J.R.R. Tolkien, C.S. Lewis போன்ற இலக்கிய மேதைகள் ஒன்று கூடி யாரால் கொஞ்சம் கூட சிரிக்காமல் நீண்ட நேரம் இவர் எழுதியதைப் படிக்க முடிகிறது என்று தங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வார்களாம். இன்று ஆங்கிலத்தில் வெளியானவற்றில் மட்டமான எழுத்து இவருடையதுதான் என்று கொண்டாடப்படுகிறது. என்ன கொடுமை இது சரவணன், என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லை? (இல்லையா?- எத்தனை நாளைக்குடா இந்தப் பழைய பட வசனத்தைப் பேசப் போறீங்கன்னு கேக்கத் தோணுதா, எனக்கும் அப்படிதான். ஆனால் என்ன செய்வது, என் நண்பர் ஒருவர், "அவப்போது தமிழ்த் திரைப்படங்களைத் தொட்டு எழுதினால்தான் நீ எழுதுவதைப் படிக்கிறவர்கள் ரசிப்பார்கள்" என்று சொல்லி இருக்கிறார்).

சிறந்த எழுத்தாளர் யார் என்று சொல்ல முடியாது- அது நானாகக்கூட இருக்கலாம் என்று நம்மில் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிகம் எழுதியவர் யார் என்று சொல்லி விடலாம், அதற்கு பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் போதும்.

அதற்கு முன் விரைவாக எழுதியவர்கள் யார் யார் என்று பார்த்தால் வியக்க வைக்கும் விஷயங்கள் வெளி வருகின்றன-

Mickey Spillane தனது I, the Jury என்ற நாவலை ஒன்பதே நாட்களில் எழுதி முடித்தாராம். அது மூன்று ஆண்டுகளில் ஏழு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாம். இவ்வளவு விரைவாக எழுதக்கூடிய அவர், எப்படி எழுதுவது என்று கவலைப்படுவார் என்கிறீர்கள்? ஒரு தடவை அவர் எழுதி வைத்திருந்த The Body Lovers என்ற நாவலின கைப்பிரதி காரோடு சேர்த்து திருட்டுப் போனபோது கொஞ்சம்கூட அசரவில்லை மனுஷன். "மூன்று நாட்கள் மெனக்கெட்டால் போதும், நாவலைத் திரும்ப எழுதி விடுவேன்- ஆனால் தொலைந்து போன கார் கிடைக்குமோ கிடைக்காதோ," என்றுதான் கவலைப்பட்டாராம்!

Mickey Spillane போன்ற குப்பை எழுத்தாளர்கள் எழுதிக் குவிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று மேதாவித்தனமாக நினைப்பீர்களேயானால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி- மூன்றே நாட்களில் எழுதிக் காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டு Alexander Dumas, Le Chevalier de Maison Rouge என்ற நாவலை எழுதி முடித்தார். "அவரும் குப்பைதான்," என்கிறீர்களா? எனக்குத் தெரியாதைய்யா, அவரது நாவல் ஒன்றை எனக்குப் பள்ளியில் உப பாடமாக வைத்திருந்தார்கள்.

Dumasக்கு உதவியது காப்பி- On the Road என்ற அதிநவீனத்தை எழுதிய Jack Kerouacக்கும் அதுதான் பெட்ரோலாக இருந்தது. ஒரே வேறுபாடு, அவர் அதில் Benzedrine குளிகைகளைக் கலந்தடித்தாராம்- தான் ஒரு தடவை எட்டே வாரங்களில் இருநூறு சிறுகதைகளை எழுதிக் குவித்ததாகப் பெருமை அடித்துக் கொள்கிறார் இவர்: அவற்றில் எத்தனை வெளியானது என்ற தகவல் இல்லை.

நிறைய பேர் அதிகமாக எழுதி இருக்கிறார்கள்- John Creasey 564 நாவல்கள் எழுதி இருக்கிறார் என்றால் சில எழுத்தாளர்களுக்கு ஒரு கல்ட் பிகராகவே இருந்த பிரஞ்சு எழுத்தாளர் Simenon 500 நாவல்களை எழுதியிருக்கிறார்: ராஜேஷ் குமார் எவ்வளவு எழுதி இருக்கிறார் என்று தெரியாது, ஆனால் நிச்சயம் அவர் நம்மூர் இலக்கியவாதிகளின் பட்டியலில் இருக்க மாட்டார். அதே மாதிரி Simenon தான் தன் வாழ்நாளில் ஆயிரம் இரவுப் பெண்டிரோடு சல்லாபித்திருந்ததாக ஒரு சாதனையைச் சொல்லிக் கொள்கிறார்- அந்த சாதனைக்கும் போட்டி போடக்கூடிய ஒரே தமிழ் எழுத்தாளர் யார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அடுத்தது, பெரிய நாவல்கள் என்று பார்த்தால் ஆங்கில நாவல் இலக்கியத்தின் முன்னோடியாக இருந்த Samuel Richardsonன் Clarissa ஒரு லட்சம் சொற்களைக் கொண்ட தலையணை. தமிழில் இது போன்ற நாவல்கள் வெளிவர வேண்டும் என்று இன்னமும் சொல்கிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கிப் படிக்க வாசகர்கள்தான் தயாராக் இல்லை.

ஆங்கில இலக்கியத்தில்- பதிப்பிக்கப்படுவன எல்லாம் இலக்கியம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால்- ஆரோக்கியமான நிலை இருக்கிறது. Stephen Kingன் The Stand என்ற நாவல் 4,64,216 சொற்களால் வடிவமைக்கப்பட்ட காவியம். தங்களில் யார் பெரிய எழுத்தாளர் என்று சண்டை போடுகிறவர்கள், தாங்கள் எழுதிய படைப்புகளைக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்ளலாம் என்று அனுமதித்தால் Stephen Kingஐ அடிக்க ஆள் கிடையாது- அவரது எதிரிகளால் இந்த காகித மலையோடு மோத முடியும் என்கிறீர்கள்? அவ்வளவு ஏன், இந்த நாவல் கை தவறி உங்கள் காலில் விழுந்தால் கதை கந்தல்தான்.

ஆனால் இதில் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. நம்ம ஊர் Vikram Sethன் The Suitable Boy 5,91,554 சொற்களைக் கொண்ட அரும்பெரும் காப்பியம். அதற்கு வாசகர்கள் தந்த மாபெரும் வரவேற்பின் விளைவு, தனது அடுத்த நாவலில் தான் எழுதுகிற நூறு சொற்களுக்கு மேல் இருக்கிற ஒவ்வொரு பத்தாயிரம் சொற்களுக்கும் ஒரு விரலை வெட்டித் தருவதாக Vikram Seth வாக்கு கொடுத்திருக்கிறார். இன்னமும் அவரது அடுத்த நாவல் வெளிவரவில்லை.

இதெல்லாம் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் சாதாரண எழுத்தாளர்கள் பற்றிய விபரம்தான். அசாதாரண எழுத்தாளர்கள் மூவர் பற்றிய குறிப்பு படித்தேன்- அது எனக்கு எழுதுபவர்களை விட எழுத்தின்மேல் பிரமிப்பு வரச் செய்தது-

Larry Eigner, Christy Brown இருவரும் Cerebral Palsyயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் லாரி ஐக்னர் வலது கை ஆட்காட்டிவிரல் கொண்டு தட்டச்சு யந்திரத்தைப் பயன்படுத்தி கவிதைகள் எழுதினாராம். அதிலும் இவரால் தொடர்ந்து தட்டச்சு செய்ய இயலாது என்பதால் விட்டு விட்டு விடாமுயற்சியோடு தட்டச்சு செய்து இந்த சாதனையைச் செய்திருக்கிறார். எழுத்து இவருக்கு வேள்விதான். இவரது கவிதைகள் L=A=N=G=U=A=G=E என்றக்கப்பட்ட கவிதை இயக்கம் பிறக்கக் காரணமாக இருந்தது என்கிறார் சதர்லன்ட். அப்படியானால் இவர் நல்ல கவிஞராகதான் இருந்திருக்க வேண்டும்.

கிறிஸ்டி ப்ரௌன் ஐந்தாவது வயது வரை மூளை வளர்ச்சி இல்லாதவராகவே வீட்டிலுள்ளவர்களால் நினைக்கப்பட்டார். ஒரு நல்ல நாளன்று தன் வீட்டில் கீழே கிடந்த சாக்குக் கட்டியை தனது இடது காலால் எடுத்து அகர முதல -"A" என்ற எழுத்து- எழுத முயன்றாராம். இவர்தான் பிறவி எழுத்தாளர், இல்லையா? இதைப் பார்த்தபின்தான் அவரது குடும்பத்தினர் இவர் குறித்த உண்மை நிலையை அறிந்தனர். எல்லா தாய்களையும் போலவே, தன் மகனின் திறமை மீது எதனாலும் குலையாத திட நம்பிக்கை வைத்து அவரது தாயார் அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தந்தார். எந்த பள்ளிக்கும் போகாமலேயே, சுயமாகப் பயின்று- அதிலும் சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களைப் படித்து எழுத்தாளரானார் இவர்.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இடது கால் பெருவிரலைக் கொண்டு தட்டச்சு செய்து இவர் எழுதிய சுயசரிதை, "மை லெப்ட் புட்"! அது விற்பனையில் சாதனைகள் செய்து அதன் பின் திரைப்படமாகி பாராட்டுகள் பல பெற்ற கதை உங்களுக்குத் தெரிந்த ஒன்றுதான்.



இது எல்லாவற்றையும் மிஞ்சும் சாதனை Jean-Dominique Bauby செய்தது. ஒரு பிரபல பாஷன் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்த அவர் ஒரு நன்னாளன்று முடக்கப்பட்டார். அன்று அவர் தன்னால் தனது உடலின் வலது கண்ணிமையைத் தவிர வேறு எந்த உறுப்பையும் அசைக்க இயலாத நிலையை அடைந்தார். அவரது உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்- அவர் தனது வலது கண்ணிமையை இமைப்பதன் மூலம் எந்த எழுத்தை எழுத வேண்டும் என்று டிக்டேட் செய்வார். இப்படி ஏறத்தாழ இரண்டு லட்சம் தடவை கண்ணடித்து இவர் எழுதிய Le Scaphandre et le Papillon என்ற சுயசரிதை The Diving Bell and the Butterfly என்ற அற்புதமான திரைப்படமாக வெளிவந்தது.



ஏன் எழுதுகிறோம்? ஏதோ ஒரு உந்துதல். நான் சிறந்த எழுத்தாளன், எனது எழுத்துகளுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்ற பெரும்புலவர்கள், காவியகர்த்தாக்களின் புலம்பல்களுக்கு அப்பால், எழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் இந்த உடற்கூட்டில் சிறை பிடிக்கப்பட்ட மனப்பறவையின் சங்கீதமாயிருக்கிறது. இன்றைக்கு பாருங்கள்: குழுமங்கள், பேஸ்புக், டிவிட்டர், வலைமனைகள் என்று எங்கெங்கும் எழுத்து இருப்பின் தனித்துவத்தைப் பாடியபடி உள்ளது.

இது சொற்களின் பொற்காலம், இல்லையா?